ஞானத்தங்கமே

இறுதியாய்ப்
பிச்சை கேட்ட பாத்திரத்திலும்
புளிச்சென்று எச்சில்

மிச்ச மீதி நம்பிக்கையும்
மரணப்பசிப் பெருங்குடலில்
இறுதி ஊர்வலம்

ஆயிரங்காலப்பயிர் செழித்துக்கிடந்த
உள் முற்றத்திலிருந்து ஓடிவந்த
நாக்கு நாய் துரத்திக் கடிக்க
இரத்தக் கசிவுகளோடு
தனிமை மண்டிக்கிடக்கும் புதரில் விழுந்து
புதிராகிப் போனது இதயம்

உச்சி முதல் உள்ளங்கால் வரை
புதுத்தோல் போர்த்திக்கொண்டு
தனக்குள் செத்து
பின் தானே உயிர்த்து
மீண்டும் மனிதர்களைக் காணும் பீதி
உயிரை மிதித்தாலும்
இம்முறை அர்த்தம் புரிந்த
முதல் அழுகையோடுதான்
வெளிக்காற்றுக்குள் வீசியெறியப்பட்டது
இதயம் தன் துடிப்புகளோடு

நிரந்தரம் அற்றதென்றாலும்
வயிறும் மனமும்
வீதிகளில் நிறைகிறது இப்போது

நிச்சயமாகிப்போன
பிச்சையுமில்லாப் பிழைப்பில்
நிரந்தரமாகிப்போன நிரந்தரமற்ற
அன்னதானங்கள் என்ன குறைந்தா போயிற்று

சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள் இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள் திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா

காத்திருக்காக் கட்டற்ற உணர்வுகளுக்குள்
கைதாகிக் கிடக்கும் வாழ்க்கை
என்றும் விடுதலையாகப் போவதில்லை
என்பதே படைப்பிலக்கணம்
என்பதனாலேயே...

மறுக்கும் இடத்தில்
மன்றாடுவதல்ல வாழ்க்கை
கொடுக்கும் இடத்தில் கொண்டாடுவதுதான்

Comments

//சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள்
இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள்
திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா//

பூட்டுகள் போட்டுக் கொன்டு..
மறுப்பவர்களிடமே கேட்டுக் கொண்டு...
வாழ்க்கை இந்தப் போக்கில்தான்
போகிறது...

நல்ல வரிகள்

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே