8 இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
.... இன்னும் கொஞ்சம்
இன்னும் இன்னும்
.... இன்னும் கொஞ்சம்

உன்னைக் கொஞ்ச
.... உன்னைக் கொஞ்ச
உன்னுள் என்னுள்
.... மின்னல் மிஞ்சும்

சின்னச் சின்னக்
.... கன்னப் பாளம்
கிள்ளக் கிள்ள
.... நாடித் தாளம்

கண்ணில் பொட்டு
.... கூட்டம் போடும்
கைகள் பட்டு
.... கோலம் ஆகும்

பெண்ணே பெண்ணே
.... என்னைக் கொன்று
கண்ணைக் கட்டி
.... உன்னைக் கொன்று

என்னை விட்டு
.... எங்கே போனாய்
வண்ணம் கெட்டு
.... விம்மும் பாவாய்

ஊரும் பேச்சும்
.... பின்னே வந்தது
உயிர்கள் தானே
.... முன்னே வந்தது

மனங்கள் வாழா
.... மணங்கள் எல்லாம்
குணங்கள் கெட்டே
.... குப்பை ஆகும்

கண்ணின் மணியில்
.... என்னைக் கொழுவு
உன்னைப் பேணும்
.... உயிரே எனக்கு

மண்ணாய்ப் போகும்
.... எண்ணம் போதும்
மரணம் தொடவும்
.... நீயே வேண்டும்

உன்னால் என்னால்
.... இயலாக் கதவை
உண்மைக் காதல்
.... உடைத்தே நொறுக்கும்

உன்னுள் என்னை
.... அள்ளிப் பின்னு
இன்னல் வந்தால்
.... விண்ணும் மண்ணு

7 comments:

வேந்தன் said...

சந்தம் நல்லா இருக்கு-

சாந்தி said...

பாட்டாய் படிக்கவும் அழகு.

இந்தக்காலத்திலும் இப்படி காதலில் உருகுபவர்கள் உண்டா.?

கல்யாணம் முடிந்தால் அடுத்த கடமை நோக்கி செல்வதில் உருகுவதெல்லாம் இருக்குமா?..

அழகு.

--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

சீனா said...

அன்பின் புகாரி

வித்தியாசமான பாடல் - கவிதை

காதலியினை நோக்கிப் பாடும் பாடல்

நன்று நன்று - நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

அழகான கவிதைப் பாடல்

ராபர்ட் said...

காதலில் கலந்தாய், காதலில் கரைந்தாய்.

- ராபர்ட்

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

கவிதையும் பாடலும் கலந்தால்
புதுக்கவிதைப் புயலின்
புலமை அளிக்கும் பரிசோ ?

சந்தம், சொற்கோர்வை, கவிதைக்கட்டு அனைத்தும் அருமை

அன்புடன்
சக்தி

காந்தி said...

அழகிய கொஞ்சல்
கெஞ்சலுடன்...

அன்புடன்
~காந்தி~