எதையும் தாங்கும் இதயம்

வெந்துபோன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடைதேடி விடைதேடி
விடை காணா மயக்கமா

தெரிந்த ஓர் விடைகூட
பச்சோந்தித் தோல்போல
நேற்று ஓர் நிறமாகி
இன்று ஓர் முகமானதா

தேய்கிறதா செல்லமே
துயிலாத உயிர்க்குஞ்சு
விலகாத கதவின்முன்
விரல்கூட்டித் தினந்தட்டி

நண்பர்களே பகைவரெனில்
பகைவர்களே நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா

ஒளிந்திருக்கும் இருட்காட்டில்
விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா

நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப்பொய்யோ
தொப்புள்கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய் பொய்யோ

காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்ட ஞானக் கீற்றின்முன்
நீயுந்தான் ஓர் பொய்யோ

அம்மம்மா நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடுகாட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா

துயர்வேண்டாம் செல்லமே
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்துகொள் புரிந்துகொள்
தெளிவாயொரு பேருண்மை

இன்றுதான் உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப்பயணம்
உண்மையான பொற்தளத்தில்
உயிர்ச்சுவடு பதிக்கிறது

முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளைவிட்டு வெளியில் வா

சத்தியங்கள் அனைத்தும் நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் குருட்டாடு
வழியறிந்தே ஓடிடுமா

துயரங்கள் பெருக்கெடுக்க
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இருபுறமும் அலசிப்பார்

வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப்போகும் இன்பமினி
வந்தவற்றை மிஞ்சுமடா

செலவுகளில் சிதையாமல்
சொர்க்கவழி தினந்தேடு
வரவுகளை எதிர்நோக்கி
வலிமையுடன் நீச்சலிடு

ஓடுடைத்து இம்முறை நீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்

.

தீண்டும் தீண்டும் துயரம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம்
எதையும் தாங்கும் இதயம்

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்