எத்தனை பேர் நேசிக்கப் போகிறார்களோ
தெரியாது - ஆனால்
எல்லோரும் வாசிக்கப் போகிறார்கள்

கவிதையும் அல்லாமல் கட்டுரையும் அல்லாமல்
கண்சிமிட்டும் இதை - அது
தோன்றியதுபோலவே
எழுதிக்கொண்டிருக்கிறேன் - மடித்து மடித்து...

ஏன் மடித்து மடித்து?

அப்படி எழுதும்போது
தோட்டாக்களிட்டுச் சொல்வதுபோல்
வீண் சொற்களின்றி விசயச் சொற்களால்
எழுதிப் போகும் நிம்மதி வளர்வதால்

*
கவிதை வாசிப்புகள்
பல்கிப் பெருகிவிட்டனவா
அல்லது
அருகிக் கருகிவிட்டனவா

அதுபற்றி
யாதொரு அக்கறையுமின்றி
தன் போக்கில் - படுவேகத்தில்
சால உரு தவ நனி கூர் கழியாய்ப்
பொங்கிப் பெருகும் வீச்சத்தில்தான்
கவிதை எழுதுதல் எனும் தவக்கலை
நிகழ்கிறது
கணினித் தாழ்வாரங்களில்

ஆயினும்
ஊதிப் பெருத்து
உடைந்தழியுமோ பலூன் என்று
கவலைகொள்ளத் தேவையில்லை

உடைந்தழிந்தால்
வெற்று வாயுக்களே வெளியேறுமென்று
நித்திரை கொள்ளலாம் தாராளமாக

*
யோனிகளும் முலைகளும்

ஓர்
அருமையான தலைப்பின்கீழ்
என்னதான் எழுதிக்கொண்டிருக்கிறாய்
ஒன்றும் விளங்கவில்லையே
என்று
உள்ளுடைமனம் கேட்கிறது

ஆயினும் நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
எட்டிவிடலாம்
அந்த ஏற்றத்தை என்று

*
உடுக்கை என்றான்
பின்னல் தொடவியலாப்
பெண்ணின் இடையழகைக்
கவிஞன் அன்று

உடுக்கை
என்று மட்டுமா உரைத்தான்

உண்டு
என்றால்
அது
உண்டு

இல்லை
என்றால்
அது
இல்லை

என்று
எண்ணங்கள் சிக்கிச் சிறகடிக்க
தத்துவமாய்ச் சொல்லிப் போனான்

அட
அதனுள் எங்கே இருக்கிறது
தூண்டில் கவர்ச்சி என்கிறீர்களா

உடுக்கை போல் இடையழகு
என்றொரு
கன்னியிளம் பெண்ணைச் சொன்னால்
கவிஞன்
அந்த வெற்றிடத்தையா சொன்னான்

அந்த இடைக்கு மேலல்லவா
அவன் பார்த்தான்

பார்த்து பிரமித்து
இமை உதிர்த்த விழிகளோடு

பின்-கீழுமல்லவா பார்த்து
அவன் அடிபட்டுப்போனான்

கண்ணெடுக்கவியலா
இந்தக் கூத்தை
அவன் என்னவென்று சொல்வான்

சொல்லவும் முடியவில்லை
சொல்லாமல் அதைத்
தள்ளவும் இயலவில்லை

சொல்லத் துடிக்கும் தமிழ்க் கவிஞனுக்கு
கவிதையெனும் மந்திர வானம்
தன் கற்பனைச் சொற்புயலை
வீசியடிக்காமலா பொய்க்கும்

சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை என்று
சொல்லத் தெரிந்தவனாயிற்றே

ஆதலினால் கவிஞன்
சொன்னான் சொற்களால்
இடைகளை மட்டும்
சொல்லாமல் விட்டான்
யோனிகளையும்
முலைகளையும்

சொல்லாமல் சொன்னபோது
பெருஞ்சுவைச் சுடர
பொன்னொளிர்த்த சொற்கள்

பின் வந்த போலி நவீனத்தில்
எதை மறைத்து
எப்படிக் குழப்பினாலும்
இதை மறைக்கா மகோன்னதத்தில்

தெள்ளத் தெளிய கூச்சமறு நாச்சத்தில்
தீதுமிகு நவகவியாய்ச்
சொல்லியே போகும்
கற்காலப் புதுமையில்

மறைத்தலன்றி
மறைக்கத் துடிக்கும்
மடநாணப் பயிர்ப்பின்றி
மனவீரக் களிப்போடு சொல்லிப்போகும்
பிறழ்ந்த பெண்ணியத்தில்

யோனிகளும் முலைகளும்
படம்போட்டு
பாகங்கள் குறிக்கப் படும்
வெட்ட வெளிச்ச
இன்றைய
’கவிதைக்கு மெய்யழகில்’

நிமிர் நடையற்றும்
நேர்கொண்ட பார்வையற்றும்
சொல்லத் தயங்கிய சொல்லற்றவர்களை
நெத்தியடி அடிக்கின்றன
சுத்தியுடைந்து விழுகின்றன

யோனிகளும் முலைகளும்

சொன்னவன் கற்பனை
கடுகுச் சிறிதாக
சுவைப்பவன் கற்பனையோ
எல்லையற்ற காலப்பெரிதாக
எழுதப்படாத வரிகளில்
எப்போதேனுமாயினும்
விரிகின்றதாகுமோ
இனி
கவிதை

No comments: