ஈழ மகா காவியம்!
ஈழ எழுத்தாளர்கள் ஏராளமாக இங்கும் அங்கும் எழுதி இருக்கிறார்கள். முழுமொத்த காவியத்தை ஓர் ஈழத்தவர் எழுதத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.
உயிரழிந்த பூமியில் எங்கும் புலம்பெயர்ந்துவிடாமல் அங்கேயே வாழ்ந்தவர்கள் எழுதினால் அது வெகு சிறப்புதான். எழுதட்டும்.
கவிஞர் வைரமுத்துவுக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.
விமரிசனங்களை நூல் வெளிவந்தபின் செய்தால், அதுவே நல்ல சரித்திரமாக நல்ல புதுக் காவியமாக அமையும்.
இப்போதே கிளம்பும் விமரிசனங்கள் அந்த நூலை வாங்கத் தூண்டும் விளம்பரங்களாகவே அமையுமே தவிர வேறொன்றையும் சாதிக்காது.
எழுது எழுதவிடு
அதுவே இலக்கியக் கோட்பாடு!
கண்ட செய்தி:
>>>ஈழ மகா காவியம் எழுதுவேன் - வைரமுத்து
சொல்லாமல் விட்டது , அதை புத்தகம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்வேன் .<<<

காணுங்கள் என் செய்தி:

ஆயிரத்துக்கு விற்றால் என்ன அல்லது ஒரு லட்சத்துக்கு விற்றால்தான் என்ன?

எல்லா எழுத்தாளர்களும் பாரதியைப்போல பரதேசியாகவே அலைந்து எந்த நன்றிகெட்டவனும் இறப்புக்கும் வராத நிலையில் பரிதாபச் சவ ஊர்வலம்தான் பெற வேண்டுமா?

ஒரு பல்பொடியை விற்கக்கூட பல்லாயிரம் விளம்பரங்கள்.

அம்மா படம் ஒட்டினால்தான் சோறு இல்லாவிட்டால் செத்துப்போ என்னும் அரசியல் விளம்பரங்கள்

ஒவ்வொரு அரசியல்வாதியும் பிச்சைக்காரனாய்த் தொடங்கி உலக பெரும் பணக்காரனாய் ஆகிறார்கள்.

தன் சொந்த நூலின் விற்பனைக்காக ஓர் எழுத்தாளன் / கவிஞன் செய்வதா கேடு?

எழுத்தாளனும் கவிஞனும் கோடீசுவரனாய் இருந்து எழுத்தில்மட்டுமே வாழத் தொடங்கினால் பிச்சைக்காரன்தான் தமிழ்நாட்டில்.

ஒரு நூலையும் காசுகொடுத்து வாங்க ஒரு தமிழனும் எந்தத் தெருவிலும் கிடையாது.

எழுத்தாளன் விரக்தியில் வாடுகிறான் வறுமையில் சாகிறான். சினிமாதான் சோறுபோட அழைக்கிறது. அதற்கு அவன் தன் சுய காட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், கீழே இறங்கி சமரசம் செய்ய வேண்டும், வணிகம் எழுதவேண்டும்.

ஒரு நல்ல நூல் ஒரு கோடி பொன் பெறும், நூறு ரூபாய் என்பதும் ஆயிரம் நூபாய் என்பதும் அதற்கான வெகுமதியே அல்ல என்று சொன்னால்தான் நாம் தமிழையும் இலக்கியத்தையும் நேசிக்கும் தமிழர்கள்.

இல்லாமலா தமிழ் வளரும்?

ஓர் எழுத்தாளனைக் கொன்றுவிட்டா தமிழ் உண்ணத் துடிக்கிறீர்கள் மக்களே?
சொர்க்கமும் நரகமும்
உனக்கு
வெளியே இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
உனக்கு
உள்ளே இருந்தால்
அது
பூலோகம்













நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
நாள் ஒன்று
நிச்சயமாய் வரும்
உறுதியாய் வரும்
சத்தியமாய் வரும்
என்று
மிகமிகத் திடமாய் நம்புகின்றேன்
நான்

ஆனால்
அந்த நாளை நினைத்தால்தான்
பாட்டி
பேய்க்கதைச் சொல்லிமுடித்த
நடு இரவில்
நூறு ரத்தக் காட்டேறிகளுக்கு
நடுவில் நிற்கும் சிறுவனைப்போல
என்
உயிரின் உள்ளும் புறமும்
நடுக்கமோ நடுக்கமாய்
நடுங்குகின்றன

இந்த
உலக அழிவைச்
சந்திக்கும் தைரியம்
எனக்குத்
துளியும் இல்லையே

ஆனாலும்
கடும் போராட்டத்திற்குப் பின்
நான்
அந்த நாளைச் சந்திக்க
மெல்ல மெல்லத்
தயாராகிவிட்டேன்

நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
அந்த அரிய நிகழ்வு
ஒருநாள்
நிகழத்தானே வேண்டும்

இறைவா
அருள்வாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

பொங்கல் நாளில்...

நண்பரின் கருத்து:

மாட்டுவண்டிச் சவாரிக்கு பின் காளைகள் சீழ் பிடித்து, நோய்வாய்பட்டு எப்படி இறக்கின்றன என்பதை கண்ணால் பார்த்தவன் நான்

என் மறுமொழி:

அது தாறுமாறாய்த் தண்ணியடித்துவிட்டு கொடியி மிருகமாய் மாட்டு வண்டியைப் பயன்படுத்திய வக்கிரக்காரனின் இழிச் செயலால்.

தன் சொந்தப் பிள்ளைபோல் மாடுகளைக் காப்பவனே உழவன். உழவன் ஒருபோதும் மாட்டிற்குத் தீங்கு செய்யமாட்டான்.

நான் கிராமங்களில் வாழ்ந்தவன். மாடுகளை காலை எழுந்தவுடன் தடவிக்கொடுத்து முத்தமிடும் பல்லாயிரம் உழவர்களைக் கண்டிருக்கிறேன்.

மாடுகள் கதறினால் நடு இரவிலும் உறக்கத்திலிருந்து வீறிட்டு எழுந்து மாடுகளைக் கண்காணித்து நல்லது செய்பவனே கிராமத்தான்.

பெத்த பிள்ளைகளைவிட அதிகம் அன்பு பாராட்டுவார்கள் காளையிடமும் பசுவிடமும் உழவர்கள்.

இது என் அனுபவம்

அன்புடன் புகாரி

பொங்கல் ஏன்?

உலக உயிரினங்கள் வாழ உணவே முதல் அவசியம். உழவர்களே அத்தொழில் செய்பவர்கள்.

அவர்களளைச் சாதி மதம் இனம் மொழி நாடு கடந்து பார்க்க வேண்டும்.

அவர்கள் எல்லா மதங்களிலும் எல்லா இனங்களில் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் உள்ளனர்.

அவர்கள் இல்லையேல் உலகம் அழிந்துபோகும்.

அவர்களுக்கும்....

அவர்களுக்குத் துணை நிற்கும் நிலம் நீர் காற்று நெருப்பு வானம் ஆகிய அனைத்து பஞ்ச பூதங்களுக்கும்...

கால்நடைகளுக்கும்

(இன்று உழவு இயந்திரங்களையும் நீரெடுத்துப் பாய்ச்சும் இயந்திரங்களையும் இன்னும் உழவுக்குப் பயன்தரும் அனைத்து இயந்திரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்)

நன்றி சொல்லும் நல்ல நாளே

பொங்கல் திருநாள்.

அவர்களைக் கொண்டாடுவோம்,

அவர்களுக்குத் துணை நிற்கும் அனைத்தையும் பாராட்டி நன்றிகூறி கொண்டாடுவோம்.

அந்த நன்றி இல்லாதவன் மனிதனா?

மாடுகூட இல்லை!

ஆகவே...

மனித குலத்துக்கே பொங்கல்

மிக மிக அவசியமான ஒரே பெருநாள் என்பேன்
உலகம்
முழுவதையும்
அன்பால்
ஆள நினைத்தால்

ஆயுதங்கள்
தேவையே இல்லை

ஊழல்
அரசியலாலும்
கீழோர்
அடக்குமுறையாலும்
சாதிமத
வெறியாட்டங்களாலும்
பெருவணிகர்
கொண்டாட்டங்களாலும்
ஆள நினைத்தால்

ஆயுதத்தைத் தவிர
வேறெதுவும்
வாழப்போவதே இல்லை
வீட்டில்
வன்முறை செய்பவன்தான்
வீதியிலும் செய்கிறான்

ஒவ்வொரு
வன்முறையிலும்
ஒரு தாயேனும் அழுகிறாள்

ஒவ்வொரு
தாயின் கையிலும்
வன்முறையைக்
கழுவித் துடைக்கும்
துடைப்பம் இருக்கிறது

*
வன்முறைக்கு
இரு வழிகள்

ஒன்று
குத்து வெட்டு

இரண்டு
நரம்பிலா நாவினால்
சுடும்புண்

கடுஞ் சட்டமும்
செயலாற்றும் ஆட்சியும்
இரண்டையும் ஒழிக்கும்

யாரும் யாரையும்
விரும்பவும் செய்யலாம்
வெறுக்கவும் செய்யலாம்

உன் வெறுப்பால்கூட
யாருக்கும்
யாதொரு பாதகமுமில்லை




பூமியின்
விடியலுக்கு
கிழக்கு மட்டுமே போதும்

லஞ்ச ஊழல் ஒழிக்கவோ
அத்தனை திசைகளும்
ஒன்றாய்க் சேர்ந்து
விடிந்திடல் வேண்டும்

லஞ்சம்
கொடுப்பதும் குற்றம்
பெறுவதும் குற்றம்

கொடுத்ததைக் கண்டதும்
கொதித்தெழவேண்டும்

பெற்றதைக் கண்டதும்
படைசூழவேண்டும்

திசைகளின்
கைகள் ஒவ்வொன்றிலும்
தீப்பந்தம் வேண்டும்

விடியல்
நம் உலகில்
உருவாகியே தீரவேண்டும்

அதிகாரிங்களுக்கும்
அரசியல்வாதிங்களுக்கும்
கெடைச்சாச்சு

காவல்காரங்களுக்கும்
கலப்படக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

பணக்காரங்களுக்கும்
பிச்சைக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

அட
எனக்கும் கெடைச்சாச்சு
உனக்கும் கெடைச்சாச்சு

இந்தியாவுக்குக் கிடைக்கலயாமே
இன்னுமே சுதந்திரம்?

வெள்ளையன் பட்டியிலேர்ந்து
மீட்டுக்கிட்டு வந்த குட்டியாட்டை
நம்ம வீட்டு பிரியாணிக்கின்னு
கட்டிவெச்சுட்டமாமில்ல

நீயே சொல்லு...

நூறு ரூவா லஞ்சம் கொடுத்து
குறுக்கு வழியில சாதிக்கும்போது
செல்லாத ஒத்தைச் காசா
இந்தியாவை ஆக்கிடறோம்னு
நமக்குத் தெரியாதா

சிறு லஞ்சம்
பெரு ஊழல்

இந்தியாவுக்குச்
சுதந்திரம் எப்போ?

நிழலைத் தேடியே
ஓடிடும் ஓட்டம்
இருளில் நின்று
தேம்பித்தான் விம்மும்

கனவின் கால்களில்
கட்டுகள் ஏது

நினைவின் முதுகில்
பாரங்கள் ஏது

நிஜத்தை நினைத்தால்
நிம்மதி இருப்பதில்லை

விலகிப் போய்விட
விருப்பம் வருவதில்லை

மறந்த திசைகளில்
பயணங்கள் தொடங்கு

விரிந்து வரவேற்கும்
வெளிச்சத்தின் கீற்று
முடிவிலா உப்பு மழையை
விழிகளில் பொழிந்து
அதனுள் தானே விழுந்து
துகள்துகளாய்க் கரையும் உயிர்களே
உங்களுக்கெல்லாம்
ஓர் நற்செய்தி

கவ்விய மையிருட்டின்
மயானக் கொடுமைகளில்
வெடித்துத் துடித்தாலும்
முழுதும் உதிர்ந்துவிடாமல்
இறுதிச் சொட்டு உயிரை
நடுங்கும் கரங்களில்
பத்திரப்படுத்திக் காத்திருக்கும்
கொடுந்துயர் இதயங்களுக்கு
உண்டு உண்டு
ஒரு பெரும் பிரகாச வெளிச்சம்

உனக்கே உனக்கான
அந்தச் சொர்க்கத்திற்காக
உன் கடைசி நரகத்திலும்
நம்பிக்கை புதையாமல்
பிரியும் உயிர்பற்றிப் பிடித்துக்
காத்திரு
அன்பு உயிரே
அன்பிலெல்லாம்
உயர்வான அன்பென்பது
யாதெனிலோ
அது
நிராகரிக்கப்படுவோர் மீது
காட்டும்
பரிசுத்தமான
அன்புதான்

எவருக்குமே விளங்காத
இதயங்களை நெருங்கி
உண்மை அன்பைப்
பொழியும்போது

எல்லோருக்கும்
புரிந்துபோனவர்களாய்
அவர்கள்
நிறம்மாறிவிடுகிறார்கள்

வாழ்வோம்
தீவிரவாதிகளையும்
அன்புக் காட்டியால்
திசைமாற்றி

சகிப்போம்
அறியாமைகளையும்
அன்புக் கரங்களால்
அள்ளியெடுத்து

இணைவோம்
பொருந்தாத இடங்களிலும்
அன்புப் பசை
ஒட்டி

இனிய
புதிய
வாழ்த்துக்கள்
என்னை ஏன் இப்படி
உடைந்தழிய வைக்கிறாய்?

காயங்களை
ஆற்றும் மயிலிறகு
காயம்பட்டே செத்துப்போவதா?

என் செவிக்குள்
உன் உதட்டுச் சிறகுகளை அசை
உன் துயரங்களிலிருந்து
பறந்து பறந்து வெளியேறுவாய்

அரவணைக்க வரும் உயிரை
நிராகரித்தல் தற்கொலை

உன் மன அமைதியாய்
என் பெயர் மாறினால்
என் உயிர் இருப்பின்
பொருள் விளங்கும் எனக்கு

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள்
கட்டிவைத்திருக்கிறாயே

உனக்கே
நீ ஏன்
எதிரியானாய்

ஒரு கனவு விரிகிறது
என் மடியில் நீ
நான் பாடுகிறேன்

கங்கை
நீர் வீழ்ச்சியாய் விழுவதைப்போல்
என் கண்கள்

வார்த்தைகள் அழுகைக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
சிதைந்து போகாத அர்த்தங்களுடன்
வெளிவருகின்றன

அது எனக்கு
உயிர் வாழ்க்கை

உன்னால்மட்டுமே
அதைத் தரமுடியும்

வேறு எவர் தந்தாலும்
ஏற்றுக்கொள்ளும் உள்ளம்
இல்லை என்னிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்