பொங்கலோ பொங்கல்

தைமாதம் தைமாதம்
தமிழனுக்கு நெய்மாதம்
கைவிட்ட கனவெல்லாம்
கைகூடும் மெய்மாதம்

கும்மியடி கும்மியடி
குங்குமமே கும்மியடி
தைமகளும் வந்துவிட்டாள்
தாலிக்கொடி தந்துவிட்டாள்

கோத்துயெடு கோத்துயெடு
கொத்தோடு இஞ்சிமஞ்சள்
கட்டியெடு கட்டியெடு
கட்டோடு செங்கரும்பு

கூரைபிரி கூரைபிரி
கீத்தெல்லாம் மாத்தியெறி
மாடுபிடி மாடுபிடி
மணிச்சலங்கை பூட்டிவிடு

சுண்ணாம்பு வெள்ளாடை
சுவரெங்கும் கட்டிவிடு
மாக்கோலப் பொன்னாடை
முன்வாசல் இட்டுவிடு

முத்தமிடு முத்தமிடு
மண்தொட்டு முத்தமிடு
நெத்திவிழும் நீர்முத்தை
நெஞ்சாரக் கொஞ்சிவிடு

பொங்குதடி பொங்குதடி
புதுப்பானை பொங்குதடி
பொங்குறதும் பூக்குறதும்
புதுச்சோறா பூமுகமா

நிலமகளை நீர்முகிலை
மாடுமனை ஏர்உழவை
நெஞ்சோடு நெகிழ்வோடு
கொண்டாடும் பொங்கலிது

பால்பொங்கல் கண்டவன்நான்
பனிப்பொங்கல் காண்கிறேன்
பனிதூவும் பொழுதுக்குள்
நினைவோடு வேர்க்கின்றேன்

ஆயிரமாய்ப் பண்டிகைகள்
அங்குமிங்கும் வந்துபோகும்
தமிழனுக்கோர் தனிமகுடம்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Comments

Seenufour said…
தங்களது அருமையான் 'பொங்கல் பாட்டை' தங்களது பெய்ர், விலாசம் இவற்றுடன் எனது வேறு குழுக்களில் பரிசுரிக்க அனுமதிப்பீர்களா?
மிக்க வந்தனம்.
தாராளமாக... அதோடு என் யூட்யூப் பொங்கல் வாழ்த்தையும் கொஞ்சம் பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=ZlRA-n0HPxM

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே