உணர்வுகளை விழிவானில்
முழு நிலவாய் நிறுத்தும்
கலையறிந்தவள் நீ

ஒவ்வொரு சொல்லிலும்
உன் எதிர்பார்ப்பைப்
படம் பிடித்துக்காட்டும்
கைதேர்ந்த புகைப்படக்காரி

நெற்றி.. நாசி...
விழி... இதழ்...
செவி... சிற்றிடை...
என்று
ஒன்றுவிடாமல் என்முன்
ரகசியப் போர்விமானங்களாய்ச்
சீறிக்கொண்டு வருகின்றன

உன் அபிநய மொழிகளைப்
புரிந்துகொண்ட நெஞ்சுதான்
உன் பஞ்சுமெத்தையாகிறது

பெண்ணின் விருப்பங்கள்
தெளிவாய் வெளிப்படும்போதுதான்
உறவு முகில்
உற்சாக மழை பொழிகிறது
வாழ்க்கை சுவாரசியமாகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சீனா said...

அன்பின் புகாரி

கற்பனையில் காதலியை - காதலைப் போற்றும் நீ
எழுதும் கவிதைகளோ அனுபவ அடிப்படைதான்
எனத் தோன்றுகிறது - சிந்தித்தல் வேறு - உணர்தல் வேறு
உணர்ந்து உணர்ச்சியின் அடிப்படையில் பீரிட்டு எழும் கவிதைகள்
படிக்கும் போதே உணர்ச்சிகளைத் தூண்டும்

உணர்வுகள் - விழி வான் - முகில்
ஒவ்வொரு சொல்லிலும் திறமையாக எதிர்பார்ப்பு
நெற்றி நாசி விழி இதழ் செவி சிற்றிடை - இத்தனை போர்க் கருவிகளா
மற்ற படைகள் எங்கே - வெற்றி பெற இவையே போதும் எனற மனமா
வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க மற்றவை தயார் நிலையிலா
உடல் மொழி புரிந்தால் - நிம்மதிக்குஞ்சுகள் தானாகவே பிறக்கும்
உறவு முகில் உறசாக மழை புரிவது புரிதலுணர்வு அதிகமாகும் போது

நன்று நன்று நன்று நண்ப புகாரி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

காயத்ரி said...

"உணர்வுகளை விழிவானில்
முழு நிலவாய் நிறுத்தும்
கலையறிந்தவள் நீ"

அற்புதமான உவமை.. லயித்துவிட்டேன் கவிஞரே..

காதல் விதைக்கு நீர் நீராயிருக்கிறீர்... வளரட்டும் காதல் விருட்சமாக...