ஒவ்வொன்றாய் ஊதியணைத்துக்கொண்டு


ஏணிப் பொழுதுகளில்
இதயம் ஏற்றிவைத்த
பல்லாயிரம் கோடி தீபங்களை
ஒவ்வொன்றாய்
ஊதி அணைத்துக்கொண்டு
இருளின்
கறுத்த உதடுகள்

ஆளுமை அதிகரிப்பில்
இருளுக்கு இணை இருளே

ஒளியை
ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை

இருள் நஞ்சில்
இதயம்
எத்தனைதான்
புதைந்துபோனாலும்
விழிகளென்னவோ
வெளியேறத் துடிக்கும்
வெறியோடுதான்

அணைய மறுத்து
அல்லாடும்
அந்த ஒற்றைத் தீபமே
போதும் உயிருக்கு

மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
சாகாமல் கிடக்கும்
தன் உயிர்த் தேடல்களை
உணர்வுகளில் பூட்டிக்கொண்டு

கயிறெடுத்தான் உயிரெடுக்க


உயிரின்
முடிச்சவிழ்க்க
கயிறில்
முடிச்சிட்டான்

சாவைத் தேர்வு செய்ய
வாழ்வே விரட்டுகிறது

தேர்வுதானே
வாழ்க்கை

சாவென்பதும்
வாழ்வென்ற அறிதலோடுதான்
கயிறெடுத்தான் உயிரெடுக்க

இவனைத் தடுக்கும்
மார்க்கமுண்டா உங்களிடம்

பாவச் செயல்
கோழையின் வழி
அவசர முடிவு
சட்டப்படி குற்றம்
நம்பிக்கை வேண்டும்
என்றெல்லாம்
அளந்துகொண்டே போகாதீர்கள்

இதோ கரமென்று
உயிர் காக்காத பூமியில்
இதோ வாழ்க்கை என்று
கயிறு சொல்வதில் தவறில்லை

இருப்பினும்
கயிறெடுத்தவனிடம் கேட்க
என்னிடம் இருக்கிறது
ஒரே ஒரு கேள்வி

நிலம் மாற்றி நட்டாயா
உன் நாற்றுகளை?

பச்சை நிறக் கண்கள்


தம் நிழல்களை
இமைகளாய்க் கொண்ட
பச்சை நிறக் கண்கள்
மனிதநல மேன்மைதனைப்
பொழுதுக்கும்
பார்வையிட்டுக்கொண்டே
காடுகளாய்

தம் சுயநலமே
தாகமாய்க் கொண்ட
குருதிக் கரங்கள்
பச்சை விழி வேரறுக்க
பொழுதுக்கும்
சுற்றியலைந்துகொண்டே
மனிதர்களாய்

21 உயிர்ப்பு


முட்டைக்குள்
கண்மூடிக்கிடக்கும்
குஞ்சு

விதைக்குள்
இலையொட்டிவாழும்
தளிர்

நூலுக்குள்
சிறகு மடித்துறங்கும்
பம்பரம்

மொட்டுக்குள்
இதழ்பூட்டித் துயிலும்
மலர்

காகிதத்தில் எழுத்துப்பெறாமல்
மூச்சுவிடும்
கவிதை

கிழக்கில் வெளிச்சம்மடித்து
மல்லாந்திருக்கும்
சூரியன்

முழுமையற்ற இவையாவும்
வாழ்வெளியில்
அடுத்த கட்டம் தொடாமல்
அடையாளமற்றவைதான்

என்றாலும்...

ஆயுள் முழுவதும்
நினைத்து நினைத்து மீண்டும் புக
இதயத்தைத் துடிக்க வைக்கும்
அற்புத நிலைகள்தாம்
ஐயமே இல்லை

ஆயினும்
முயற்சியும்
முளைவிடும் வலியும்
அதில்வரும் வெற்றியும்தான்
உயிர்ப்பு உயிர்ப்பு உயிர்ப்பு

22 உயிரோடிருக்கலாம்



காதலி மடியில்
அரசியல் வனத்தில்
பக்திக் கடலில்
இலக்கிய வெளியில்
என்று
ஏதோ ஒன்றில்
எல்லாம் அழிய
செத்துப்போ

நாற்பதுக்குப்
பின்னும்
நீ
உயிரோடிருக்கலாம்

39 ஐநாவுக்கும் நைனா


ஐநா அல்ல
ஐயாயிரம் நா சுழன்றாலும்
வல்லரசின்
செவிகளுக்குள்
அழுகுரல்கள்
செல்லவே செல்லாது

ஐநான்னா
அமெரிக்காவுக்கு
அரையணாதான்

அமெரிக்காதான்
ஐநாவுக்கும்
நைனா

43 குடியரசு


இந்தியப் பொய்கையில்
அரசியல் எருமைகள்
நீராடுகின்றன
உரசிக்கொள்கின்றன
முட்டிக்கொள்கின்றன
வீழ்கின்றன எழுகின்றன
இடம்மாறுகின்றன
பாவம்
மக்கள் மீன்களோ
சகதியைச் சுவாசிக்கின்றன

40 என்னோடு பேசாதே


என்னோடு கொஞ்சம்
பேசாமலிருக்க மாட்டாயா?

