அழிவில் வாழ்வா


கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத் தீனியாக்கிவிட்டதா

முதலில் என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்

இது ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும் ஈர ஒத்தடம்தான்
இதனால் உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய் நிற்கப்போவதில்லைதான்

ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்

நீயோ -
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்

அல்லது -
தோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்

நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா

இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்

இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோடும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின் கருப்பொருள்தான்

கருகிக் குவிந்து கிடக்கும்
கணக்கற்ற சடலங்கள்
உன் சுற்றமும் நட்புமல்லவா
நொறுங்கி நீராகிக் கிடப்பது
உன் உடலும் உள்ளமுமல்லவா

ஆயினும்
என் அன்புச் சகோதரா
உன்னிடம் எனக்கொரு கேள்வியுண்டு

உன் நிதான நிமிடங்களின்
நிழல்மடி அமர்ந்து
எனக்கொரு பதிலைச் சொல்

வெற்றி என்பது என்ன சகோதரா

முட்டாள் கரமெடுத்து
மூர்க்க அரிவாள் வீச்சில்
மூடத் தலைகளை
முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா

இல்லை சகோதரா
இல்லை

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா

இன்று தப்பலாம் உன் தலை
அது என்றும் தப்புமா சகோதரா

இன்றும் கூட
உன் தலைக்குப் பதிலாய்
இங்கே உருண்டோடிய உன்
இனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை

வாழ்வில்
அழிவு வரும்தான்
ஆனால் -
அழிவில் வாழ்வு வருமா

சரித்திரம் பார் சகோதரா
வந்தபின் ஒத்தடம் அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே வெற்றியல்லவா

ஒருமுறை
அந்த இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி நகர்ந்துபோய்விட்டது
மீண்டும் அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

என்னருமைச் சகோதரா
இனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன் மீண்டு வா

எது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா

அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்

ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும் இழுக்கக் கொடுக்க
இன்றே கையப்பமிடும் சாசனமல்லவா

'வெட்டு' என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை

வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை உணர்த்தும் இயற்கையை
உற்றுப்பார் சகோதரா

வெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா

தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா

அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப் பேரெழில் கண்டாயா

அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு

மீண்டும் ஓர்
அணுகுண்டுப் போரென்று
அடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்
புல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ

என் அன்புச் சகோதரா
இரத்தப் பாளமான உன் நெற்றியை
அறிவென்னும் நெருப்புக் கோடுகள்
அழுத்தமாய்ப் பதிய
சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்

இன்றின் அவலம் மற
மூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே

நாளையேனும்
நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி
உன் நெஞ்சோடு போராடு
நல்ல விடையோடு எழு

வாழ்க்கை ஒருமுறைதான்
அதை மூடருடன் முட்டிக்கொண்டு
முடித்துக்கொள்ளல் அறிவீனம்

காயங்களைச் செப்பனிட்டு
உன் கேடயங்களைத் தேடு

அந்த அறிவு வெளிச்சம்
உனக்குள் பட்டுத் தெறிக்க
சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்
பூக்கவைத்தால் மட்டுமே

இது ஒரு கவிதை
சகோதரா

கல்லெறிதல்

காய்த்த மரம்தான்
கல்லடிபடும்

கற்களுக்கு
வலிப்பதும் இல்லை
ஆனால்
அடிபட்டும்
புன்னகைப்பதேன்
கனிகள்

என்னை
உண்டாவது
அறிவு பெற்றுக்கொள்
என்ற ஞானத்தாலா

அல்லது
என் காயங்களில்
இருப்பவை
உன் முகவரிகள்தான்
என்ற ஏளனத்தாலா

எது
எப்படியாயினும்
காலைத்தூக்கும் நாய்க்கு
முட்டிக்கொண்டு நிற்கும்
உபாதைதான் முக்கியமாகிறது

மைல் கல்லா
மையல் சிற்பமா
என்பதல்ல

காலம்
நிதானமாய்ப் பொழியும்
நியாய மழைத் துளிகளால்
சிற்பம் கழுவப்படும்தான்

ஆனாலும்
அந்தக் கவலையெல்லாம்
இல்லையே நாய்களுக்கு

வாழ்க்கை அகதி

கடல் கண்டுகொள்ளாத
அலை நான்
மேகத்தில்
ஏறிக்கொண்டேன்

மேகம் மறுதலித்த
மழைத்துளி நான்
நிலத்தின்
மடி வீழ்ந்தேன்

நிலம் நிராகரித்த
நீர் நான்
காற்றில்
தொற்றிக்கொண்டேன்

வீசும் காற்றுடன்
அலைந்தேன்
திரிந்தேன்

காட்டு மரம் ஒன்றில்
கருங்கல் பாறை ஒன்றில்
மூங்கில் கிளைகளில்

பேய் உறங்கும்
பழைய மாளிகைச்
சுவற்றில்

கொடிக்கம்பு
நுனியில்

பாய் மரத்தின்
விளிம்பில்

வேப்பமர
இலையில்

குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்

துருவேறிய
கம்பிகளில்

கொம்பில் விழுந்த
பறவையின் எச்சத்தில்

ஒட்டிக்கிடக்கின்றன
என் இரத்தத் திசுக்கள்

புரியாத கவிதைகள்


உள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்
உள்ளுரமுமின்றி

சொல்லேறிச் சுடரும்
சுயவானம் வரையாது
எழுத்தாணி மூடும்
நிம்மதியுமின்றி

சுற்றிச் சுற்றியே
தொடுதூரப் புள்ளிகளை
வெற்று
வட்டமடிக்கிறார்

புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன
புரியாத கவிதைகள்

நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.
இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்

ஆனால் காதல் என்று வந்துவிட்டால்
நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
ஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்
இரண்டையும் ஆட்சி செய்கிறது
தனக்கே என்பதில் அதிக சுயநலமானது

கல்யாணம் என்று வந்துவிட்டால்
காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது
என்பது நடைமுறை உண்மை
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும்
காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து
அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
ஆனாலும் உண்மையான வேர்க்காதல்
உள்ளே ஒளிந்துகொண்டுதான் இருக்கும்

குழந்தைகள் என்று வந்துவிட்டால்
ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்
அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்
இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்
இல்லாமல் அழிந்துபோகும்


*

நட்பு முதலாக

ஆண் பெண் நட்பு
24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்
நட்பு நாடும் ஈர்ப்பில்
இருவருமே இமயங்கள்
காதலென மாறின் நட்பு
ஒருபடியேனும் கீழிறங்கும்

மனம் + உடல் என்ற
இரு பெரும் வாழ்வுச் சக்திகளை
தனதாட்சிக்குள் கவர்ந்து
தனக்கே தனக்கென்பதில்
சுயநலம் மிகுத்து
பேருறுதிகொள்வது காதல்

கல்யாணம் என்றாகிவிட்டாலோ
சன்னமாய்ச் சில படிகள்
கீழிறகிப் போய்விடுவதே
காதல்

உரிமைகள் பொறுப்புகள்
பழகியபின் வரும்
உடல் ஈர்ப்பு அலட்சியங்கள்
தொடரும் மனவெளி வெறுமைகள்
அதிகார உயர்வால் காதல் காயங்கள்
என்று துரிதகதியில் நீர்த்துப்போனாலும்
உண்மை வேர்க்காதல்
உள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்

குழந்தைகளென்று
உறவுவான் விரிந்துவிட்டால்
ஆண் காதல் பெண்ணிடம்
அப்படியே அப்பிக்கிடந்தும்
பெண் காதல் பிள்ளைகளுக்கென்று
புலம்பெயர்வதைத் தடுப்பதற்கில்லை

அவ்வண்ணமாய்ப் பெண்
படைக்கப்படவில்லையெனில்
இனவிருத்தி உயிர்ப்பெருக்கம்
என்பவையாவும் கழிந்து
பிரபஞ்சம் உடைந்தழியும்

ஆண்பெண் நட்பு - காதல்

ஆண்பெண் நட்பு - காதல்

உண்மையான நட்புக்கும் உண்மையான காதலுக்கும்
இடையில் எந்த வித்தியாசமும் இல்லை
ஒன்றே ஒன்றைத்தவிர...

உடல் காரணமாக வரும் சலனங்களையும் உணர்வுகளையும்
வரவிடாமல் தடுத்துக்கொள்ளப் பார்க்கும் நட்பு
தங்களை மீறிவரும் உணர்வுகளையும் சலனங்களையும்
உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு நாகரிகமாக பழகும் நட்பு

காதல் அப்படிச் செய்யாமல் அப்படியான
உணர்வுகளைத் தூண்டிவிட்டுக்கொள்ளும்
அதுதானே காதலுக்கான தீனி

அதோடு நட்பிலும் காதலிலும் தனக்கே நெருக்கம் வேண்டும்
என்ற சுயநலம் இருந்தாலும் காதலில் அது பலமடங்கு அதிகம்

*

திருமணத்திற்குப்பின் ஆண் பெண் நட்பு திருமணத்திற்கு முன்பு இருந்ததுபோல் இருக்க முடியாது.

அதாவது முன்பு தொட்டுப் பேசியவர்கள் இப்போது தொடுவதில்லை
முன்பு கட்டியணைத்தவர்கள் இப்போது கட்டியணைக்க மாட்டார்கள்
முன்பு தனியறையில் ஒன்றாக தங்கியவர்கள் இப்போது மாட்டார்கள்

திருமணம் அல்லது காதல் ஆண்பெண் தொட்டுப்பழகும் நட்பை பிரித்துவிடுகிறது.

அதாவது ஆண் பெண் நட்பு திருமணம் அல்லது காதலுக்குப்பின்
வேறு ஒரு புதிய நிலையை அடைந்துவிடுகிறது. மனதோடு மட்டும்
அல்லது சந்திக்கும்போது உரையாடுவது அல்லது நல்லது கெட்டதற்கு
சில நண்பர்களை மட்டும் அழைப்பது என்பதோடு நின்றுவிடுகிறது.

என்றால், ஆண்-பெண் இடையிலான காதல் என்றால் என்ன நட்பு என்றால் என்ன?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
ஒத்திகை பார்த்துக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
தேடுதல் நடத்திக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

அப்படித்தான் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில்
நடக்கின்றன. அதுதான் இன்று ஊருக்கும் வந்துவிட்டது

*

நட்பு காதல் கணவன்

நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.

உயிர் தழுவும் தமிழாகிடுமா?

நாரெல்லாம்
வண்ணமலர்தான்
ஆனால்
நறுமல்லிப் பூவாகிடுமா

வேரெல்லாம்
சுகவாசந்தான்
ஆனால்
வெட்டிவேரைப்
போலாகிடுமா

மாரெல்லாம்
வீரமுரசுதான்
ஆனால்
மறத்தமிழன்
வெற்றியாகிடுமா

ஊரெல்லாம்
மொழிநூறுதான்
ஆனால்
உயிர்தழுவும்
தமிழாகிடுமா




கூகுள் ரீங்காரம் Buzz

கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்

குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன
ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன

கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனக்கேணி
பொங்குகிறது அளவற்று
அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது

கை


ஆயிரம்
கைகளைவிட
நம்பிக்கையே
வாழ்க்கை

உயிரடியில்


மனசு உள்ளோர் எல்லோருமே
நாய்க் குட்டிகள்தாம்
ஒருமுறை அள்ளி அணைத்து
அன்பு முத்தம் ஈந்துவிட்டால்
பின்
காலத்துக்கும்
வாலாட்டிக்கொண்டு
உங்கள்
உயிரடியில்தான்

நூறுபேரிடம் காதல்

நெஞ்சு நெருங்கிய போதெல்லாம்
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்

ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்

காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை

வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை

வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை

ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்

ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை

ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை

எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்

ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

1 தமிழில் இல்லாத எழுத்துக்கள்

கேள்வி:
மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில், சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில், அதை நிரப்புவது தானே முறை? ஜா, ஷா போன்றவை அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில் என்ன தவறு? ழ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும் அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து கவலையும் பட வேண்டும் இல்லையா... z போன்ற இன்னும் எழுத்து இல்லாத சில ஓசைகளுக்கு எழுத்தை உருவாக்குவது நல்லது. இது எனது கருத்து மட்டுமே. இதன் மறுபக்கம் எனக்கு தெரியாது. இது குறித்த உங்களது பார்வையை எதிர்பார்க்கிறேன்.

என் பதில்:
அருமையான கேள்வி. எனக்கும் பலகாலமாய் இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்ததால்தான் கிரந்த எழுத்துக்களான ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ ஆகியவற்றைத் தமிழுக்குள் இழுத்துவந்தார்கள்.

ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி உண்டு. நீங்களே கூறி இருக்கிறீர்கள். தமிழின் தனி எழுத்து ழ என்பதை. இந்த ழ வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்?

ஆங்கிலத்துக்கு ஒரு புது எழுத்து தேவையில்லையா?

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.

கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது?

முஅஅல்லம் என்று ஒரு பெயர் அரபியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கிறீர்களா? பல எழுத்துக்களை உங்களால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியில் ழ என்ற எழுத்து இருக்கிறதா?

பிரஞ்ச் மொழி வாசகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அவரவர் அவரவர் நிலையில் அழகல்லவா? இவள் அழகு இவள் அழகில்லை என்று சொல்லமுடியுமா? ஆனால் அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்கள்தானே அவர்களைத் தனித்தனியாய் அடையாளம் காட்டுகின்றன.

வெள்ளைக்காரி சற்று உயரமாக இருப்பாள். கால்கள் வலுவாக அழகாக இருக்கும். எனவே அவள் கால்களை வெளிக்காட்டியே உடை உடுத்துவாள். மார்புப்பகுதி பெரும்பாலும் பாலைவனமாய்க் கிடக்கும். முடி சொல்லவே வேண்டாம். கருப்பாய் இருக்காது, குறைவாயும் இருக்கும்.

தமிழ்ப்பெண் சுமாரான உயரமாய் இருப்பாள். கால்கள் நோஞ்சானாய் இருக்கும். ஆனால் இடையும் இடை சுமக்கமுடியாத அழகுமாய் இருப்பாள். கண்கள் பெரியதாய் பேசும் விழிகளாய் இருக்கும். நிறைய கூந்தலோடு கவர்ச்சியாய் இருப்பாள்

சைனாபெண் குள்ளமாக இருப்பாள். பெரும்பாலும் சப்பை மூக்கு. சின்னச் சின்னப் பொருள்களாய்ப் பார்த்துப் பார்த்து தேடி கண்ணாடிப் பெட்டிக்குள் அலங்கரித்து வைத்திருப்பார்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஓர் அழகில் இருப்பாள்.

ஆப்பிரிக்கப்பெண் கறுப்பு. வாட்டசாட்டமான உருவம் அதில் மிகையான பின்புறம். சீப்புக்குச் சிக்காத சுருள் கூந்தல். நல்ல உயரம்.

ஆனால் பாருங்கள் எல்லாப் பெண்களுமே அழகு. இப்படித்தானே ஒவ்வொரு மொழியும் அழகு. எந்த மொழி அழகில்லாதது? சொல்லுங்களேன் பார்க்கலாம்.

தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதையர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

சரி மீண்டும் உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.

முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு.

Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?

Sun Son எப்படி வித்தியாசப்படுத்துகிறீர்கள்?

hire, here, hear, heir, hair நுனுக்கமாக எப்படி உச்சரிக்கிறீர்கள்?

Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்?

இன்னும் எனக்கு ஓர் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் உண்டு.
பரியின் குட்டி ஃபஹீம்

கட்டுடைத்த காவிரியே
கறுப்பழகின் இடுப்பழகே
சொட்டிவிழும் பௌர்ணமியே
சொர்ணமணிப் பூஞ்சிரிப்பே
தொட்டிலாடும் தாரகையே
தோளிலேறும் ராட்டினமே
எட்டிமனம் தாவுதடா
எடுத்துன்னை முத்தமிட

மண்ணுக்கு மழைவேண்டும்
மரத்துக்கு வேர்வேண்டும்
விண்ணுக்கு மீன்வேண்டும்
விடிவுக்குக் கதிர்வேண்டும்
கண்ணுக்கு ஒளிவேண்டும்
கவிதைக்கு நான்வேண்டும்
பெண்ணுக்கு எதுவேண்டும்
பெற்றெடுக்கும் பேறுவேண்டும்

பாசமென்றால் பரிக்குட்டி
பரியுள்ளம் பனிக்குட்டி
ஏசுவதாய் நடித்திடுவாள்
இதயமெலாம் துடித்திடுவாள்
தூசுதொட முடியாத
தூயமனம் பெற்றவளே
காசுபணம் மதியாத
கற்பூரப் பொற்பூவே

மாலிக்கென்ற மகராசன்
மடிவிழுந்த மலர்க்கொடியே
மாலிக்கின் மாளிகையில்
மங்காத சுடரொளியே
மாலிக்கின் கொடிபறக்க
மணிகளீந்த குலக்கொடியே
வாழியநீ பல்லாண்டு
வற்றாத வளமோடு

நூரம்மா நூரம்மா

நூரம்மா நூரம்மா
நீங்கதான் என் ஒரே அம்மா

பெத்த பத்து தினங்களுக்குள்ளேயே
சித்திரையில் பிறந்து சீரழித்தவனே என்று
பெத்த அம்மா என்னை
எட்டி எறிஞ்சிட்டாங்க நூரம்மா

விபரம் தெரிஞ்ச என் பத்து வயசுல
அம்மா மடியில ஆசையா
உட்காரப்போன என்னை
சனியனேன்னு குதறி நான் குப்புறக் கவிழ
தூக்கி எறிஞ்சிட்டாங்க நூரம்மா

எந்த முகத்துல எல்லாம்
பாசம் தெரிஞ்சுதோ
அந்த முகத்தையெல்லாம்
அம்மா அம்மான்னே பார்த்தேன் நூரம்மா

ஆனாலும்
எந்த முகத்திலேயும்
அது நிரந்தரமாத் தங்கல நூரம்மா
உங்க முகத்தைத்தவிர

என்னைக் கட்டிக்கிட்டவளும்
உனக்கொன்னும் நான் அம்மாவாக முடியாது
என்னைப் பொண்டாட்டியா மட்டுமே
பாருன்னு தன் வேதனையைச் சொல்லி
அழுது முடிச்சிட்டாள் நூரம்மா

எப்படி நூரம்மா உங்களால மட்டும்
அன்னிக்குப்போலவே இன்னிக்கும்
என்னைத் தாய்ப்பாசத்தோடயே
பார்க்க முடியுது

பெத்த மூணும் வளர்த்தது ஒண்ணும்னு
நாலும் நாலுமாதிரி
என்னைப்போல யாருமே இல்லேன்னு
சொன்னீங்களே நூரம்மா
நான் எப்படி நூரம்மா
உங்களை மாதிரியே இருக்கேனா நூரம்மா

பெத்தது முணு வளர்த்தது ஒண்ணு
வந்ததும் ஒண்ணுன்னு என்னையும் பிள்ளையா
ஏத்துக்குவீங்களா நூரம்மா

தப்பு செஞ்சா பிள்ளைகளைக்
கண்டிக்கத்தோணும் தண்டிக்கத் தோணாது
என்னை நீங்க கண்டிக்கவும் இல்லை
தண்டிக்கவும் இல்லை ஆனால் நானா என்னைத்
தண்டிச்சிக்கிட்டேன் நூரம்மா

பதினைஞ்சு வருசம்
ஒரு தாய்முகம் காணாதவனா
தாயன்பை இழந்தவனா
தண்டிச்சிக்கிட்டேன் நூரம்மா

இப்பவும் இந்தப் பாழும் உயிருக்கு
உயிரின் ஆறுதலுக்கு எதுவுமே இல்லை நூரம்மா
யாருமே இல்லை நூரம்மா
தன்னந்தனியா அதுபாட்டுக்கு ஏங்கி ஏங்கி
துவிச்சித் துடிக்குது நூரம்மா

அந்தத் தவிப்பும் துடிப்பும் ஏக்கமும்தான்
எனக்குள்ள கருணையாவும் அன்பாயும் பாசமாயும்
ஊற்றெடுத்துக் கொட்டுது நூரம்மா

அழுது நிக்கும்போது ஏன்டான்னு கேட்க
ஆளில்லாத எல்லோருமே அனாதைங்கதானே நூரம்மா
நானும் ஒரு அனாதைதானே நூரம்மா

நான் எத்தனை எத்தனை நாள்
கதறிக்கதறி அழுதிருப்பேன் நூரம்மா
எத்தனை எத்தனை முறை வெந்து வெந்து
செத்திருப்பேன் நூரம்மா

ஆனாலும் என்ன
இப்போது உங்கள் முகம் கண்டு
வாழ்கிறேனே நூரம்மா இதுபோதும் நூரம்மா
என் இதயத்தின் மிகமிக நெகிழ்வான நன்றிகள்
உங்களின் சிரித்த முகத்திற்கு நூரம்மா

ஆறுதலுக்கும் அன்புக்கும் அலையும் இதயங்கள்
கட்டுகளையும் காலங்களையும்
மதிப்பதில்லை நூரம்மா

வாழ்க்கையின்
வளைவுகளில் விழுந்து நெளியும்போது
நேராகவே செல்ல இயலுவதில்லை நூரம்மா

ஒருவன் அன்புன் ஆறுதலுமின்றி
அப்படியே செத்துபோகலாம் அல்லது
அதைப் பெறவேண்டிய போராட்டத்தில்
செத்துப்போகலாம் நூரம்மா

குழியிலும் அமைதியற்று ஆறுதலற்று
எப்படித்தான் நான் கிடப்பது நூரம்மா

பாசத்தின் உப்பு நீர்த் துளிகளை
எனக்கும் பகிர்ந்தளியுங்கள் நூரம்மா
அந்த ஒன்றிலாவது மீண்டும் பிறக்கிறேன் நூரம்மா

(சுதந்திர தினம் 2008)

சொர்க்கம்

உதட்டில்
மௌனம்
குடியிருக்கும்போது
உள்ளத்தில்
சொர்க்கம்
கட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது

புடலங்காய்ப் பந்தல்

காலில் கல்கட்டி
சுமையோடு தொங்கும்
புடலங்காய்கள்

நிமிர்த்தி
வளர்த்தால்தான்
நல்ல விலைக்குப்
போகும் சந்தையில்

இயல்போடு
வளர
புடலங்காய்களுக்கு
வழியே இல்லை

சுமைகள்
நீங்கும்போதும்
சாம்பாருக்குள்
செத்துவிடுகின்றன

மனிதர்கள்தாம்
இப்போது அதிகம்
தொங்குகிறார்கள்
புடலங்காய்ப் பந்தல்களில்

32 யாழ்நிலக் கவிதைகள்


இன வெறுப்பின்
நச்சு விரல்கள் கிளறக் கிளற
நெடிது பொங்கும்
எரிமலைக் குழம்புகளின்
ஊற்றுப் பதிவுகள்

சூழலின் முதலைப் பற்களால்
கடிபடும் மனக்குதிரைகள்
வெறிகொண்டமட்டும்
அழுந்தி அழுந்தி பதிக்கும்
ரணத் தடங்களின்
ரத்த மலர்கள்

37

தமிழச்சி

ஆயிற்று
இருபத்தியோராம் நூற்றாண்டு

இதுவரை இல்லாத் துணிச்சலுடன்
எழுந்து நிமிர்ந்து வீறுநடக்கின்றாள்
தமிழச்சி

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
பழைய ஒட்டடைகள் ஏதேனும்
கவ்விப் பிடித்துக்
கவிழ்த்துவிடாமலா போய்விடும்
என்ற அவலாசையில்
வழமை ஆயுதச்
சொல்வண்டுக் கூட்டங்கள்
சூழ்ந்து சுற்றி
நாரகாசமாய் ரீங்கரிக்கின்றன

ஆனாலும்
ஒற்றைச் சுண்டு நகத்தால்
கிள்ளியெறிந்து நடக்கும்
தமிழச்சியின் திண்மை நடை
அழகாய்க் காட்சிப்படுத்துகிறது
வெகுதூரத்திலில்லை
என்றெண்ணியிருந்த அந்த நாள்
இன்றே புலர்ந்த பெருமிதத்தை

அன்புடன் புகாரி

38 பனிக்கரடி முழுக்கு


அஞ்சு...

டொராண்டோ, கனடா
ஜனவரி 1, 2008 செய்வாய்
உயிரை உறையவைக்கும்
கடுங்குளிர்


நாலு....

ஒண்டாரியோ ஏரி
பனிக்கட்டிகள் மிதக்கும்
சிலீர் நீர்


மூணு....

ஆவிபறக்கும் சுடுநீர் மழையில்
குளித்துவிட்டு வெளிவந்தாலே
போர்வை தேடும் நாட்கள்


ரெண்டு...

கையில் சுடச்சுட சூப்பும்
உடலைச் சுற்றிய
துவாலை ஆடையுமாய்
ஏரியின் கரைகளில்
பலநூறு நீச்சல் வீரர்கள்


ஒண்ணு...

பத்துவயது முதல்
பாதிகிழம்வரை
ஆணும் பெண்ணுமாய்
இதோ இதோ என்று
துடித்துக்கொண்டு


ஓடு....குதி...

துவாலையைத்
தூர எறிகிறார்கள்
சரசரவென்று
ஏரிக்குள் விழுகிறார்கள்

உயிர்
துடியாய்த் துடிக்கிறது

வீல் வீல்
என்ற அலறல்கள்

முங்கு முங்கு
என்ற கூச்சல்கள்

சிலர் முங்க
சிலர் பின்வாங்க
அம்மாடியோவ்...

கரையில்
பல்லாயிரம் டாலர்கள்
வசூல்

உலகில்
சுகாதார நீருக்கு ஏங்கும்
ஏழை நாடுகளுக்கு
இந்த நன்கொடை...

நீர் நன்கொடை

இவ்வாண்டின் பெரும்பகுதி
சூடானின்
நீர்ச் சுகாதாரத்திற்கு...

வாங்க வாங்க கனடாவுக்கு
நாமும் முங்குவோம்...
இது பனிக்கரடி முழுக்கு

http://www.thestar.com/News/article/290378 http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20080101/Polar_dip_080101/20080101?hub=TorontoHome