அவன் பெயர் போர் வீரன்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள் என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது
எது

சுயநலத்தால்
அறுபட்ட நரம்புகளாய்
உலகில் எல்லைக் கோடுகள்

தாய்மண் என்பது
போரெனத் திரிந்தால்
அது மயானம்

தாய்
புதைக்கப்பட்டுவிடுகிறாள்

இரத்தம் தந்து
வளர்த்தெடுத்த தாய்மண்
ரத்தம் கேட்கும்
பிசாசாகிவிடுகிறது

மனிதன்
மிருகமானால்
அவன் பெயர் போர்வீரன்

அமைதி காக்கப்
போரிட வந்தவனுக்குப்
பெண் வெறி
எங்கிருந்து வந்தது

நாடு காக்கப் போரிடும்
அவனுக்கு
சதை தின்ன
எப்படித் தோன்றிற்று

வாழும்போது
எவையெலாம் ஒழுக்கமோ
அவையே
முதலில் கொல்லப்படுகின்றன
போரிடும்போது

அநீதிகளில்
விளையும் நீதியும்
அநீதிதான்

ஒவ்வொரு யுத்தத்திலும்
பெண்கள் ஏன்
பிழிந்தெடுக்கப் படுகிறார்கள்

போரை வெறுப்போம்
போர் வீரனை மறுப்போம்

மனிதனிலிருக்கும்
தெய்வத்தை
மனிதனில் இருக்கும்
மிருகம்
கொன்று தின்னும் காட்சிதான்
போர்வீரன்

மொழிவெறி
மதவெறி
இனவெறி
நிலவெறி
சாதிவெறி
என்று
எதுவானாலும்
அது
வெறிதான்

போர் மறுப்போம்
போர் வீரனை வெறுப்போம்

மனிதர்களாய் மட்டுமே
வாழ்வோம்

4 comments:

சீதாம்மா said...

புகாரி,
உன்னைத் தாயாய் அணைத்து வாழ்த்துகின்றேன்.
நீ எழுதிய கவிதைகளில் உயர்ந்து முதலிடம் பிடித்துள்ளது இக்கவிதை
வரிக்கு வரி
சொல்லுக்கு சொல்
எல்லாம் அற்புதம்
விமர்சனம் செய்ய விட்டு வைக்க ஒன்றுமில்லை
மனித நேயமே மதம்
மனித நேயமே வாழ்வு
மனித நேயத்தைக் காப்போம்
மனித நேயத்தில் ஒன்று பட்டால் தீய சக்தியும் பயந்து ஓடும்
நீ வாழ்க

தங்க முகுந்தன் said...

அருமை! மனிதன் தெய்வநிலை அடையாவிடினும் மிருகத்தன்மையை விடுத்து மனிதனாக இருந்தாலே போதுமே! காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே! வாழ்த்துக்கள்!

பூங்குழலி said...

கண்காணாத தேசத்தில் விளைந்த ஆப்பிள்
என் ரத்தமாகிறது
என் காலடி மண்ணில் விளைந்த நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு ரத்தமாகிறது
இதில் என் மண் என்பது எது



தாய்மண் என்பது
போரெனத் திரிந்தால் அது மயானம்
தாய் புதைக்கப்பட்டுவிடுகிறாள்

உண்மை தான் புகாரி .நாகரீகம் வளர்ந்துவிட்டதில் நம் யுத்த முறைகள் அதிகமாகியிருக்கிறதே தவிர யுத்தம் முடியவில்லை .

சீனா said...

அன்பின் புகாரி

போர் இல்லா தேசம் வேண்டும் - கிடைக்குமா

வாழும் போது கிடைக்கும் உணவும்
செத்த பின் கிடைக்கும் வாய்க்கரிசியும்
ஏதோ ஒரு மண்ணில் விளைந்ததுதான்

எங்கோ விளைந்த ஆப்பிள் என் ரத்தமாக
என் காலடியில் விளைந்த நெல் எவனுக்கோ உணவாக்
எந்த மண் சொந்த மண்

ஐம்பெரும் பூதங்களில் நிலம் தவிர்த்து நான்கினை
ஒன்றும் செய்ய இயலவில்லை
ஏன் நிலத்திற்கு இத்தனை சண்டை

எல்லைக்கோடுகள் நீக்கப்பட வேண்டும்

தாய்மண் மயானமாகிறது

மனிதனில் இருக்கும் தெய்வம்
மனிதனில் இருக்கும் மிருகத்தினை வென்று
நாம் மனிதம் போற்றி மனிதனாக வாழ்வோம்

அழகான சிந்தனை - அருமையான சொற்கள்
கவிதையின் அழகு கருப்பொருளில்

நன்று நன்று நண்ப புகாரி நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
-----------------------------