இருக்கும் வரை இருக்கிறேன்

இருக்கும் வரை இருக்கிறேன்
இறக்கும் போது இறக்கிறேன்

இருப்பதுதான் இறப்பது
இறப்பதுதான் இருப்பது

இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை

இருப்பதற்கும் இறப்பதற்கும்
இடையில் ஏதும் இல்லை

இடையில் வரும் எதுவுமிங்கு
இருப்பதற்காய் இல்லை

துடிப்பிருக்கும் வரையிலும்
தவிப்பிருக்கும் நெஞ்சினில்

உயிர் இருக்கும் வரையிலும்
துயர் இருக்கும் நாட்களில்

இருப்பவன்தான் இறந்தவன்
இறந்தவன்தான் இருப்பவன்

இருவரையும் கோத்துவைத்து
இருப்பதுதான் வாடிக்கை

இருக்கும் வரை இருக்கிறேன்
இறக்கும் போது இறக்கிறேன்

இருப்பதுதான் இறப்பது
இறப்பதுதான் இருப்பது

இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை

5 comments:

ஜெயபாரதன் said...

நண்பர் புகாரி,

///// இருப்பதற்கும் இறப்பதற்கும்

இடையில் ஏதும் இல்லை
இடையில் வரும் எதுவுமிங்கு

இருப்பதற்காய் இல்லை/////

இந்த வரிகள் மெய்ப்படுகளைக் கூறாது "உலகே மாயம்" என்பது போல் தெரிவிக்கின்றன ? இந்த
வரிகளில் நீங்கள் கூறும் அர்த்தமென்ன ?

உலகே மாயமா ? காயமே இது பொய்யா ? வாழ்க்கை என்பது என்ன ? வாழ்க்கை சூனியமா
? வாழ்வே பூஜியம் என்றால் எப்படி ஒரு கவிஞர் இப்படிக் கணினியில் சிந்தித்து எழுத
முடிகிறது ?


காதலைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்த புகாரி, காவி உடுத்தி எப்போதிருந்து இப்படி ஓர்
சித்தரானார் ?

ஜெயபாரதன்.

பூங்குழலி said...

//இருக்கும் வரை இருக்கிறேன்
இறக்கும் போது இறக்கிறேன்//

சரிதான்


//இருப்பதுதான் இறப்பது
இறப்பதுதான் இருப்பது
இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை//

நன்றாக இருக்கிறது இந்த தத்துவம்

//இருப்பதற்கும் இறப்பதற்கும்
இடையில் ஏதும் இல்லை
இடையில் வரும் எதுவுமிங்கு
இருப்பதற்காய் இல்லை//

உண்மை

//துடிப்பிருக்கும் வரையிலும்
தவிப்பிருக்கும் நெஞ்சினில்
உயிர் இருக்கும் வரையிலும்
துயர் இருக்கும் நாட்களில்//

ஏன் புகாரி ,துயரும் இருக்கும் என்றால் பரவாயில்லை .

Unknown said...

//ஏன் புகாரி ,துயரும் இருக்கும் என்றால் பரவாயில்லை . //


நீங்கள் சொல்வது உண்மைதான் பூங்குழலி. ஆனால் இந்தக் கவிதையின் நாயகனின் கண்ணோட்டம் மிக முக்கியம் இங்கே. தவிப்பிருக்கும் நெஞ்சில் துயர் இருக்கும் என்கிறான். அது உண்மைதானே! அதனால்தானே புத்தர் ஆசையை அழி என்றார்.

ஒன்றை எதிர்ப்பார்த்துத் தவிக்கும்போதும் துயரம். பரிகொடுத்துத் தவிக்கும்போதும் துயரம். எதிர்ப்பார்ப்பும் பரிகொடுப்புமான வாழ்க்கையில் துயரின்றி வேறேது?

Unknown said...

//இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை//

அதான் கொடுமை ஆசான்

ஆயிஷா said...

ஒரு தத்துவப் பாடல் போல உள்ளது ஆசான். அழகு.
ஆயிஷா