புகலிடம்

கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே நாலரை மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு.

வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம் இதற்குத்தான் சொந்தம். ஆனால் சுமார் 31 மில்லியன் ஜனத்தொகையே கொண்ட இந்த நாட்டில், ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் என்று பல்வேறு திசைகளிலிருந்தும் வந்து குடியேறியவர்களே 97க்கும் மேற்பட்ட சதவிகித மக்கள்.

தொழில், திறமை, தகுதி போன்ற அடிப்படையில் தேர்வு செய்து, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்நாட்டின் மீது ஆர்வம் கொண்ட மக்களை, தன் குடிமக்களாய் ஏற்றுக்கொள்ளும் இந்நாடு அபயக் குரலோடு ஓடிவரும் பெரும்பாலான அகதிகளையும் தகுதிபாராமல் அன்போடு அள்ளியணைத்துக் கொள்ளும் கருணைத்தாயாய் விளங்குகிறது.

இதன் புண்ணியத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே அடைக்கலம் புகுந்து தங்களின் வாழ்வை மேம்படுத்தி சிறப்பாக வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தன் நன்றி பொங்கப் பாடுவதாய் அமைந்ததுதான் இக்கவிதை

*

கண்ணில் விளக்கெரிப்பாள்
என்றும் கருத்தில் எனைக்கொள்வாள்
எண்ணும் பொழுதிலெல்லாம்
என்றன் இதயம் குளிர்விப்பாள்

பொன்னும் மணியுமிங்கே
பெற்ற தாய்தமக் கிணையாமோ
நன்றியும் சொல்வதுண்டோ
நித்தம் நேர்வரும் தெய்வமன்றோ

முன்னம் தாய்தந்தை
அவர்முன் மூதாதையர் பலரும்
அன்னைத் திருமண்ணே
உன்னில் ஆடிக் களித்திருந்தார்

உன்னை உண்டுதானே
உயரில் உரங்கள் சேர்த்திருந்தார்
வென்றுன் மடிசாய்வேன்
விடுத்து நன்றியா நானுரைப்பேன்

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை

உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே

எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே

மண்ணே புகலிடமே
என்றன் மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே
நன்றி ஊற்றே உயிர்தனிலே

என் குடும்பம்

சில்லறையை அள்ளி
தொப்பைக்குள் போட்டுக்கொண்டு
கள்ளச்சாராயச் சந்தைக்குச்
சலாம் அடிக்கும் காவல்காரர்

என் மச்சான்

எதைக் கொடுத்தாலும்
குடிப்பேனென்று குடித்துவிட்டு
நாக்குத்தள்ளி செத்துப்போன
குடிகாரன்

என் அண்ணன்

பட்டம் வாங்கிவிட்டேன்
வங்கியில் மட்டும்தான்
வேலை பார்ப்பேனென்று
தெருத் தெருவாய்த் திரியும்
வேலையில்லாப் பட்டதாரி

என் தம்பி

மாவட்ட ஆட்சித்தலைவன் தொட்டு
அடிமட்ட சேவகன் வரை
கை நீட்டிப் பை நிரப்பும்
அரசு நிர்வாகிகள்

என் சகலைப்பாடிகள்

ஊரை அரித்து உலையில் போட்டு
கைத்தட்டல் வாங்கும்
அரசியல்வாதி

என் மாமா

ஓர் எவர்சில்வர் குடத்திற்காக
எவனுக்கும் ஓட்டுப் போடும்
இந்நாட்டு அரசி

என் அம்மா

உள்ளூரில் வேலையில்லை
என்று திசைமாறிப் பறந்து
அத்தோடு தொலைந்துபோன
அமெரிக்கப் பிரஜை

என் அக்கா

சுதந்திரம்
வாங்கித்தந்தத் தியாகி
என்ற பெருமையோடு
சாய்வு நாற்காளியில்
சலனமற்றுக் கிடப்பது

என் தாத்தா

வார்த்தைகள் உயர்த்தி
விடியல் திறக்கும் வலிய பேனாவால்
தொலைந்துபோன காதலிக்காக
புலம்பல் கவிதைகள்
வடிக்கும் அற்புதக் கவிஞன்

நான்

திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்

பிப்ரவரி 01, 2003: பதினாறு தினங்கள் விண்ணில் பறந்த கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.


ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

மண்ணிலிருந்து வானத்தில்
விழுந்துவிட்ட நட்சத்திரங்கள்

திரும்பிய பயணத்தில்
திரும்பாத பட்டங்கள்

சாதனைக்கு மட்டுமின்றி
சாவுக்கும் சேர்த்தே
ஒரே பயணத்தில்
இருமுறை பறந்துவிட்ட
அவசரப் பறவைகள்

விண்ணில் பாய்ந்தபோது
மண்ணில் வாழ்த்தினர்
மண்ணுக்கு வரும்போது
விண்ணுக்கு அழைத்தது யார்

கொலம்பியா விண்கலம்
குழம்பிப் போனதா
கொடுப்பினை என்பதும்
தடுக்கிக் கொண்டதா

நாசாவின் கண்களில்
இன்னுமொரு முள்
சாகசக் களங்களில்
சாவுமோர் பிறப்பு

அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்

மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி

சாதனையற்றவன் சாவு
புறமுதுகு காட்டித்தான்
உங்களின் சாவோ
நெஞ்சிலே ஈட்டிதான்

ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

நெருப்பு


ஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்

மூட்டி விட்டால் முயற்சி எழும்பும்
பற்றி விட்டால் உணர்ச்சி படரும்
ஓங்கிக் கதறும் கதறல் உள்ளும்
ஒளிந்து கிடக்கும் நெருப்பின் வேகம்

அறிவும் நெருப்பு அன்பும் நெருப்பு
கருணை ஓங்க நெருப்பே பொறுப்பு
கண்ணீர் சிந்தும் தாயின் உள்ளம்
பாசம் என்னும் நெருப்புப் பந்தம்

மோகம் மூளும் மூச்சும் வேகும்
முத்தம் பற்றும் இரத்தம் எரியும்
நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்

வேரின் நெருப்பு நீரை நாடும்
உயிரின் நெருப்பு சாவைத் தேடும்
ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்
இருளை எத்தும் நெருப்பின் கால்கள்

கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்
கடலை எரித்து மழையைக் கொட்டும்
உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்
கள்ளம் எரித்து நீதி நிறுத்தும்

வைரக் கல்லும் நெருப்பின் பிறப்பே
கணினி இணையம் யாவும் நெருப்பே
வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்
வெடித்த நெருப்பு கொடுத்த துகள்கள்

நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு
நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு

காற்று


உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு

நாசிகள் தொட்டு நாளும் வாசம்
நெஞ்சம் கிறங்க நிமிண்டுவ தாரு
உயிரைத் தொட்டு உயிராய் நிறையும்
ஒவ்வோர் சுகமும் காற்றின் அசைவே

காற்றில் அலையும் பூங்கொடி தானே
நாட்டியம் ஆடப் பாடம் எடுத்தது
காற்றில் மிதக்கும் வாசனை தானே
சமையற் கலையைக் கற்றுத் தந்தது

நீரின் மீதினில் காற்றின் கோலம்
ஓவியம் தீட்டும் உள்ளம் ஈன்றது
மணலின் மீதினில் காற்றின் கோலம்
சிலைகள் வடிக்கச் சொல்லித் தந்தது

இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்

செவியும் மூக்கும் எப்படித் திறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்
ஓசைகள் இன்றி மொழிகளும் இல்லை
மொழிகள் இன்றி உலகமும் ஊமை

ஒவ்வோர் ஜீவனும் தசைநார் பின்னி
உன்னதக் கூட்டை உடலுள் கட்டி
ஒவ்வொரு முறையும் ஏங்கித் தவிக்க
ஓடித் திரியும் நாடோடிக் காற்று

இதமாய்த் தழுவும் சுகமாய்க் காற்று
இதயம் வருடும் அன்பாய்க் காற்று
தலையைக் கோதும் கரமாய்க் காற்று
உயிரைப் பேணும் தாயாய்க் காற்று

மனதின் சோகம் பெருமூச் சாகும்
கடலின் சோகம் புயலாய் மாறும்
நிலமும் கூட நீள்மூச் செறியும்
நடுக்கத் தோடு பிளந்தே மூடும்

நீரின் நெருப்பின் சுவாசம் காற்று
நிலத்தின் காதல் தழுவல் காற்று
காற்றே இன்றி உயிர்கள் இல்லை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

ஆகாயம்

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவப் பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்

நீர்



உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டின் போது திசைகள் மாலன் கூறியது:

அடையாரில் ஒரு பெண்கள் கல்லூரி. எம்.ஜி.ஆர்-ஜானகி பெயரில் அமைந்தது. ஒருநாள் என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். அரங்க மேடையில் அய்யா (வா.செ.) குழந்தைசாமி, அருமைத் தங்கை கனிமொழி, அப்புறம் யார் யாரோ பேராசிரியர்கள். அகில இந்தியக் கருத்தரங்கம் என்று அறிவித்திருந்ததால் அனைத்துக் கல்லூரியும் ஆஜராகி இருந்தது.

என்னைப் பேச அழைத்த போது மின்னல் போல் நெஞ்சில் ஒர் எண்ணம். நெடிது தொடரும் சிந்தனை மரபில் சிறிது காட்டலாம் என்று நினைத்தேன்.

நீர் இன்றி அமையாது யாக்கைக்கு என்று சொன்ன சங்ககாலத்து குடபுலவியனாரை எடுத்துச் சொல்லி ஆரம்பித்தேன்.

அடுத்து நான் புகாரியின் இந்த வரிகளைத் தொடுத்துச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது கரங்களின் ஒலியால்:

சமைப்பதுவும்
உண்பதுவும்
உணடதனைச் செரிப்பதுவும்
செரித்ததெல்லாம்
ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும்
தண்ணீர்தான்
கருணை கூடத் தண்ணீரே
ஈரமில்லா
உள்ளத்தை
இதயதமென்று யார் உரைப்பார்?

அந்தக் கரவெலிகள் எனக்கா? புகாரிக்கா?

இருவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த விரலொலிகள் அத்தனையும் எங்கள் தமிழுக்கு. இதை எனக்குச் சொன்னதும் இந்த புகாரிதான்:

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து- தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்!



நீர்

தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

நிலம்


கவிமாமணி இலந்தை கூறியது:

இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.


நிலம்

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

தைமகளின் தமிழ்ப் புத்தாண்டு

தைமகளே
எழில் தமிழ்மகளே
தாய்மடியில் உன் தாலாட்டே

எத்தனையோ
தமிழ் மாதங்களும்
இன்னமுதத் தேன் அளந்தாலும்

முத்தொளிரும்
தமிழ்ப் புத்தாண்டில்
முரசொலித்தே உன் முகமெடுத்து

முத்தமிழர்
ஏன் முன்வைத்தார்
மொழிவாயே என் தைமகளே

அத்தைமகள்
விழி மார்கழியும்
அழகொளிரும் சுடர் சித்திரையும்

முத்தமிடும்
பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ
இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப்
பண் பாடிவர
தைமகளே நீ ஏனடியோ

கத்தரியாய்த்
துயர் துண்டாடி
அமுதளக்கும் நிலத் தைமகளே

எத்தனையோ
துய்ர் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

தைமகளே
தவப் பொற்கொடியே
ஏருலகம் உன் சொற்படியே

முத்தெடுக்கும்
நீள் மூச்சழகே
முறைதானே நீ தலைமகளே

முத்துரதம்
மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும்
வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

புத்தாண்டின்
புது நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச் சுரம்பாட

தைமகளே
நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

எழுதக் கூடாத கடிதம்

அன்பே

கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்

இருந்தும்
நான் இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும் என்னால்
மௌனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது

ஆம்
அந்த ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன் ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப் பூட்டிவைத்திருக்கிறேன்



எனக்குத் தெரியாததா
மௌனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை எனக்கெனவே
இன்னமும் உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை

எனக்குக் கேட்காததா
நீ உன் அந்தரங்கத்துக்குள்
என்னை இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்

பல நேரங்களில்
நீ உன் விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட முன் வந்திருக்கிறாய்

உன் பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில் என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்

இருந்தும் என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை

நான்
உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும் ஈர நெஞ்சன் தான்

ஒரு நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்

உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ

எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்

ஆனால்
உன் சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

எனவேதான் என் அன்பே
என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற உன் விழிக் கெஞ்சல்களையும்
நான் நிதானமாகவே நிராகரிக்கிறேன்

இருந்தும்
என் காதலை உன்முன்
என் உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர் உற்சவமே நடத்திவிட்டது

சந்தேகமிருந்தால்
நான் அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி

அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்
அவை சொல்லும்

கண்ணே
நான் உன்னைக் காதலிக்கிறேனடி

இதயத்தின் எல்லா அணுக்களாலும்
நான் உன்னை நேசிக்கிறேனடி

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை அஉச்சரிக்கிறேனடி

என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை

நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்

இருந்தும் என் அன்பே
நான் எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்

அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்

என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய

பிரிகின்றேன் கண்மணி

எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும் ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.


பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்


இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்

இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை


மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்

தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி


துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்

அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை


மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய

எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே


இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே

எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்
*பதினோராம் குடியரசுத் தலைவா*


வைர விதையே
*எங்கள் அப்துல் கலாம்*

ஒரு பனித்துளி
தென்னிந்தியப் புழுதிப்
புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை

ஒரு சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை

எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம்
ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே

உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது

சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன் மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்

சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி

குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்

நீயோ
இந்தியாவின் முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும்
வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்

ஐயனே
எங்களை ஆள வந்த மெய்யனே

எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே

வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும் எந்நேரமும்
பணிக்குள் புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின் ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே
நல்ல தமிழ்க் கவிஞனே

ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே

உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ஆட்டிப் பார்த்துவிட்டன

அதோடு
அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர் ஏவுகணை செய்வாயா

கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே

நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு பிரகாச உற்சவத்தில்

சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய்
எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்

ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா

மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும் அவலம்
இன்னும் நீள்கிறதே
அதை அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா

திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்

உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்

தேனளக்கும் நம்பிக்கையை
நீ வாரி வாரி வழங்குகின்றாய்

உன் தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்

கண்களின்
கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா

உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியொரு
தோல்வியைச் சொல்ல
நீ யொன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்

துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்

ஒரு கூட்டு வேண்டுதலாய்
இறைமுன் தொழுகின்றோம்

மறவாதே ஐயனே
கொண்ட கொள்கையின்
தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே
எங்களின்
பதினோராம் குடியரசுத் தலைவனே

கவிஞர் புகாரி
(2002ல் எழுதிய கவிதை)

15 அக்டோபர் 1931 – 27 ஜூலை 2015

அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்

உலகின்
அத்தனை அன்பையும்
ஒன்று குவித்து
தன் பாச உதடுகளால்
என் நெற்றியில்
முத்தமிட்டாள்



பொட்டிற்கு என்பது
உபரிப் பணி
அவளின் முத்தத்திற்கு
என்பதே
என் நெற்றியின்
தலையாயப் பணி



மங்கலாய் எரியும்
தெருவிளக்குகளில்
ஒளிந்து பிடித்து விளையாடியவள்

கணினிப் பெருநகரில்
கைநிறைந்த சம்பளத்தில்
மூக்குக் கண்ணாடி வழியே
மொத்த உலகத்தையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்

ஆம்
இந்தக் கிராமிய நிலா
இன்று பட்டணத்து வானில்

நுனிநாக்கில் 'டமில்' பேசும்
சென்னைத் தமிழ் இளசுகளும்
மூக்கின்மேல் விரல்வைக்கும்
ஓர் இடத்தில்



நாட்டுக்கு ஒரு கிளையும்
ஆளுக்கு ஒரு கணினியும்
என் நிறுவனத்தின் பெருமை

இணையத்தில் நுழைந்து
நிமிடத்தில் பொருள் குவிக்கும்
நுட்பங்கள் அடர்ந்தது
எங்கள் பணி



எட்டுமணி நேர
அலுவலக இறுக்கம்
பல்லவன் வந்து முகமூடி கிழிக்க
நான் என்னிடம் மீள்வேன்



எண்ணெய் வழிய
இறுக்கிப் பின்னிய
இரட்டை சடைப் பின்னலுடன்
எங்களூர் மண்ணில்
மணிக்கணக்காய் ஓடியாடியபோது

பக்கத்து வீட்டுப்
பட்டணத்து அக்காவின்
அலங்கரித்த முகமும்
ஆங்கிலம் பேசும் அழகும்
எப்போது நாமும்
இப்படி வளர்ந்து
வாளிப்பாய் நிற்போம் என்று
கண்களுக்குள் கனவுகளை
இறக்குமதி செய்யும்



இன்று
எல்லாம்தான் இருக்கிறது

அடுத்த மாதம் நான்
அமெரிக்கா போக
வேலையும் விசாவும் தயார்



ஆம்
இருந்தது இல்லாமல்
போனதைத் தவிர
மற்ற எல்லாம்தான்
இருக்கிறது



மனிதர்களைத்
தனிமைப் படுத்தும்
விஞ்ஞான வளர்ச்சி

இரத்த பந்தங்களை
ஊருக்கு ஒன்றாய்த்
தூக்கி எறிந்து விளையாடும்
வேலை வாய்ப்பு

வெறுமையை
நிரந்தரப் படுத்தும்
இயந்திரங்கள்



அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்

அடுத்தவாரமே
உன் மடிதேடி வருவேன் நான்

எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்

அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்

நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல

நாணமே நீயிடும் அரிதாரம்

நீ
வைகறைப் பனிவிழும்
புல்மடியோ - மலை
வாழையில் வெடித்த பொற்
கனிநிலவோ

அந்தி
வானத்துச் சந்தன
ஒவியமோ - நதி
கடலுக்குச் சூட்டிடும்
நுரைச்சரமோ

முழு
நிலவு உன் கூந்தலில்
முகங்கழுவும் - வன
வண்டுகள் கண்களைக்
காதலிக்கும்

வான்
வசந்தம் உன் இளமையில்
அசைந்தாடும் - தேன்
அருவியுன் இடைவிழ
மனுப்போடும்

உயிர்
எழுத்துக்கு உன் பெயர்
உயிராகும் - உன்
நாணமே நீயிடும்
அரிதாரம்

நீ
நடப்பது நிலத்துக்குத்
தெரியாது - உன்
நினைவின்றி கனவே
விளையாது

மெல்ல
முகர்ந்தால் துவள்வது
அனிச்சமலர் - கண்
பார்வையில் துவளும் நீ
என்ன மலர்

உன்
நகத்தையே உறிஞ்சும்
செந்தேனீ - பொன்
விரலுக்கு வேண்டாம்
மருதாணி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*ஐயா இது அமெரிக்கா*

கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை

அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே

எந்த அட்டை
இருந்தால் என்ன

கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்

+

இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்

கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது


ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர்
அசிங்கமும் கிடைக்காது
"ஐலவ்யூ" சொல்ல

கடன் அட்டை மட்டும்
கொஞ்சம்
கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்

+

கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ

அலாவுதீன் பூதம்
தன்
முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு

+

வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்

வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி

தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி

மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று

வந்து வந்து வழிவர்

+

நொந்த மனமுடன்
ஓர்
இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்

"இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான்"

என்கிறாயே
நிஜமா தோழா

அன்புடன் புகாரி
20001006

ஒரு வாரிசு உருவாகிறது

நாடெங்கும் கொடிக் கம்பம்
நட்டுவச்சாச்சு
நட்டநடு வீதியெங்கும்
செலையும் வச்சாச்சு

வீடெங்கும் புகுந்தலசி
ஓட்டுக் கேட்டாச்சு
வெவரமாகப் பேசினவன்
இடுப்பொடிச்சாச்சு

காடுமலை மேடுயெல்லாம்
மேடை இட்டாச்சு
கள்ள ஓட்டுப் போட்டு இப்போ
ஆட்சி வந்தாச்சு

ஏடெங்கும் பொய்யெழுதிப்
புகழும்வந்தாச்சு
ஏழெட்டுத் தலைமுறைக்குக்
காசும் சேத்தாச்சு

கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு

ஆடு மாடு மந்தையான
மக்கள் மாறிடுமா
ஆட்சி நம்மக் கையைவிட்டு
ஓடிப்போயிருமா

பாடுபட்டுப் புளுகிவச்ச
சத்தியங் கேட்டு
பழயபடி இந்தமொறையும்
நமக்குத்தான் ஓட்டு

ஏடெடுத்துப் புகழெழுது
செத்த பயலுக்கு
எனக்கும் அதுல பொய்யெழுது
நல்ல பெயருக்கு

நாளைக்கு நான் புதுச்சட்டம்
போட்டுறப் போறேன்
நாடெங்கும் லஞ்சத்தையே
அமுலிலாக்கிடுவேன்

வேளைக்குயோர் ஊழலுன்னு
வரிசைப் படுத்திட்டேன்
வேறெதுக்கு ஓட்டு வாங்கி
ஜெயிச்சு வந்திருக்கேன்

ஏழை ஜனங்க ஏமாறும்
வழியைத் தெரிஞ்சிக்க
எட்டடுக்குக் காரனுக்கு
ஒதவி செஞ்சிக்க

காளை மனசுக் காரங்களைத்
தூண்டி விட்டுக்க
காரு கடை வீதியெல்லாம்
நாசமாக்கிக்க

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க

கேளுயின்னும் எத்தனையோ
புத்தி வச்சிருக்கேன்
கேட்டெனக்குப் பின்னுமதைச்
செய்ய நெனைச்சிக்க

பாலுமோரு தயிருயெல்லாம்
ஓரினச்சாதி
பந்தபாசம் நம்மளுக்கும்
அந்த மாதிரி

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

ஓருயிர் அழிந்தால் உலகம் அழவேண்டும்
உன்னுயிர் போல்தான் அந்நியர் உயிராகும்
போரெனில் அழிவது பாமரத் தலைதானோ
பண்பைத் துறந்த உன்பெயர் அழியாதோ

பேச்சே இல்லாப் பண்டைக் காலத்தில்
பயத்தால் கொன்றான் பார்க்கும் மனிதர்களை
ஆச்சோ அப்படி ஆயிரம் மொழியிருந்தும்
அரசியல் தீர்வில் ஆயுதம் வரலாமோ

ஏழை வயிற்றின் கூழைப் பறித்தெடுத்தே
ஏவு கணைகள் ஆயிரம் செய்கின்றாய்
பாலை வனத்தின் எண்ணெய்க் கிணறுகளில்
தீயை மூட்டி நாசம் செய்கின்றாய்

அகிலம் யாவும் உயிரினச் சொத்தாகும்
அதனுள் என்றும் அன்பே மூச்சாகும்
முகிலைப் போலே உப்பை விலக்கிவிட்டு
மக்கள் மீதுன் நல்லதைப் பொழிந்துவிடு

கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்

உலகின் தலைவன் யாரோ அவன்யாரோ
உயிர்கள் காக்கும் கருணை வேந்தனன்றோ
சலவை செய்துன் அழுக்கைத் போக்கிவிடு
சகலரும் வாழ பூமியைப் பூக்கவிடு



உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

கண்களின் அருவியை நிறுத்து

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா

உள்ளத்துச் சிறையின் உள்ளே
ஓயாமல் தள்ளப் பட்டே
சிறையையே தண்டிக்கின்ற
பொல்லாத கைதிகளடா - தோழா
பிணந்தின்னிக் கவலைகளடா

முடக்கங்கள் இந்தப் பக்கம்
பலகீனம் அந்தப் பக்கம்
மனத்தினுள் கிள்ளி வைக்கும்
கவலைகள் முள்ளாய் தைக்கும் - தோழா
முள்ளுக்குள் உயிரும் சிக்கும்

வாழ்வெனும் கடலில் நீந்தி
நம்பிக்கை வலைகள் வீசி
விழிகளை விரித்தே பாரு
குதூகல மீன்கள் நூறு - தோழா
கவலையோ விலகும் சேறு

மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்

கைவிட்ட காதல்தனையும்
கஷ்டத்தில் காணாதொளியும்
கயவாளித் தோழர்களையும்
காலுக்கடி மிதித்துவிடடா - தோழா
கருத்தினில் ஒதுக்கிவிடடா

ஏமாறு தவறே இல்லை
ஏமாற்றம் குற்றம் இல்லை
ஏமாற்றம் முதல்முறையென்றால்
ஏமாறு தவறே இல்லை - தோழா
ஏமாற்றம் குற்றம் இல்லை

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்

வாழ்க்கையில் விட்டுக்கொடு
விட்டுநீ கொடுக்கும் போது
விண்தொட்டு வளரும் இன்பம்
கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா
எட்டியே நடக்கும் துன்பம்

பொருள் தேடி உலகம் ஏறு
பொன்னோடு பண்பும் சேரு
பொருள் கண்ட உன்னையாரும்
பணம் என்று மட்டும் பார்த்தால் - தோழா
பிணம் என்று மட்டும் பாரு

சப்தத்தின் சிரிப்பும் கானல்
மௌனத்தின் புன்னகை வரம்
ரசிக்கின்ற உன்னுளம் தென்றல்
பாராட்டும் ஒளிமுகம் விடியல் - தோழா
பாராட்டும் பண்பே வானம்

மாறாத மகத்துவம் என்று
மண்மீது மாற்றமே உண்டு
இருண்ட உன் இதயமே கேடு
சொர்க்கமும் பூட்டிய கூடு - தோழா
திறவுகோல் உனக்குள் தேடு

கைகளில் அள்ளியே நாளும்
கணக்கின்றி உரித்தென்ன லாபம்
கவலைகள் பெருகியே போகும்
வெங்காயம் வேறென்ன ஆகும் - தோழா
வீசிநீ எறிந்தாலே தீரும்

மோப்பநாய் போலவும் தேடி
ஆனந்தம் காணுவாய் கோடி
பதுங்கியப் பூனைபோல் தாவி
சுகங்களைக் கவ்வியே வாழி - தோழா
சந்தோசம் உனக்கான தோணி

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்களை அறுத்து - தோழா
கண்களின் அருவியை நிறுத்து

இ. விமரிசனம் - சேவியர் - வெளிச்ச அழைப்புகள்


கனடாவில் வாழும் தமிழ்க் கவிஞர் புகாரியின் முதல் கவிதைத் தொகுப்பு இது!

தமிழகத்தைவிட்டு வெளியே இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ்மீது தீவிர காதல் இருக்கும்போல!

இங்கே
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையடும்போதுமட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்


என்னும் முன்னுரையோடு ஆரம்பிக்கிறார் கவிஞர்.

மொத்தம் முப்பது கவிதைகள், கவிதையின் அத்தனை வடிவங்களையும் கொஞ்சமேனும் தொட்டுவிடவேண்டும் என்னும் கவிஞரின் வேகம் இத்தொகுப்பில் புரிகிறது. கிராமியக் கவிதை, நகர்ப்புறக் கவிதை, இசைக் கவிதை, ஆராய்ச்சிக் கவிதை, தனி நபர்க் கவிதை, நிகழ்ச்சிக் கவிதை என்று பட்டியல் இன்னும் நீள்கிறது.

கவிஞன்
தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்
கவிதை


என்னும் முதல் கவிதையிலேயே கவிதைமீதும், கவிஞர்மீதும் நமக்கு ஓர் ஈடுபாடு வந்துவிடுகிறது.

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை


என்னும் வரிகளில் வாழ்வின் எதார்த்தம் வழிகிறது. கவிதைகள் எதுவும் அவலச்சுவையோடு முடியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

'இலவசம்' மற்றும் 'குளிர்' ஆகிய கவிதைகளை அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் வாசகர்களே அதிகம் ரசிக்க முடியும். இலவசம் கவிதையில் கவிஞரின் நகைச்சுவை நடை கவிதை உடையோடு அவைக்கு வந்து நடனம் ஆடுகிறது.

தாலி வாங்கினால்
பொண்டாட்டி இலவசம்
என்று
கடைதிறக்காததுதான்
மிச்சம்


எனவும்

ஒன்றுக்கு மூன்று இலவசம்
என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத் தீரும் அவலம்


என்றும் கவிஞர் அடுக்கிக்கொண்டேபோகும்போதும் நிலைமையின் வீரியம் மனச்சுவர்களில் பட்டென்று ஒட்டிக்கொள்கிறது

'குளிர்' - இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. அத்தனை வரிகளையும் செதுக்கிச் செதுக்கி உறையவைத்திருக்கிறார் புகாரி. எழுதும்போது பனியில் புரண்டுகொண்டே எழுதினாரோ என்று தோன்றுமளவுக்கு ஒரு சில்லிடும் குளிர் கவிதை வரிகளில் பாய்ந்து கிடக்கிறது. இன்னொரு கசிறப்பான கவிதை 'இருட்டு பேசுகிறது' - ஓஷோவின் இருட்டு பற்றிய சிந்தனைகளும், புகாரியின் கவிதையும் சில இடங்களில் ஒத்துப்போவது இனிய ஆச்சரியம்!

'தாமதம்', 'நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்', 'இன்னும் விடியாமல்' போன்ற கவிதைகள் மனித சமூகத்தைக் குறிவைத்து எழுதப்பட்டவை. கவிதை என்பது கவிதை மட்டுமே, அதற்கும் சமூகத்துக்கும் சம்பந்தமில்லை என்று சந்திகளில் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இலக்கியச் சிந்தனைகள் புகாரியின் கவிதைகளில் இல்லை, கவிதை என்பது சமூகத்தைச் சேரவேண்டும். படிக்கும் மக்கள் ஒரு கணமேனும் கவிதையின் தாக்கத்தை மனசுக்குள் வாங்கவேண்டும் அந்தத் தாக்கம் சமுதாயத்தில் சிறு துரும்பையேனும் நகர்த்த வேண்டும் என்னும் உன்னத ஆசையேஇவர் கவிதைகளில் நிறைய. உதாரணமாய் -

நம்
அரசியல் வயல்களில்
அழுகிய
விதைகளுக்கே
அமோக விளைச்சல்


இன்றைய அரசியல் நிலமையை இப்படிப் 'பளிச்' என்று சமீபத்தில் எந்தக் கவிதையும் சொன்னதாக நினைவில்லை!

'செப்டம்பர் 11' கவிதையும், நடிகர் திலகம் பற்றிய கவிதையும் கவிஞரின் ஆழமான வேதனையின் அழுத்தமான, அழகிய வெளிப்பாடு! கவிதையின் ஒவ்வோர் வரியின் முடிவிலும் சோகத்தின் அடர்த்தி. கவிஞர்கள் சோகமாவது நல்லதுதான் போலிருக்கிறது, சாமானியன் கண்ணீரால் அழும்போது, கவிஞன் கவிதைகளால் அழுகிறான்! கண்ணீரைக் காலம் துடைத்து விடுகிறது, கவிதையோ அடிக்கடி கண்ணீர் அணையை உடைத்து விடுகிறது!

கவிதையின் நீளம் குறைவாக இருந்திருக்கலாம் என்பதுமட்டுமே குறையாக் காண்கிறேன். ஏழெட்டு பக்கங்கள் நீளும் கவிதைகள் கவியரங்கங்களில் கைதட்டல் பெறும் அளவிற்கு புத்தகங்களில் ரசிக்க்பபடுவதில்லை. இரண்டாவது பக்கம் போரடித்தால் வாசகன், மூன்றாவது பக்கம் செல்வதற்குப் பதிலாக அடுத்த கவிதைக்கு விமானமேறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது! சில கவிதைகள் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து சொல்வது சற்றே சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. தலைப்புக் கவிதையான 'வெளிச்ச அழைப்புகள்' அவ்வளவாக திருப்திப்படுத்தவில்லை. புகாரியின் இரண்டாவது தொகுப்பு இவற்றைச் சரிசெய்துவிடும் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை.

முழுமையான தொகுப்பாகப் பார்க்கும்போது இந்த சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. முன்னுரையில் கவியரசர் வைரமுத்து சொல்வதுபோல, 'இந்தத் தொகுப்பு கவியுலகில், புகாரி அவர்களுக்கு பிரகாசமான இடத்தைத் தரும்'