நான் இந்தத்
தத்துவஞானியின்
உரையைக் கேட்க வேண்டும்
தயவுசெய்து தொல்லை செய்யாதே
அப்படி ஓர் ஓரமாய் ஒதுங்கி நில்

நீ சொல்வதைத்தான்
நான் எப்போதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறேனே

முக்கியத்தர்களோடு நான்
மூச்சுமுட்ட உரையாடும்போதும்
நரைமுடியைப்போல் நீ
நடுவில் வந்து நிற்கவேண்டுமா

ஏன் அவ்வப்போது
என்னை வேரோடு திருடிக்கொண்டு
நான் சபையில் நிற்கையிலும்
அசிங்கப்படுத்திவிடுகிறாய்

நீ யார்
என் மனதின் நிழலா
அல்லது
மனது ஒளித்துவைத்திருக்கும்
மந்திர மனதா

அவசரத் தேவையில்
நான் அல்லாடும்போது
ஒருநாளும் நீ உடனடி முடிவோடு
என்னிடம் வருவதில்லை

ஆனால்
நான் செய்த தவறை
சகல சாட்சியங்களோடும்
சொல்லிச் சொல்லி என் தலையில்
கொள்ளிவைக்க மட்டும்
முழுச் சக்தியோடு வந்து
நெற்றிப் பொட்டு மேடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகிறாய்

ஏன் என்னோடு பல நேரங்களில்
பாரபட்சமே இல்லாமல்
முரண்படுகிறாய்

நடந்து முடிந்ததற்கு
நமக்குள் ஒரு வழக்கு தேவையா

என்னைக் குற்றவாளியாக்கி
கூனிக்குறுகச் செய்து
நீ சாதிப்பதுதான் என்ன?

இன்னொரு குரலால்
மறுபரிசீலனைச்
சிந்தனை தொடுக்கும்
நீ என் பலமா

தொட்டதை முடிக்கவிடாமல்
முடித்ததில் திருப்தி தராமல்
அலைக்கழிக்கும் நீ என்
பலகீனமா

என் வெற்றியும் நீ
தோல்வியும் நீதானா?

உள்ளுக்குள் உட்கார்ந்து
நிரந்தர ஆட்சி செய்யும்
என் அதிசயமே

உன்னால்தான்
நான் தனிமைப் பட்டாலும்
அந்தத் தனிமையைச் சுமக்கத் தெம்பற்று
செத்துச் சுடுகாடாகிப்போய்விடாமல்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

புலம்பல் ஓர் புண்ணிய நதி


தானே
தனக்காக இசைக்கும்
கண்ணீர்த் தாலாட்டு

மாண்ட மனத்தை
மடியில் கிடத்திக்கொண்டு
மிச்ச மனம்
உதட்டு வாத்தியத்தில்
உயிரைப் பிழிந்து வைக்கும்
ஒப்பாரி

ஆயினும்
புலம்பல் ஓர்
புண்ணிய நதி

அதில் நீராடும்போது
பரிதவித்துப் படபடக்கும்
உயிர்ச் சருகையும்
தீண்ட வழியற்று
கரைகளில்தான்
காத்துக்கிடக்கிறது
மரணத் தீப்பந்தம்

முரண்பட்டுக்கொண்டே


பொன்னாடை போத்தி
கட்டித் தழுவுகின்றனர்
பொழுதுக்கும்

அவர்களோடு
முரண்பட்டுக்கொண்டே
இருக்கும்
எனக்கு

உப்புச் சிறகுகள்
படபடக்க
சங்கடத்தோடு
என் விழிகள்
உள்ளுக்குள்
முகம்பொத்தி
அடித்துக்கொள்கின்றன

என்றாலும்
முரண்படும் நிலைதானே
வெளிச்சவேர் பரப்பி
கிளைவிட்டுத் துளிர்க்கிறது
கவிதையாய்
புரட்சியாய்
வளர்ச்சியாய்...

மெய்ப்பொருள்


வாழ்க்கைக் கவிதைக்குப்
பொருள் விளங்காப்
பொழுதுகளில்
படித்துப்படித்துப்
பெருமகிழ்வு

பொருள் புரிந்த
பிற்பொழுதுகளில்
சுக்கல் சுக்கலாய்க்
கிழித்தெறிய
விழைவு

வாழ்வுக் குமிழைக்
கிழித்ததும்
விளைந்த பொருள்
கண்டு
அமைதியின் கர்ப்பத்தில்
தரிப்பு

வளைகுடா இருட்டில்...


