அன்பின் மணி மணிவண்ணன்,
ஹார்வர்ட் தமிழ் இருக்கை
நான் துவக்கம் முதலாகவே, ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுவிலேயே நின்று கொண்டிருந்தேன்.
நாலும் தெரிந்த என் இனிய தமிழ்பற்று நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் ஏதேனும் சிறந்த பயன்பாட்டைச் சொல்லி என்னை ஆதரவின் பக்கம் இழுப்பீர்கள் என்று நம்பினேன்.
ஆகையினால்தான் நான் தொடர்ந்து கேள்விகள் கேட்டேன். ஆனால் என்னை மீண்டும் அதே நிலைக்கே கொண்டு வந்து விட்டுவிட்டீர்கள்
ஆகவே இப்போதும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.
நான் ஆதரிக்க இந்த இருக்கை எந்த பெரிய நல்லதையும் செய்யப் போவதில்லை
நான் எதிர்க்க இந்த இருக்கை எந்த ஒரு கேட்டையும் தமிழுக்குச் செய்துவிடாது என்றும் நம்புகின்றேன்.
அப்படியே கேடிழைத்தாலும், அது வடமொழியர் செய்ததுபோல கேடாக்க வழியே இல்லை என்றும் நம்புகின்றேன்.
தமிழ் அறிந்த தமிழனுக்கு இயலாது தமிழே அறியாத ஆங்கிலேயனுக்குத்தான் இயலும் என்று தமிழர்கள் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறோமே என்ற கேட்டினைத் தவிர வேறு கேடு எனக்குப் பெரிதெனத் தெரியவில்லை.
உண்மைத் தமிழர்களின் ஆறு மில்லியன் டாலர்களும் அயராத சேவைகளும் ஆங்கிலேயரின் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நன்கொடையாகிப் போகட்டும். நம்மூர் அரசியல்காரன் ஒருசில நிமிடத்தில் சம்பாதிக்கும் அற்பத் தொகைதான் அது.
ஓர் இருக்கைக்காக கடைக்கோடித் தமிழனும் தன் ஏழ்மையிலும் பொருள் தந்து உதவி இருக்கிறான். அத்தனை உயர்வாய் அவன் தமிழை மதிக்கிறான் என்ற எண்ணமே தமிழுக்குச் சிம்மாசனம் எனக்குக் கண்களில் நீர்.
தமிழ் இருக்கை என்பது
இரு கை ஓசை அல்ல
ஒரு கை ஆசை
தமிழுக்குச் சிலர் ஊட்டுகிறார்கள்
தமிழால் சிலர் ஊட்டப்படுகிறார்கள்
இந்த இருக்கைப் பணியில் நான் பெரிதும் நேசிக்கும் மிக உயர்ந்த, சிறந்த, நல்ல தமிழர்கள் இருக்கிறார்கள்.
அதைக் கண்டே நான் பலகாலும் மௌனமாகவே இருந்திருக்கிறேன்.
அந்த மௌன நாட்களிலும் எனக்குள் பெரும் சூராவளி உள்ளே சுற்றிக்கொண்டேதான் இருந்தது.
இன்றைய பாழ்நிலை நாட்களில், நாம் தமிழுக்குச் செய்யக் கூடையன எத்தனையோ இருந்தும் ஏன் இப்படி ஏன் இப்படி ஏன் இப்படி என்றே குமைவேன்!
தாய்நிலத் தெருக்களிலும்
தமிழ்வளர்ப் பாடங்களிலும்
புலம்பெயர்க் கூடுகளிலும்
புதுப்பிஞ்சு நாவுகளிலும்
தமிழை அழகாக வளர்க்க, வாழச் செய்ய இந்த இனிய உயர்ந்த தமிழர்கள் ஒன்று கூடட்டும் ஒருநாள். அந்த நாளுக்காகக் காத்திருப்பேன்
தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்
ஆழ்கடல் விழுந்து
உப்புநீர் விழுங்கி
மூச்சுமுட்டி
தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்
கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்
தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்
கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்
தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்
மஞ்சள் பூசிக்
குங்குமம் இட்டு
மாலைகள் சூடி
மலர்கள் தூவி
பறை மேளம் கொட்டி
மேற்கத்தியக் குத்தாட்டம்
ஆடிக் களிக்க
கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்
தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்
கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment