காதல் அறுவடை

என்னதான் காரணம் சொன்னாலும் சரி
அறுவடை என்றாலே
நடுமுள் சில்லிட்டுத்தான் போகிறது

பச்சைப் பயிர்களின்
இச்சை ரத்தம் பீறிட்டுச் சிதற
சிலிர்த்துச் செழித்து வளர்ந்துவிட்ட
செம்மைப் பயிரின் கழுத்தில்
கண்ணில்லாக் கரம்பதித்துக் கொத்தாக அள்ளி
இதயக் குறுக்கில் குறிவைத்து
அறுக்கும் கொடுமையல்லவா அது

அதுவும்
தான் ஆசை ஆசையாய்
வளர்ந்தெடுத்த பயிரை
அக்கறை அக்கறையாய்
நீரூற்றிப் பெருக்கிய பயிரை
கனவுகள் நிறைத்து உயிரோடு ஒட்டி
அரவணைத்த பயிரை

இதய வாசனை தலைகீழாய் மாறி வழிய
நரம்புகளில் அவலநெடி
மூச்சுமுட்டி வீச

அப்பப்பா அறுவடை என்பது
அடிமடி இடியைப்போல் கொடுமையேதான்

அறுக்க அறுக்க சிற்சில பயிர்களோ
அறுபடுவதே இல்லை
வலுக்கட்டாயமாய் அறுத்தெறிந்துவிட்டுத்
திரும்பும்போதே முன்னைவிடப்
பன்மடங்காய் வளர்ந்து நிற்கும்

மன வேர்களை விழுங்கி நிற்கும் இவை
நம் உயிர் இழைகளால் பின்னப்பட்ட
உயர் ரகப் பயிர்கள்
மகா துயர்மிகு பயிர்கள்

Comments

இனிமேல் அறுவடையைப் பார்க்கும் போது இக்கவிதை மனதில் வந்து மகிழ்வுக்குப் பதில் சிறு துயரம்/வருத்தம் வரும். அறுவடையைப் பற்றி இப்படி ஒரு மாற்பட்ட சிந்தனையா ? புகாரி, வளர்ப்பதின் பயனே அறுவடை தானே!! இல்லையெனில் பயனற்றுப் போகுமே பயிர்.

வளர வளர வெட்ட வேண்டும் அது துயரப் பயிராயினும்.

//வளர்ந்தெடுத்த பயிரை//

இது வளர்த்தெடுத்த பயிரில்லையா ?

நல்வாழ்த்துகள்
இந்தக் கவிதையும் நெடுநாட்களுக்கு முன்பு முதல் முறை படித்தபோது புரியவில்லை... பிறகு புரிந்தது. நன்றாக இருக்கிறது புகாரி.
சேவியர் said…
அறுவடைக்குப் பின்னும் வயலில் தங்கும் தடங்கள் போல காதலின் இடங்கள். ஒப்பீட்டுக் கற்பனையே அபாரம்.
இந்த விமரிசனம் ஒரு கவிதை

நன்றி சேவியர்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்