உன்னைக் கொல் உலகைக் கொள்

ஏவியவர்களின்
ஏவல்களை
ஏகமனதோடு
ஏற்றுக்கொள்கின்றன
ஏதுமறியா
ஏவுகணைகள்

ரத்தம்பட்டுச்
சொட்டும்போது
கத்திக்குக்கூட
கருணை வரலாம்

அடுத்த வெட்டுக்குப்
பாயும்முன்
அரைநொடியேனும்
அச்சங் கொள்ளலாம்

ஆட்களிடம் இல்லையே
என்ற பதைப்பில்
ஆயுதங்களிடமாவது
எதிர்பார்க்கலாம்
உள்ளங்களில் கருணை
உயிர்களிடத்து அன்பு
என்ற
செத்தொழிந்த
பழஞ்சொற்ப் பிரயோகங்களை

வாடிய பயிரைக் கண்டு
வாடிய நெஞ்சு கொண்ட
ஈரத்தின் சாரத்தில்
ஒற்றை விழுக்காடேனும்
ஒட்டிக்கிடக்குமா
உடைந்தொழுகிக் கிடக்கும்
உலகக் குடுவையில்

*
கண்விழிக்கும்முன்பே
காலடி நிலம்
காணாதொழிவதை
காக்கத் துடித்து
கதறியெழும்போது
ரத்தமும்
ரத்தத்தில் மிதக்கும்
சிதறுண்ட துண்டுகளுமாய்
நீளும்
தொடரோட்டப்
பாவக் காட்சிகள்

இன்னும் இன்னும்
இங்கும் அங்கும்
ஓயாச் சுடுகாட்டுக் கழுகுகள்
கொத்துக் கொத்தாய் உயிர்களைக்
கொத்தித் தின்னும்
காட்சிகள்

காணச் சகியாமல்
ஐயகோவென்று
கதறியழும் நெஞ்சோடு
கருணையாளர்கள் வந்தார்கள்
ஆயினும்
காட்சிகளோ மாறவில்லை

பின்
கடவுள்களே வந்தார்கள்
மதங்களென்ற கூராயுதங்களை
மனிதர்களிடம் களவுகொடுத்துவிட்டு
காட்சிகளை
விருவிருப்பாக்கிவிட்டார்கள்

பன்னாட்டுக் கூட்டாக
ஒருங்கிணைந்த தலைவர்கள்
உலக அரசியலோடு வந்தார்கள்
காட்சிகளின் இயக்குனர்களாய்
அவர்களே ஆனார்கள்

அடப்
பொல்லா உலகே
உன் சாபத்திற்குத்தான்
ஒரு
விமோசனமே இல்லையா

*
திருடனாய்ப் பார்த்து
திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க
முடியாது

ஆம்
வன்முறை என்ற
வக்கிர வன்மம்
உள்ளங்களிலிருந்து
அழியாமம்
உலகில் அழிய
வழியே இல்லை

எங்கோ செல்லாதே
எவர் முன்னும்
உபதேசித்து நில்லாதே
உனக்குள் ஏறு
உன் வக்கிரம் கொல்

அச்சிறு
வெற்றியினால்தான்
இந்த உலகின்
மாபெரும் வெற்றி
மந்திரமாய்ச் சமைக்கப்படும்

உன்னைக் கொல்
உலகைக் கொள்

No comments: