கண்ணதாசன் ஒரு சுவாரசியமான காதல் பாடல் எழுதினார்.

அதில் காதலி அதீத காதலோடு கதாநாயகனிடம் கொஞ்சுகிறாள். அவனோ விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான்.

எல்லாம் துறந்த துறவும் இன்றே பூத்த பூவும் காதல் கொண்டால் அந்தப் பாடல் எப்படி இருக்கும்?

இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

என்கிறாள் காதலில் கனிந்து மயங்கி சொக்கி நிற்கும் அவள்.

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

என்கிறான் அவன்.

எத்தனை சுவாரசியம் பாருங்கள். இரண்டு முரண்கள் ஒரு புள்ளியில் சந்தித்து உரையாடுவதை எத்தனை எளிமையாகக் கண்ணதாசன் தருகிறார்.

பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன

என்கிறாள் அவள் விடாப்பிடியாக. தன் கற்பனைகளையும் பருவத்தின் குறுகுறுப்புகளையும் தொலைக்க அவளால் துளியும் இயலவில்லை.

உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன

என்கிறான் அவன் விட்டுக்கொடுக்காதவனாக

உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன

என்கிறாள் காதலில் துடிக்கும் கன்னி

இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன

என்கிறான் உறைந்துபோன உணர்வுகளோடு துறவி.

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
தினம் மூடி மூடி ஒடினாலும்
தேடும் வாசல்தானே

அப்படியே அவன் திசையிலேயே அவனை அடித்துப்போடுவதுபோல் அவள் பாடுகிறாள்.

பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே

என்று அவளுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறான் அவன்.

இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு

இறுதியில் கெஞ்சத் தொடங்கிவிடுகிறாள்.

இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

அவள் மீது இரக்கப்பட்டு அமைதியாக அவன் அவளுக்குப் புத்தி சொல்கிறான்.

இப்படி எதிர் எதிர் கருத்துக்களை மோத வைப்பது எளிமையான காரியமல்ல. அதை இத்தனைச் சிறப்பாய்ச் செய்த கண்ணதாசனின் பாடல்களைக் காதலிக்காமல் எப்படி இருக்க முடியும்?

Comments

ஆகா
அருமை
கண்ணதாசன் கண்ணதாசன்தான்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்