33

கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி

கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி

நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து

பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து

துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய் இறங்கி

வளர்முத்தத் தவிப்பு கொட்டும்
உயிர் வெள்ள நயாகரா

உன் குரல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
32

சில
குரல்களைக் கேட்கும்போதே
செத்துப் போகிறோமே
ஏன்

அந்த குரல்
உண்மையில்
நம்மை
என்னதான் செய்கிறது

ஏன்
அந்தக் குரல்
நம்முடனேயே இல்லை

ஏன்
அந்தக் குரல்
நமக்கே நமக்காக
வேண்டும் வேண்டும்
என்று
நாம் அடம்பிடிப்பதும்
இல்லை

நம் நாகரிகம்
நம்
தேவைகளைக்
கொன்று புதைக்கிறதா

நம் பண்பாடு
நம் வேர்களை
நீரின்றித்
தவிக்கவிடுகிறதா

ஏன்

ஏன்

ஏன்

இறைவன் படைத்ததை
மனிதன் மறுக்கிறான்
என்று கொள்ளலாமா
இதை

தெரியவில்லையே

ஆனால்....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 
31

நானா?
அழகா?
பொய் சொல்லாதீர்கள்
என்று
சிணுங்குகிறாய்

எனக்குத் தெரியாதா
உன் அழகில் விழுந்து
ஆழத்தில் மூழ்கிவிட்ட என்னை
உன்னை வர்ணித்து...
ஒரு கவிதை எழுதச் சொல்கிறாய்
என்று

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
30

குறிஞ்சியும்
பூதான்

ஈராறு கோடைகள்
முன்னாங்குக் குளிர்கள்
எப்படியோ கழிந்தன

எப்படியோ உடைந்தோடி
நீங்கிப்போன
நிலவுமடிப் பொழுதொன்றில்
வந்தது வசந்தம்

அந்த
வசந்தங்களின் வசந்தத்தில்
பூத்தது என் குறிஞ்சி

பூக்காது போமோ எனும்
நம்பிக்கை நெடுந் தவத்தில்
புயல் ஓய்ந்த மழைத்துளியாய்

உயிர்
சொட்டிச் சொட்டிச்
சிதற

கருந்தலை முட்களின்
உறக்கம் கடிக்கும் படுக்கையில்
எரிதனலாய்க் காத்திருந்தேன்

அடடா
அந்தக் குறிஞ்சியும்
பூத்தேவிட்டது

ஆம்
பூத்தேவிட்டது

ஆனால்....

மொட்டாகி
மொட்டுடைந்து மலராகி
பூவாய் அவிழ்த்த
தன் பொன்னிதழ்களைத்
தானே வாட்டிக்கொண்டு
மீண்டும்
உதிர்ந்தே போனது
என் காம்பினின்று...

இனியும்
பல பன்னிராண்டுகள்
குறிஞ்சியே
உனக்கே உனக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இப்படிச்
சொல்வதை
சிலர்
ஏற்கமாட்டார்கள்

சிலர்
மதங்கொண்டு
மிரட்டவும் செய்வார்கள்

ஆனால்
உண்மை இதுதான்

தமிழ்
என்னோடு
இல்லாமல் போயிருந்தால்
நான் என்றோ
செத்துப் போயிருப்பேன்


மலிந்துபோன கற்பழிப்புகளும் கண்டனக்குரல்களும்

வளர்ந்த
வண்ணமாய்த்தான்
இருக்கிறது

சின்னஞ்சிறு பெண்களை
நாசப்படுத்தும்
வன்புணர்ச்சி
பலாத்காரம்
கற்பழிப்பு...

அறம் துறந்தவர்களே
அதிகரிக்கிறார்கள்
நாளுக்கு நாள் நம்மூரில்

அபலைப் பெண்களைக் காக்க
சட்ட ஒழுங்கு
ஒழுங்காய் இருக்க வேண்டும்

திருத்தப்பட வேண்டியவர்கள்
காவல் துறையினர்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
அறந்துறக்கும் வக்கிரக்காரர்கள்

நேர்மையும் பொறுப்பும்
காவல் துறையினரிடம்
முழுமையாக வந்துவிட்டால்
அறம்பிறழ்வோர் அஞ்சுவர்

அஞ்சுதலை மிஞ்சுவோர்
அழிக்கப்படுவர்

வெறும் காவல் துறையைக்
குறைகூறினால் தீர்ந்ததா
அவர்களை ஆட்டுவிக்கும் ஆட்சியாளர்கள்
அறம் மிதிப்பவர்களாய் இருக்கும்போது

என்றால் அரசியல் வாதிகளே
இதற்கு முழுப்பொறுப்பு

இல்லை இல்லை
அந்த அரசியல்வாதிகளை ஏற்றி
சிம்மாசனத்தில் அமர வைக்கும்
நாமல்லவா குற்றவாளிகள்

அரசியல்வாதிகளின்
ஊழலை ஆதரிக்கிறோம்
அவர்களிடமிருந்து நம் செல்வத்தையே
பிச்சையாய்ப் பெற காத்துக்கிடக்கிறோம்

அவர்களின் உண்மையான கைக்கூலிகளாய்
நாம்தான் இருக்கிறோம்

அரசியல்வாதிகள் அறம்பிறழும்போது
அடித்து நொறுக்கி அறமற்றவனே வெளியேறு
என்று பதவி நீக்கம் செய்ய நாம் என்ன செய்கிறோம்

ஆகவே மக்களே
மக்களாகிய நாம்தான் இப்படிச்
சின்னஞ்சிறு கண்மணிகளைக் கொடூரமாய்
வன்புணர்ந்து வன்புணர்ந்து வீதியில் எறிகிறோம்.

நாம்தான் மக்களே நாமேதான்
நம்பிக்கையைவிட
அதிக
விளைச்சல் தரும்
இன்னொரு பயிர்
கிடையவே கிடையாது
தனித்தமிழா? தனித்துவிடப்பட்ட தமிழா?

மொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்

அதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.

கிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.

அவை தமிழ்ச்சொற்கள் அல்ல. 

ஒருவன் தன் பெயரைவிட அதிகம் இன்னொரு சொல்லை ரசிக்க மாட்டான். அந்தப் பெயரை கொலைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.

மொழி இலக்கணம் என்ற எந்தப் போர்வையைப் போற்றிக்கொண்டும் அதைச் செய்ய எவருக்கும் உரிமை இல்லை.

இலக்கியத்திற்கே இலக்கணம்
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை

இலக்கியமே காலங்கள்தோறும் காய்த்துக் கனிந்து கொத்துக் கொத்தாய்ப் பூத்து மொழியைச் செழுமையாக்குவது

மைக்ரோசாஃப்ட், விண்டோஸ், ஹோண்டா, ஹெவ்லட் பாக்கார்ட், பஹ்ரைன் என்பனவெல்லாம் நிறுவனம், மென்பொருள், நாடு போன்றவற்றின் பெயர்கள்.

இவை எதுவுமே தமிழ்ச்சொல் இல்லை.

இதையும் ஒரு கொலைவெறியோடு அனுகுவது நிச்சயமாகத் தமிழ்ப்பற்று இல்லை

என்றால் உண்மையான தமிழ்ப்பற்று என்பது என்ன?

தமிழை வளர்த்தெடுக்கும் வழிகளைக் காண்பதே தமிழ்ப்பற்று.

வீட்டில் தமிழில் உரையாடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் அழிந்துபோய்விடும்.

இப்படி வீட்டுக்குள் வந்து தமிழ்த்தமிழ் என்று தமிழ் பேசுவோரைக் குறை சொன்னாலும் தமிழ் அழிந்துபோகும்

தமிழனின் கலைகள் எல்லாம் தமிழையே மொழியாகக் கொண்டு வளரவேண்டும்

உலகின் இன்றே தோன்றிய அறிவியல் புரட்சியெல்லாம் அந்த நொடியே தமிழில் மொழியாக்கம் செய்யப்படல் வேண்டும். அப்படியான தொரு மென்பொருள் உருவாக்கத் தமிழன் பாடுபடவேண்டும்

உலகின் அனைத்துக் கலைகளையும் இலக்கியங்களையும் அறிவியல் நுட்பங்களையும் பொருளாதாரப் புரட்சிகளையும் கல்வி ஆவனங்களையும் தமிழுக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

அதைச் செய்யாமல் வசதியாக அடுத்தவரைக் குறைகூறித் திரிய எளிய வழியான எழுத்தை எடுத்துக்கொண்டு குசுப்பு, கரிகரன், சானு, சாருசு என்றெல்லாம் பேசித்திருவது தமிழை புதைத்துப் புல் முளைக்கச் செய்துவிடும்

தமிழால் எதுவும் முடியும் அது எப்படியும் வளையும் என்று நிறுவ இங்கே எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களே உண்மையான தமிழ்ப்பற்றாளர்கள். மற்றோர்  போலிகளே
29

உன்னோடிருந்த
நொடித் துகள்கள் ஒவ்வொன்றும்
இன்னமும் எனக்குள்
தூண்டி விட்டுக்கொண்டே
இருக்கின்றன

முடிச்சிட்டுக் கட்டி
ஞாபகங்களால்
நீந்தித் தொடமுடியாத
மாய மரண மௌனத் தீவில்
இட்டு வைத்திருக்கும்
என் சுயத்தை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
28

என் தாக நெஞ்சின்
நெடுங்காலக் கற்பனையிலிருந்து
நழுவித் தரையிறங்கி
என் மடிவிழுந்த செல்லமே

என் முத்தங்களின்
மூடிவைக்காத பெட்டகமே

உன்
அப்பழுக்கற்ற அன்பிருக்க
என் நூறையும் கடந்து
ஒவ்வோர் பொழுதிலும்
இப்பொழுதுதான்
புதிதாய்ப் பிறந்தேன் என்ற
நினைவுத் துள்ளலோடும்
நீங்காத நிம்மதியோடும்
நெடுங்காலம் வாழ்வேனடா
என் செல்ல நிலவே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கனடா தொலைக்காட்சியின் தமிழ் மரபுத் திங்கள் பற்றி உரையாடிவிட்டு வெளியில் வந்தபோது ஓர் ஈழ நண்பர் கேட்டார்.
முஸ்லிம் பொங்கல் கொண்டாடுவார்கள் என்கிறீர்களே, பொங்கல் அன்று யாரைக் கும்பிடுவீர்கள்?

அவரின் ஐயத்தின் அடிப்படை எனக்குப் புரிந்தது.
...
பொங்கல் என்பது உணவு தரும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்லும் நன்றிநவிலல் நாள் Thanks Giving Day.

நன்றியைச் சொல்லிவிட்டு நீங்கள் சாமி கும்பிடச் செல்லுங்கள் பிழையில்லை ஆனால் சாமி கும்பிடத்தான் பொங்கல் என்று கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். குழப்பத்தோடு விடைபெற்றார்.
ஆறுதலும் நிம்மதியுமே இறைவன்

ஆறுதலும் நிம்மதியும்
தரமாட்டான்
அவந்தான் இறைவன்
என்று
கூறிப்பாருங்கள்

பக்தர்கள்
பைத்தியங்களாய்
ஆகிவிடுவார்கள்

மனிதர்களிடம்
ஆறுதலும் நிம்மதியுமாய்
இருந்துபாருங்கள்

நீங்கள்
இறைவனின் அருகே அருகே
சென்றுகொண்டிருப்பதை
உணர்வீர்கள்

ஆறுதலும் நிம்மதியுமாய்
இருப்பதும்தான்
இறைவனை அடையும்
ஒரே வழி

மனித நேயம் காப்பதும்
இறைவனை அடைவதும்
இருவேறு செயல்கள் அல்ல

சாதியா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
மதமா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
கடவுளா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்

ஆனால் 
இந்த மூன்றையும் கொண்டு 
மனிதர்களிடம்

- ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தால்
- வெறுப்புணர்வுகள் எகிறினால்
- வன்முறைகள் தூண்டப்பட்டால்

மனிதன் படைத்த இந்த மூன்றையும் 
மனிதனே முயன்று அழிக்கத்தான் வேண்டும்

மனிதன் படைக்காத
இறைவன் ஒருவன் இருக்கிறான்

அவனுக்கு நாம் இட்டுவைத்திருக்கும்
இந்தப் பெயர்கள் கிடையாது
இந்தப் பண்புகள் கிடையாது
இந்த இலக்கணங்கள் கிடையாது

வரையறுக்கப்பட முடியாத
எல்லைகளற்ற
சிந்திக்கவியலாத
ஒருவனெனக் கொண்டால்
இறை நம்பிக்கை
நிச்சயமாகப் பிழையே இல்லை

ஆறுதல்
நிம்மதி
நம்பிக்கை
என்றதில்
நன்மைகளே உண்டு

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா

கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?

மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?

கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை

ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு

என் மனைவிக்குப் பிடித்தனை
அவள் செய்யட்டும்
அதில் எனக்கு விரோதம் இல்லை.
என் கணவனுக்குப் பிடித்ததை அ
வன் செய்யட்டும்
அதில் எனக்கு உடன்பாடுதான்.
ஏனெனில்,
நாங்கள் இருவரும்
உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.

அதாவது
விட்டுக்கொடுப்பது
தொடர்ந்து விட்டுக்கொடுப்பது

சகிப்பது
தொடர்ந்து சகிப்பது

மன்னிப்பது
தொடர்ந்து மன்னிப்பது

பெற்ற பிள்ளைக்கு
விட்டுக்கொடுக்கிறோம்
சேட்டைகளைச் சகிக்கிறோம்
தொடர்ந்து மன்னிக்கிறோம்

வேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது
இன்பமான மணவாழ்விற்கு?

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?

கணவன் மனைவியையும்
 மனைவி கணவனையும்
 மூச்சுக் காற்றினைப் போல
 தீர்ந்தே போகாமல்....
 தொடர்ந்து....
 இடையறாது
 மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
 அவர்கள்
 மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள் 
 மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
 ஆகையினால்
 மீண்டும் புத்தம் புதிதாக
 அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
 தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
 உடலெங்கும் மனமெங்கும்
 உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
உன்னை மட்டுமா?

வாசல் வந்து நிற்கும்
வரத்தை
ஊத்தைச் செருப்பால்
விலாசுகிறாய்

பின்
வாழ்க்கை
வசமாகவில்லையே
என்று
ஓரம் நின்று
வெகு நேரம்
விசும்புகிறாய்

அறிவோ அன்போ
கருணையோ பாசமோ
காட்சிப் பின்னணியிலில்லா
உன் நாடகத்தில்
தத்தித் தாவுகிறாய்
முட்டி மோதுகிறாய்
உள்ளழித்து  உயிர்மிதித்து
நடனமாடுகிறாய்

தப்புத் தாளங்கள்
எம்மேடை ஏறினாலும்
அது மயான மேடையே என்ற
ஐயமே இல்லா
நீ
உன்னை மட்டுமா
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடத்திவிட்டுப் போகிறாய்...
பிறந்தநாட்கள்

இவ்வுடல்
பிறந்தநாள்
பிறந்தநாளே
அல்ல

உள்ளழியும் துயரில்
உயிரழியும் நாளில்
வாரியணைக்கும்
கைகளுக்குள்
பிறக்கும் நாட்களே
பிறந்தநாட்கள்
வலிமிகு
கொடுங்கதறல் பொழுதுகளில்
கைகளில் ஏந்திக்
கண்களில் ஒற்றும் உயிர்களால்
ஒட்டி ஒட்டி உருவாகும் ...
கூட்டு உயிரே
உன் உயிர்
27

உன்
நீர்க் குமிழ்களும்
என்
நீர்க் குமிழ்களும்
சந்தித்து உடைந்த
மந்திரப் பொழுதுகள்
அப்பொழுது


உன்
நினைவுகளும்
என்
நினைவுகளும்
சந்தித்துச் சிறகடிக்கும்
பொற்பொழுதுகள்
இப்பொழுது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்