இருட்டில்
உன் நிழல்தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

ஒவ்வொரு முறையும்
விழிகளில் அடர்த்தியாய்ப்
பூக்கும் கனவுகள்
வந்து சூழும் வரண்ட
பொழுதுகளால்
கருகிக் கருகி உதிர
மிச்சத்தையேனும்
காப்பாற்ற வேண்டுமே
என்ற அச்சத்தில்
அவசர அவசரமாய்
ஓடி வந்தாய்

அன்பும் பாசமும் கூட
விலைப்பட்டியலில்
இடம்பெற்றபின்
காசுதானே இந்தப் பிரபஞ்சம்
என்று உணர்ந்த பின்
அவசர அவசரமாய்
ஓடிவந்தாய்

இன்றோ
இந்த வளைகுடா இருட்டில்
எது இருந்தும்
எது இல்லாவிட்டாலும்
காலைச் சுற்றிக்கிடந்த
உன் நிழல் தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

33 யாரோ ஒருவன்


வானம் உடைக்கும் உளியோடு
இந்த வையம் பிளக்கும் வாளோடு
யாரோ ஒருவன் வருகின்றான்
அவன் எழுதும்போதே வாழ்கின்றான்

வாழ்த்த வயதில்லை


வாழ்த்துவதற்கு
வயது வேண்டாம்
நல்ல இதயம்தான்
வேண்டும்

பிஞ்சு மழலை
ஒரு முத்தமிட்டு
தன்
தாத்தாவை
வாழ்த்துகிறது

நேற்றே
முளைத்த புல்
தன் இதழ் விரித்து
மழையை
உயிராக வாழ்த்துகிறது

வாழிய நற்றமிழ் என்று
மழலைகள் பள்ளியில்
தமிழன்னையையே
வாழ்த்துகின்றன

வாழ்த்துவோம்
அதுதான்
நம் மனித மன
உச்சியில்
மகுடம் சூட்டி
நம்மை
மனிதராக்கி
உயர்த்துகிறது
எங்கள் ஊர்ப் பொங்கல்

ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்

அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
அம்மா வென்ற கதறலோடு
சாம்பல் நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்

எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்

சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நான் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை

வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாச மோகம் எழும்ப

வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்

முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்

இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை

தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்

பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது
பொங்கல்
சூப்பர் ஸ்டார் சுஜாதா

ஒவ்வொரு விரலும்
எழுத்தாணியாக
பத்து விரல்களாலும்
எழுதியவர் சுஜாதா

கணினிக்குள்
சிப்புகளாகவே ஆகிப்போக
இளைஞர்களை
உசுப்பிவிட்டவர் சுஜாதா

நவீனத்தின் மடிகளில்
தமிழைத் தாலாட்டியவர்
சுஜாதா

தமிழின்
மரபுகளையும் விசாரித்து
தொல்லிலக்கியங்களிலும்
தோய்ந்தவர் சுஜாதா

தமிழ்த் திரைப்படங்களில்
ஹாலிவுட் மின்னல்கள்
தெறிக்கச்செய்தவர் சுஜாதா

நகைச்சுவைகளுக்கும்
அறிவுப்பொறிகளுக்கும்
தையலிடாமலேயே
நெய்து வென்றவர் சுஜாதா

அவதூறு விமரிசங்களுக்கும்
அளவோடு மறுமொழி
தந்தவர் சுஜாதா

இருபது வயது
இளைஞனோடும்
இளமைதுள்ள
தோள் சேர்ந்தவர் சுஜாதா

சிற்றிதழ்களிலும்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா

இணையத்திலும்
அச்சுக்களிலும்
இணையாக உலாவந்த
முதல் எழுத்தாளர் சுஜாதா

தன் நாள்
நெருங்கி வருவதை
அறிந்தவராகவும்
அதை நமக்கெலாம்
அறியத்தந்தவராகவும்
இருந்தார் சுஜாதா

பலகோடி தமிழர்களின்
கண்ணீர் அஞ்சலிகளால்
அவர் வழியனுப்பப்படுவார்
என்றும் அறிந்திருந்தார்
சுஜாதா

பிறந்தநாள் மே 3, 1935 - நினைவுநாள் பிப் 27, 2008

என் வலைப்பூவில் வந்து விழுந்த சில இரங்கல்கள்

a.muttulingam said...
அன்புள்ள நண்பரே,
உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர்.

உண்மையிலும் உண்மை.

It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.

anbudan
a.muttulingam
துளசி கோபால்,

ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.


என்று ஜெயமோகன் தன் அஞ்சலியில் கூறியிருக்கிறார்.
துளசி கோபால் said...
நன்றி புகாரி. நானும் ஜெ.மோ.வின் பதிவைப் படிச்சேன்.

மனுஷ்யபுத்திரனை 'வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது சுஜாதா'ன்னு அதுலே தெரிஞ்சது. இது ஒரு புதிய தகவல்தான் எனக்கு.

மரணம் இயற்கையான நிகழ்வுன்னாலும்.......மனசு தாங்கலை.
துளசி கோபால் said...
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
Sakthi Sakthithasan said...
அன்புநிறை புகாரி,

அழும்போதும் உங்கள் கவிதையின்
அழகுடன் சேர்ந்து கண்ணீர் சொட்டுகிறது
இதைத்தவிர சுஜாதா அவர்களுக்கு
என்ன அஞ்சலி செய்துவிட முடியும்

துயருடன்
சக்தி
சேதுக்கரசி said...
சுஜாதாவைப் பற்றி நல்ல குறிப்பு... ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன் புகாரி said...
எதிர்பார்த்துத்தான் இருந்தோம் இருந்தாலும் மனசு தாங்கல என்று சொல்லுங்கள் துளசி கோபால்
அன்புடன் புகாரி said...
கவிதையாக எழுதவில்லை, மரண ஊர்வலத்தில் என் உடன்வரும் நண்பரிடம் பேசிக்கொண்டு செல்வதுபோல் நினைவு கூர்ந்திருக்கிறேன் சக்தி
cheena (சீனா) said...
மனம் கலங்குகிறது - சுஜாதா என்ற எழுத்தின் இமயம் சரிந்தது. மரணம் என்பது வரத்தான் செய்யும். 1970 களிலிருந்து நைலான் கயிறு, வானமென்னும் வீதியிலே ஆரம்பித்து ........ அததனை கதைகளையும் விடாமல் படித்தவன் நான். இரங்கற் செய்தி கூட எழுதுவதற்கு கை மறுக்கிறது. நம்ப முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
John Peter Benedict said...
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
Iqbal said...
சுஜாதாவின்
மெய்யெழுத்து மறைந்தது
ஆயினும் அவரின்
உயிரெழுத்து மறையாது

வாழ்வில் இறப்பதிலும்
சுஜாதாபோல் மரணத்தில் வாழ
விருப்பம்

இக்பால்
மதுரை சொக்கன் said...
//சிற்றிதழ்களிலும்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா//
உண்மைதான்.இது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்? இதுவே அவர் இலக்கியத் திறமைக்கு அத்தாட்சி.
அவர் குடும்பத்தாருக்கும் அவரை அறிந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
a.muttulingam said...
அன்புள்ள நண்பரே,
உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர்.

உண்மையிலும் உண்மை.

It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.

anbudan
a.muttulingam
prabu KUMARAN said...
தமிழ் எழுத்துலகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும்,விஞ்ஞானத்துறைக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு திரு.சுஜாதாவின் மறைவு. உடலால் மறைந்தாலும் தன் எழுத்துக்களாலும்,சிந்தனைகளாலும்,சாதனைகளாலும் நம்மோடு என்றும் இருப்பார் திரு.சுஜாதா. அவரது மறைவிற்கு இதய அஞ்சலிகள்.
த‌.பிரபு குமரன்.
Pon Santhar said...
73 வயது இளைஞர் மறைந்து விட்டார்..மரணத்தை எதிர் பார்த்தே இருந்தார்...."கற்றதும் பெற்றதும்" - அவர் அனுபவங்கள்...
புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது அவரால்தான்...

அவர் புகழ் என்றும் மறையாது....

பொன்சந்தர்
Siva said...
இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை..அவரின் "சிறீரங்கத்து தேவதைகள்" புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒருவகையில் நான் எழுதிக் கொண்டிருக்கும் "நானும் என் தேவதைகளும்" தொடர்ருக்கான தாக்கம் அதிலிருந்து தான் கிடைத்தது. ஒரு நல்ல எழுத்தாளரை நாம் இழந்து விட்டோம்.. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி

அன்புடன்
சிவா...
Gokulan Anantharaja said...
அருமை புகாரி. பல வரிகளில் சொல்ல வேணடியதை சில வரிகளிலேயே சொல்லி விட்டீர்கள். நானும் எனது பதிவில் பதிவிட்டிருக்கிறேன். ஏதோ.. ஒரு பெரிய்ய்..ய எழுத்தாளரிற்கான சிறிய்ய்..ய அஞ்சலி.
Girija Manaalan said...
அவர் எழுத்துக்களை நேசித்த ஒவ்வொரு வாசகனின் சோகத்தையும், அவரைத் தம் எழுத்துலக வழிகாட்டியாக ஏற்று இன்று அவர் பிரிவால் வருந்தும் எண்ணற்ற படைப்பாளர்களின் சோக த்தையும் அப்படியே உங்கள் இரங்கற் கவிதையில் வடித்துள்ளீர்கள்.
இனி சுஜாதா தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் வாழ்வார்! அந்த எழுத்துலக மாமேதைக்கு எங்கள் திருச்சி மாவட்ட படைப்பாளர் சங்க உறுப்பினர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
சேதுக்கரசி said...
sujathalogy.com தளத்தில் அஞ்சலி செலுத்தலாம்.
P. Kanagasabapathy said...
Thank you very much. My son and I are ardent readers of Sujatha. He has more than 25 of his books. Infact he was the one to call me yesterday morning and inform me about his demise. He felt as if he has lost a member of the family. I will be writing about Sujatha in Uthayan.

P. Kanagasabapathy
Anonymous said...
Sujatha was part of my growing up. His writing encouraged me to read more and read a wide variety of books.

I simply assumed that stars like Sujatha live forever and it struck me hard to realize otherwise! 73 is a young age and it is a great loss for us to see him go.

Ravi Chandran
அன்புடன் புகாரி said...
உண்மைதான் கனகசபாபதி மாஸ்டர்,

வயது வித்தியாசமில்லாமல் இளையோரும் முதியோரும் அஞ்சலி செழுத்த வந்து நிற்கிறார்கள் சுஜாதாவுக்கு!
P.Velmurugan said...
I read out ur new poetry in thinnai .com - topic on " super star sujatha" on 5th march2008

It Very nice
Touch of my heart.

success ur field

god with u

Thank u

P.Velmurugan
head, dept. of tamil lit.(UG/PG)
N G M College
pollachi- 642001

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன


நான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்


கண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன

எல்லாம் உதிர்ந்துபோக
எஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே
மொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல
நிற்கிறேன் நான் இந்த மேடையில்

ஒரே நாளில் சட்டென்று வந்த துக்கமல்ல இது
சிறுகச் சிறுக என் இதய உண்டியலில்
கண்ணீர் கண்ணீர் என்று விழுந்து... சேமித்துக்கொண்ட துக்கம்

சட்டென்று இன்று... ஓர் இடிமழையாய்க் கொட்டியபோது
எதிர்பார்த்ததுதான் என்றாலும்... முற்றுப் பெறாத சிக்கல் வந்து
நகர மறுக்கும் வீம்போடு.... மூச்சுக்குழாய்களில் சிக்கிக்கொண்டது

என் அன்பிற்கினிய ஐயா....
பாதியாய்க் குறைந்துபோன மேனியோடு நீங்களிருக்க
இரட்டிப்பாய் விரிந்துபோன விழிகளோடு நான் பார்த்தேன்
உங்களை என் புத்தக வெளியீட்டு விழாவில்

என்னய்யா இப்படி என்றேன்
என் ஆச்சரியம் நெற்றிப் பொட்டில் முட்டிமோத

ஆமாம் புகாரி... கொஞ்சம் உடல்நலமில்லை
மருந்துண்பதால் இப்படி... விரைவில் மாறிப்போகும் என்று
கவலைகளின் பெரும் பள்ளத்தாக்கை
தவறியும் தளராத.... வார்த்தைத் திரைகளால் மூடி மறைத்தீர்கள்

ஆனால்.... உன்னைக் காணத்தான் வந்தேன் புகாரி என்று
உங்கள் விழிகள் என்னைத் தேடித் தேடித் தேடி முத்தமிட்டன

இங்கிருக்க வேண்டாம் வாருங்கள் என்று
மேடைக்கு அழைத்துவந்து அமரவைத்தேன்
எப்போதும் நான் உங்களுக்குத்தரும் மரியாதை... அன்று....
இரட்டிப்பாய் உயர்ந்ததை என் ஒவ்வொரு செல்களிலும் உணந்தேன்

"புகாரியின் விழாவிற்கு வந்தே தீருவேன் என்று
வம்பு செய்து வந்திருக்கிறார் அண்ணே" என்று... செய்தி தந்தார் செந்தி

நான் காணாத நேரம்பார்த்து
மேடையை விட்டுப் போய்விட்டீர்கள் ஐயா
நான் விட்டுவிட்டேன்

நான் காணாத நேரம்பார்த்து
மண்ணையும் விட்டுப் போய்விட்டீர்களே ஐயா
எப்படியய்யா விடமுடியும்?

அன்று மேடையை விட்டு விடைபெற்றதும்
இன்று மண்ணையே விட்டு விடைபெற்றதும்
உங்களுக்கு உங்களின் சங்கடம் போக்கும்
சௌகரியமானமான காரியங்கள்தாம்

எப்படித்தான் மனதைத் தேற்றித் தேற்றிப் பார்த்தாலும்
எங்களுக்கோ சங்கடமொன்றையே தருவதாகவே இருக்கிறதே ஐயா

நான் தமிழ்ப்பற்று மிக்க பலரை
அவ்வப்போது என் வாழ்வில் கண்டிருக்கிறேன்
தமிழாகவே நிற்கும் உங்களைப்போல் நான் அதிகம் கண்டதில்லை

என் மேடைகளை விட்டிறங்கி மெல்லிய குரலில்
நான் உங்களிடம் அவ்வப்போது கேட்பேன்
எப்படி ஐயா என் பேச்சு என்று

உள்ளன்போடு பாராட்டிவிட்டு... உரிமையோடு ஒரு முறை சொன்னீர்கள்
கவிதைகள் வாசிக்கும் போதுமட்டும்
இன்னும் கொஞ்சம் உரத்து வாசியுங்களேன் என்று

இன்றும் உங்கள் சொல் கேட்கவே நான் விரும்புகிறேன் ஐயா
ஆனால் இயலவில்லையே... எனக்கு இயலவில்லையே...

மேலுலகம் என்றொன்றிந்தால்... வள்ளுவர் காத்திருப்பார் அங்கே
"கேட்டது.... உன் குரலில் என் குறள்"
என்று உங்களை.... வாரியணைத்து நன்றி சொல்ல

நான் கவிஞன்தான் ஐயா....
ஆனால்.... நானிங்கே வாசிப்பது கவிதையல்ல

இன்று... வாழும் வாய்ப்பிருக்கும் எனக்கு
அன்பும் அறிவும் பொங்கும் உங்கள் திருமுகத்தை
ஆறுதலாய்க் காண.... ஓடி வருகின்ற வாய்ப்பு அமைந்தது

அதைக் கண்டு வலுவிழந்து துடிக்கும் இதயத்தின்
புலம்பல்களை இறக்கிவைக்காமல்... நான் எங்கே போகமுடியும்?

அழுவோன் எவனும் என்னை அணுகாதே என்ற வைராக்கிய உள்ளத்தோடு
தெரிந்துபோன மரணத்தை உங்களின் சுண்டுவிரலால்
சுண்டிச் சுண்டி நகைத்த மன உரம் உங்களுக்கே வரும்

புகாரி... பதினைந்து தினங்களில்
நான் இந்த மருத்துவமனை விட்டு வீடுவருவேன்
நாம் ஆற அமர அமர்ந்து தமிழ் பேசுவோம் என்றீர்களே ஐயா
......எந்த வீட்டைச் சொன்னீர்கள்?

சாவு ஒன்றும் புதியதில்லைதான்
இந்த உலகின் எத்தனையோ மனிதர்கள்
பிறக்கிறார்கள் தினம் தினம்.... இறக்கிறார்கள் தினம் தினம்...

இறந்தும் பிறக்கும் ஜீவ உயிர் கொண்ட தமிழறிஞர் நீங்கள்
.....உங்களுக்கு ஏது மரணம்?

என்னில்... எழில் தமிழில்... தமிழர்தம் நெஞ்சில்....
என்றும் என்றும் என்றென்றும்
வாழ்வீர் வாழ்வீர் வாழ்வீர் ஐயா

நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்து


சொல்ல இனித்தால்தான் சொல்
உண்மைதான் - ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம்
உண்மைதான் - ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

அல்லி பூத்தால்தான் அழகு
உண்மைதான் - ஆயினும்
அலையலையாய் விரிந்தாலும்
அது அழகுதானே

கல்லை உடைத்தால்தான் சிலை
உண்மைதன் - ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே

முல்லை மலர்ந்தால்தான் வாசம்
உண்மைதான் - ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே

உள்ளம் இணைந்தால்தான் உறவு
உண்மைதான் - ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே

வள்ளல் கொடுத்தால்தான் கொடை
உண்மைதான் - ஆயினும்
வார்தையால் அணைத்தாலும்
அது கொடைதானே

0

இல்லை உனக்குவோர் பரிசு
உண்மைதான் - ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
எல்லாமும் எல்லாமும்
இனிதாக இசையாக

நல்லோர்கள் புடைசூழ
நாற்திசையும் தமிழ்மணக்க
நடைபோடு நடைபோடு
நல்லதமிழ் மகனாக

சொல்லில்லை சொல்லில்லை
நெஞ்சத்தின் கவிசொல்ல
சொல்லாமல் போனாலும்
சுவையன்றோ நட்புறவில்

உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன்
ஓவியமாய்க் காவியமாய்
வாழ்வாங்கு வாழ்கவாழ்க

ஆயுளென்று நூறிருந்தால்
அதுவொன்றே பெரும்பேறு
அடடாவோ நீயதிலே
அரைவாசி வென்றுவிட்டாய்

தாயுள்ளம் தானுனக்குத்
துயர்கண்டு துடிக்கின்றாய்
தங்கத்தால் சொல்லெடுத்துத்
தரணியையே அணைக்கின்றாய்

வாயாரப் புகழ்ந்தாலும்
விடுபட்டுப் போகுதய்யா
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்க

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

தமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்


கனடா டொராண்டோவில் ஜிம் கரிஜியானிஸ் என்ற அமைச்சர் தமிழர்களின்பால் மரியாதை கொண்டிருந்தார். தமிழனின் ஆதரவை அவர் நாடினார். அவரின் ஆதரவைத் தமிழன் நாடினான். இருவரும் கைகுலுக்கிக்கொண்டதன் விளைவாக அவருக்கு ஒரு விழா எடுத்த ஓர் தமிழ்மாலைப் பொழுதில் அவருக்கு நான் சூட்டிய நன்றி மாலை


நம் தமிழர்வானில் ஜிம் கரிஜியானிஸ்

தேர் கேட்டா
புறப்பட்டான் தமிழன்
ஊர் விட்டான்
நீரும் வேரும் அற்று
உயிர் வாடும்
முல்லைக் கொடியானான்

வம்பால் விரட்டப்பட்டு
ஒரு கொம்புக்காய்த்தான்
துடி துடித்தான்
அடடா
தேரல்லவா தந்தது நம் கனடா

தேம்பியழும் விழிகளில்
ஒரு பழைய போர்வையைத்தான்
கேட்டான் தமிழன்

மாளிகையின் மத்தியில்
ஓராயிரம்
தங்க நாற்காலிகளையல்லவா
போட்டுத்தந்தது நம் கனடா

உயிர் துறப்பான் தமிழன்
ஆனால் தன் மொழி துறப்பானா
மொழி துறந்தால் அவன் ஒரு
தமிழன்தானா

மொழியின் மேடைகளில்தானே
தமிழனின் கர்வம்
விண்ணளந்து நிற்கிறது
அவன் பண்பாடு
தலைநிமிர்ந்து வாழ்கிறது

ஊர்விட்டால் என்ன
மொழிவிடாத வரை
தமிழன் என்றென்றும்
ராஜ சிம்மாசனத்தில்தான்

O

நம் தமிழர்வானில் - திரு
ஜிம் கரிஜியானிஸ்

இந்தப் பெயரை உச்சரிக்கும் போதே
நமக்குள் நன்றியின் நாளங்கள் நிமிர்கின்றன

யார் இவர்?

கற்றையாய் ஒரு கறுப்பு மீசை வைத்துவிட்டால்
இவர் நம் கட்டபொம்மன் ஆகிவிடுவாரோ
என்றுகூட நான் ஐயப்படுகிறேன்

இவர் இன்று தமிழனுக்குச் செய்யும் தொண்டு
சரித்திரத்தில் சில கோடுகளையாவது
கிழித்துவிடும் என்பதில்
எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது

தமிழன்கூட மறந்துபோகிறான்
ஒரு தமிழ் விழாவுக்கு வருவதற்கு
இந்தத் தமிழ் நேசனோ
ஒருபோதும் மறப்பதில்லை

இந்த வெள்ளையர் மனதின்
உள்ளுக்குள்ளும் வெள்ளை

இவர் ஓரிரு வார்த்தைகளை
மழலைத் தமிழில் மொழியும்போது
தமிழ் ஒரு தங்கப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்து மின்னுவதையும்
பூரித்துச் சிரிப்பதையும்
தமிழரின் கண்களும் காதுகளும்
பார்க்கவும் கேட்கவும் தவறுவதில்லை

ஆம்
தமிழ் அப்படித்தான்
அறியாதவன் பேசும்போதும்
அழகோடு அவன் நாவினில்
நர்த்தனம் ஆடி செங்கோல் ஊன்றும்
கேட்போரின் செவிகளில்
தேன் வாரி இறைக்கும்

வண்ணம் வேறானாலும்
தமிழன் முன்னேற்றத்தில் கொண்ட
எண்ணம் உயர்வான ஜிம் கரிஜியானிஸ்

நம் தமிழர் வானில் - திரு
ஜிம் கரிஜி யானிஸ்
விண் வளரும் நட்பால் - தமிழ்
இன் அகமும் தேனில்
கண் விரியும் தொண்டு - தினம்
என் மனமும் கண்டு
நல் இதயம் வாழ - பசும்
பொன் இனிய வாழ்த்து

நான் இக்கவிதையின்
ஒரு வார்த்தையைக் கூட
உன் மொழிக்கு மாற்றப் போவதில்லை

ஏன் தெரியுமா?

கவிதை என்பது
உணர்வுகளின் உற்சவம்
நீயதை
இந்நேரம் உணர்ந்திருப்பாய்
உணர்வுகளுக்கு ஏது மொழி

பிறகு
நான் ஏன் மொழிமாற்றவேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
உயர்ந்தோங்குக தமிழர்களின்
நன்றி உணர்வுகள்

கவிநாயகர் வி கந்தவனம்


டொராண்டோ தமிழரங்கம் விழாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்களை அறிமுகம் செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை நான் இப்படிச் செய்தேன்


