தமிழ்முஸ்லிம் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? நண்பராய் இருந்து நடப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா?
*
ஊரலசி உறவலசி
உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
பசுங்கிளியக் கண்டெடுத்து
வேரலசி விழுதலசி
வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
அணிவகுப்பார் பெண்பார்க்க
மூடிவச்ச முக்காடு
முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
தரிசனமும் கிடையாது
ஆடியோடி நிக்கயிலே
ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
உதைபடவும் வழியுண்டு
பாத்துவந்த பெரியம்மா
பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
நல்லழகுப் பெண்ணென்பார்
ஆத்தோரம் அல்லாடும்
அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
முடியாது மாத்திவைக்க
நாளெல்லாம் பேசிடுவார்
நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
பரிசந்தான் போட்டிடுவார்
ஆளுக்கொரு மோதிரமாய்
அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
மாறாது வாக்குத்தரம்
முதல்நாள் மருதாணி
முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
பச்சையிலைத் தேனமுதை
இதமாய்க் கைகளிலே
இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
ஊட்டுவார் சர்க்கரையை
மணநாள் மலருகையில்
மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
மணமகன் செல்லுகையில்
அனைவரும் வாழ்த்திடுவர்
அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
புரையேறித் சிரித்திடுவாள்
வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு
மொட்டு மல்லிமலர்
மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
குளுகுளுப் பந்தலிலே
சுற்றிலும் பெரியவர்கள்
சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
செவியோரம் கூத்தாட
வற்றாத புன்னகையும்
வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
உட்கார்வார் மாப்பிள்ளை
உண்பதை வாய்மறுக்க
உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
எல்லாமும் துடிதுடிக்க
கண்களில் அச்சங்கூட
கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
பொன்னெனச் சிவந்திருக்க
சின்னக் கரம்பற்றச்
சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
மறுப்புண்டோ மணமகளே
என்றே இருவரையும்
எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
நடுவரான பெரியவரும்
சம்மதம் சம்மதமென
சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
ஊரேட்டில் ஒப்பமிட
முக்கியப் பெரியோரும்
முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
தம்பதிகள் இவரென்று
சந்தோசம் விண்முட்டும்
சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
வாழ்த்துக்கள் கூறிநிற்கும்
முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்
18 comments:
migavum urukkamaaga ezhudhiyulleer.
ennai ennamo seydhu vittadhu intha kavithai.
excellent really excellent
affectionately yours
n suresh
மிக்க நன்றி சுரேஷ்
அருமை நண்பர் புகாரி,
ரசித்துப் படித்தேன் - அலசுதல் அருமை. பெண் பார்க்கும் போது ஆண் பார்க்க முடியாமல், பெரியம்மா,தங்கை என அனைவரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. பரிசம் போடும் போது பார்க்க முடியாத நிலை.
மணப்பெண் மறுப்பில்லை எனக்கூறி ஊரேட்டில் ஒப்பமிட வேண்டாமா ??
//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்//
திருமணத்தின் முத்தாய்ப்பே இது தான். பெண்ணின் தாய் படும் பாடு - திருமணத்தின் போது மணமக்கள் என்று உறுதியான பின்னர், அவள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? வைர வரிகள் பாராட்டுதலுக்குறியவை.
வாழ்த்துகள்
நன்றிகள் சீனா
உங்கள் பாராட்டு என்னை மீண்டும் அந்த நாளுக்கே இழுத்துச் சென்றது.
நன்றாக ரசிக்கிறீர்கள்!
அன்புள்ள புகாரி,
"கல்யாணமாம் கல்யாணம்" வாசித்தேன்.
...இல்லை அலசினேன்.
அதில் காதல் மட்டுமே இருந்தது.
கடைசியில் காதலின் உடன்பிறப்பான கண்ணீரும் இருந்தது.
கல்யாணங்களில் விறைத்துநிற்கும் காசுதான் இல்லாமலிருந்தது.
கவிஞரின் உள்ளம் தெரிந்தது.
உங்கள் காதல் வாழ்க.
மனைவியை உளமார நேசிப்பவர்களால்தான் இப்படி வாழ்த்தமுடியும்.
அன்புடன்,
மு.குருமூர்த்தி
புகாரி, அருமையாக தஞ்சை இஸ்லாமியர் திருமணத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள்...இல்லை...பாடியுள்ளீர்கள்!! அறுசுவை விருந்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் :)
//கண்களில் அச்சங்கூட
கருத்தினை சைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
பொன்னெனச் சிவந்திருக்க//
இதில், 'சைமூட' என்பது என்ன?
அன்பின் தஞ்சாவூரான்,
உங்களை வலைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம், நீங்கள் என்னடாவென்றால் என் வலைப்பூ வந்துவிட்டீர்கள். தஞ்சாவூர் என்றதும் ஓடிவந்துவிட்டீர்கள் போலும். உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள். தஞ்சாவூர்க் காரர்களெல்லாம் சேர்ந்து ஒரு வலைப்பூ தொடங்கலாம் என்று யோசித்துவருகிறோம். உங்கள் மறுமொழியை இடுங்கள் அறிமுகத்தோடு.
இனி கவிதைக்கு வருவோம், உங்கள் பாராட்டுக்கள் என்னைச் சீராட்டின.
நீங்கள் சொன்னதும்தான் ஓடிச் சென்று பார்த்தேன். இந்தக் கவிதை முதலில் திஸ்கியில் எழுதப்பட்டது பிறகு யுனித்தமிழுக்கு மாற்றப்பட்டது. அப்படி மாறும்போது சில எழுத்துக்கள் தொலைந்திருக்கின்றன. இப்போது வாசித்து சரிசெய்திருக்கிறேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடுங்கள்.
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் விருந்துமட்டுமல்ல இன்னும் விசயம் நிறைய உண்டு, ஆனால் கவிதை காவியமாகிவிடுமே பரவாயில்லையா?
நம்மூர் கல்யாணங்களெல்லாம் காவியங்கள்தானே என்கிறீர்களா :)
புஹாரி,
//உங்கள் மறுமொழியை இடுங்கள் அறிமுகத்தோடு.//
போட்டுட்டேன் :)
//நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடுங்கள்.//
ஆச்சு :)
//ஆனால் கவிதை காவியமாகிவிடுமே பரவாயில்லையா?//
பரவாயில்லை. புஹாரிக் காவியம் - நல்லாத்தானே இருக்கும் :)
//நம்மூர் கல்யாணங்களெல்லாம் காவியங்கள்தானே என்கிறீர்களா :)//
அதே... :)
தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ தொடங்கும் திட்டம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு தஞ்சாவூர்க்காரன். இணைந்துக் கொள்ளட்டுமா உங்களுடன்.
அன்புடன்
மஸ்தூக்கா
நிச்சயமாக மஸ்தூக்கா, உங்களைப் பற்றி கூறுங்களேன்.
அன்புடன் புகாரி
பின்னூட்டத்திற்கு கூட உடனுக்குடன் பதில் அளிக்கும் தங்கள் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறேன். இது தான் தஞ்சைக்காரர் என்பதோ.
என்னைப் பற்றி
இயற்பெயர் அப்துஸ்ஸலாம்.
புணைப் பெயர் மஸ்தூக்கா.
சொந்த ஊர் திருப்பந்துருத்தி்
எமது வலைப்பதிவுகள்
தமிழ் இஸ்லாம் அரங்கம்
www.masdooka.wordpress.com
தமிழ் இஸ்லாம் அஞ்சல்
www.masdookaa.wordpress.com
தமிழ் முஸ்லிம் தாரகை
www.masdooka.blogspot.com
ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்
www.akkuroriental.blogspot.com
அன்புடன் புகாரி
அழகான பெயரைத் தேர்வு செய்துவிட்டீர்கள். மடலின் இறுதியில் அன்புடன் மஸ்தூக்கா என்று போட்டால் உங்களை காப்பி அடித்ததாகிவிடும். எனவே மகிழ்வுடன் மஸ்தூக்கா
கவிதை ஓர் பூப்பல்லக்கு.
மிகவும் அருமையாக இருக்கின்றது.
வாய்விட்டுப் படித்தேன். ஓசைகள் இசையாய் ஒலித்தது.
உங்கள் கவிதைக்கு நான் ஓர் ரசிகை
ஊரலசி ,உறவலசி ,நட்பலசி .வேரலசி ,விழுதலசி .
முதலில் புரிய வில்லை ..அலசி ..ஆராய்ந்து ..
அட அன்றாடம் பேசும் தமிழ் ..
அன்பு கவி புகாரி ..உங்கள் தமிழ் அழகு .
கருத்தழகு ..மண மகளின் மகிழ்ச்சி முதல்
பெற்ற தாயின் கண்ணீர் வரை அலசி விட்டது
உங்கள் கவிதை அபாரம் ....
சகோ க்ரவுன் கவிதைகளின் ரசிகராக இல்லை ஒரு கவிதையாகவே இருக்கிறார். அவரின் பின்னூட்டங்கள் கவிதையின் திசையில் பயணப்படுகின்றன. உங்களால் கவிதைகள் >>>>>>>>>
அன்பு கவி புகாரி ...கிரௌன் என்கிற தஸ்தகீர் ..இயற்கையான பிறவி கவிஞன் ..பள்ளி பருவத்தில் தமிழ் புலவரின்
செல்ல பிள்ளை ..கண்களால் பார்த்த மறு நிமிடம் இல்லை இல்லை மறு நொடியில் கவி மழைபொழியும் ..நீ இங்கு சுகமே ..
நான் அங்கு சுகமா ..என்ற சினிமா பாடல் வரி ..பாடல் வர இரண்டு வருடத்திற்கு முன் இவர் பாடி விட்டார் ...
கவிதையால் தூக்கம் துலைத்தவர்..தற்போது கவிதைக்கு கடிவாளம் இட்டு வைத்துள்ளார் ..இவரின் எண்ணஓட்டத்திற்கு
எழுதுகோலால் ஈடு கொடுக்க முடியாது ..டேப் ரிகார்டர் ..அல்லது கணணி ஓகே ..இவரிடம் பேசுவது ..கவியரங்கம் தான் ..
//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்//
என்னமோ ஏதோ என்
எண்ணங்களை செய்துவிட்ட வரிகள்..
முழு கவிதையுமே.. ஆனந்த கண்ணீரை
வரவழைத்துவிட்டது..
அப்படியே மணப்பெண்ணை மறுவீடு
அனுப்பிவைக்கும்போது அந்த உணர்வுகளை
உங்கள் பாணியிலே.. பாடுவீர்கள் என காத்திருக்கிறேன்..
//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்//
என்னமோ ஏதோ என்
எண்ணங்களை செய்துவிட்ட வரிகள்..
முழு கவிதையுமே.. ஆனந்த கண்ணீரை
வரவழைத்துவிட்டது..
அப்படியே மணப்பெண்ணை மறுவீடு
அனுப்பிவைக்கும்போது அந்த உணர்வுகளை
உங்கள் பாணியிலே.. பாடுவீர்கள் என காத்திருக்கிறேன்..
பல காட்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். திருமணத்திற்கு போகாமலேயே போனது போன்ற அனுபவம். அற்புதம்.
தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ தொடங்கும் திட்டம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு தஞ்சாவூர்க்காரன். இணைந்துக் கொள்ளட்டுமா உங்களுடன்.
அன்புடன்
மஸ்தூக்கா
------------------
நான் தஞசாவூர்க்காரராக பெருமையாக இருந்த என்னை நாகப்பட்டினமாக்கிவிட்டார்கள்
அன்புடன்
Post a Comment