செந்தாமரையே செந்தாமரையே
நீ நிற்பதோ ஒற்றைக் காலில்
அதையும் ஏன்
சேற்றில் செருகி இருக்கிறாய்
ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும்
மனித மனங்களைப் போல

அப்படிச் சிரிக்காதே
வண்டுகள் உன்னைத்
தொடுவதற்கு முன்னரே
போதை தாளாமல் துவண்டு விழுகின்றன

குங்குமம்
இட்டுக் கொள்ளடி என்றால்...
ஏனதில் குளித்து விட்டு வந்து
நிற்கிறாய்

இந்தக் குளம்
உன்னைப் பிரதிபலிக்கவே
இப்படி நிச்சலனக் கோலம் பூண்டு
நீண்டு கிடக்கிறது
குனிந்து பாரடி
அதிலுன் காந்தமுகத்தை

வேண்டாம் வேண்டாம்
உன்னோடு அழகுப் போட்டியில்
கலந்து கொள்ள நெடுநேரமாய் அங்கே
காத்துக் கிடக்கிறாள் நீலி நிலா

நீ குனிவதை
தலைகுனிவு என்று அவள்
தவறாக எண்ணிவிடக் கூடாதல்லவா

1 comment:

vasu balaji said...

/உன்னோடு அழகுப் போட்டியில்
கலந்து கொள்ள நெடுநேரமாய் அங்கே
காத்துக் கிடக்கிறாள் நீலி நிலா

நீ குனிவதை
தலைகுனிவு என்று அவள்
தவறாக எண்ணிவிடக் கூடாதல்லவா/

:). அழகான அழகுக் கற்பனை