நீறு நீக்கி
நிலம் பெயர்ந்த நெஞ்சுக்குள்
அழகு தமிழ் நெருப்பு கூட்டி
அணையுடைத்த கன்னிக் காவிரிபோல்
கனடியத் தமிழ் மனக் கரைகளில்
இனிப்பாய்க் குதித்தோடும்
தமிழரங்கத்துக்கும்

போற்றிப் பாதுகாக்கும் பொக்கிசமாய்ப்
புலம்பெயர்ந்த மண்ணிலும் - கவி
வளம்பெயர்த்துக் கொண்டுவந்து
வற்றாது என்றென்றும் கொட்டும்
கவிநாயகர் கந்தவனம் அவர்களுக்கும்

ஏனைய தமிழ் நெஞ்சங்களுக்கும்
என் பிஞ்சு மாலை வணக்கங்கள்


கவிநாயகர் வி. கந்தவனம்

எழுபத்தோரு வயது இளைஞர்
ஈழமண் பெற்றெடுத்தக் கவிஞர்

சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி
பலநூறு கவியரங்கங்களுக்குத் தலைமை ஏற்று
தாக இதயங்களில் தமிழ்த்தேன் இட்ட மாரி

ஆசிரியராய்த் துவங்கி அதிபராய் வளர்ந்தவர்
அயல்நாட்டுக் கூடங்களிலும் நற்கல்வி வழங்கியவர்

கவிதை நூல் கதை நூல்கள் மட்டுமல்ல்
பாடநூலும் பயிற்சி நூலும் வெளியிட்ட பெருமைக்குரியவர்

எண்பத்தெட்டில் கனடா வந்தபின் மட்டுமே இவர்
இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார்

கனடாவில் அதிகம் தமிழ்நூல் வெளியிட்ட
முதல் தமிழர் இவரே
இதனால் கனடியத் தமிழீழ
இலக்கியத் தந்தையென்றும்
கவியரங்குக்கோர் கந்தவனம் என்றும்
பாராட்டப்பட்டவர்

இதுவரை வெளியான நூல்களின் எண்ணிக்கையே
நாற்பதைத் தொடும்
நல்லூர் நாற்பது என்ற இவரின் பக்தி நூல்
பலர் வீடுகளில் ஓதப்படும்
இருந்தும் இவர் எளிமை ஒன்றையே தொட்டு வாழும்
இனிய பண்பாளர்.

வண்ண வண்ணமாய் உன் எண்ணஅருவி
வென்றுகுவித்த கவி கொஞ்சமல்லவே
மண்ணும் விண்ணும்பார் நீ மதுரகவி
மணிவிழாவும் கண்ட மகுடபதி

கன்னித் தமிழால் கவி நாயகமே
கனடாவின் தேச கீதமுமே
கண்டு கொடுத்தாய் புகழ் அள்ளியெடுத்தாய்
கன்னல் மொழியே நீ வாழியவே

ஆம், கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் அதன் இசை மாறாமல்
ஆக்கித்தந்த வித்தகர் இவர்தான்

பல இலக்கிய வட்டங்களை உருவாக்கித் தந்தவர்
வாழ்நாளெல்லாம் எதோ ஓர் அமைப்பின் தலைவராய்
சளைக்காமல் பணியாற்றிவருகிறார்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் இவர்
தற்போது மேற்குலக கவிஞர் கழகத்தை உருவாக்கி இருக்கிறார்

கலை, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, சைவ சமயம்
ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாளர்

ஆங்கிலத்திலும் கவிதை கதைகளை
இவர் விட்டு வைக்கவில்லை
இவரின் கவிதை ஒன்றுக்கு
Editor's Award கிடைத்துள்ளது
இவரது ஆங்கிலக் கவிதைகளை
The National Library of Poetry வெளியிட்டுள்ளது

இவரது 12 short stories, Lasting Light- என்னும் இரு நூல்களை
உயர் வகுப்புகளில் உபபாடங்களாகப் பயன்படுத்தலாம் எனக்
கனடிய பாடவிதான சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவரது இலக்கிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள
உலகப் பல்கலைக் கழகம் 2001ல்
டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது


அருங்கலைகள் ஆயிரம் வளர்க்கும்
இவரே ஓர் பல்கலைக் கழகம்
கரும்பிற்கு இனிப்பு வழங்குவதாய்
மதுரகவிக்குக் கலாநிதி பட்டம்


இனி இந்தத் தேன்மழை நம்மீது பொழியட்டும்
தாகச் சிற்றோடையாய் அதை ஏந்திக்கொள்ள
நான் என் ஆவல் மணல்களோடு அமர்கிறேன்


தங்கரதமே தமிழ்ச் சங்கமணமே
சிங்கநடையே குளிர்த் திங்களகமே
சங்குநயமே புதுச் சந்தமொழியே
கங்குமலரே கவிக் கந்தவனமே


அன்புடன் வருக வருக
உங்கள் கவிதை அனுபவங்களால்
இந்தத் தமிழரங்க இதயங்கள்
நிறைக நிறைக