கண்ட செய்தி:
>>>ஈழ மகா காவியம் எழுதுவேன் - வைரமுத்து
சொல்லாமல் விட்டது , அதை புத்தகம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்வேன் .<<<

காணுங்கள் என் செய்தி:

ஆயிரத்துக்கு விற்றால் என்ன அல்லது ஒரு லட்சத்துக்கு விற்றால்தான் என்ன?

எல்லா எழுத்தாளர்களும் பாரதியைப்போல பரதேசியாகவே அலைந்து எந்த நன்றிகெட்டவனும் இறப்புக்கும் வராத நிலையில் பரிதாபச் சவ ஊர்வலம்தான் பெற வேண்டுமா?

ஒரு பல்பொடியை விற்கக்கூட பல்லாயிரம் விளம்பரங்கள்.

அம்மா படம் ஒட்டினால்தான் சோறு இல்லாவிட்டால் செத்துப்போ என்னும் அரசியல் விளம்பரங்கள்

ஒவ்வொரு அரசியல்வாதியும் பிச்சைக்காரனாய்த் தொடங்கி உலக பெரும் பணக்காரனாய் ஆகிறார்கள்.

தன் சொந்த நூலின் விற்பனைக்காக ஓர் எழுத்தாளன் / கவிஞன் செய்வதா கேடு?

எழுத்தாளனும் கவிஞனும் கோடீசுவரனாய் இருந்து எழுத்தில்மட்டுமே வாழத் தொடங்கினால் பிச்சைக்காரன்தான் தமிழ்நாட்டில்.

ஒரு நூலையும் காசுகொடுத்து வாங்க ஒரு தமிழனும் எந்தத் தெருவிலும் கிடையாது.

எழுத்தாளன் விரக்தியில் வாடுகிறான் வறுமையில் சாகிறான். சினிமாதான் சோறுபோட அழைக்கிறது. அதற்கு அவன் தன் சுய காட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், கீழே இறங்கி சமரசம் செய்ய வேண்டும், வணிகம் எழுதவேண்டும்.

ஒரு நல்ல நூல் ஒரு கோடி பொன் பெறும், நூறு ரூபாய் என்பதும் ஆயிரம் நூபாய் என்பதும் அதற்கான வெகுமதியே அல்ல என்று சொன்னால்தான் நாம் தமிழையும் இலக்கியத்தையும் நேசிக்கும் தமிழர்கள்.

இல்லாமலா தமிழ் வளரும்?

ஓர் எழுத்தாளனைக் கொன்றுவிட்டா தமிழ் உண்ணத் துடிக்கிறீர்கள் மக்களே?

No comments: