நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்து


சொல்ல இனித்தால்தான் சொல்
உண்மைதான் - ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம்
உண்மைதான் - ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

அல்லி பூத்தால்தான் அழகு
உண்மைதான் - ஆயினும்
அலையலையாய் விரிந்தாலும்
அது அழகுதானே

கல்லை உடைத்தால்தான் சிலை
உண்மைதன் - ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே

முல்லை மலர்ந்தால்தான் வாசம்
உண்மைதான் - ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே

உள்ளம் இணைந்தால்தான் உறவு
உண்மைதான் - ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே

வள்ளல் கொடுத்தால்தான் கொடை
உண்மைதான் - ஆயினும்
வார்தையால் அணைத்தாலும்
அது கொடைதானே

0

இல்லை உனக்குவோர் பரிசு
உண்மைதான் - ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
எல்லாமும் எல்லாமும்
இனிதாக இசையாக

நல்லோர்கள் புடைசூழ
நாற்திசையும் தமிழ்மணக்க
நடைபோடு நடைபோடு
நல்லதமிழ் மகனாக

சொல்லில்லை சொல்லில்லை
நெஞ்சத்தின் கவிசொல்ல
சொல்லாமல் போனாலும்
சுவையன்றோ நட்புறவில்

உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன்
ஓவியமாய்க் காவியமாய்
வாழ்வாங்கு வாழ்கவாழ்க

ஆயுளென்று நூறிருந்தால்
அதுவொன்றே பெரும்பேறு
அடடாவோ நீயதிலே
அரைவாசி வென்றுவிட்டாய்

தாயுள்ளம் தானுனக்குத்
துயர்கண்டு துடிக்கின்றாய்
தங்கத்தால் சொல்லெடுத்துத்
தரணியையே அணைக்கின்றாய்

வாயாரப் புகழ்ந்தாலும்
விடுபட்டுப் போகுதய்யா
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்க

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

2 comments:

Anonymous said...

புகாரி,

வாழ்த்துக் கவிதை வளம் கொழிக்கின்றது.
சொல்லுக்கும் கருத்துக்கும் சுவை கூட்ட
செந்தமிழின் துணை தானே சிறந்து நிற்கும்.

வாழ்க !! வளர்க !!

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

Begum said...

அன்பு ஆசான்
ஒரு நன்பனுக்கு இதை விட வேறு என்ன பரிசைக் கொடுத்து விட முடியும்?
உங்கள் நண்பன் பாக்கியசாலியே.

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து
இந்த 3 வரிகளும் எத்தனை கோடி வாழ்த்துக்களை எடுத்தியம்புது.

சொல்ல இனித்தால்தான் சொல்
உண்மைதான் - ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம்
உண்மைதான் - ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

பிடிச்சிருக்கு இந்த வசனங்கள்.

அன்புடன் ஆயிஷா