கிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா?

1. 1400 வருடங்களுக்கும் மேலாக தமிழன் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறான்.

2. தொல்காப்பியத்தில் இல்லை என்ற வாதம் சரியாகாது. அது சுமார் 2000 வருடம் பழமையானது.

3. அதுமட்டுமல்ல, தொல்காப்பியத்தில் ஃ ஆய்தத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதவேண்டும் என்று சொல்லப்படவில்லை. இங்கே இவர்கள் வசதிக்காக இலக்கணத்தை மாற்றுவார்களாம். கிரந்தம் என்றால் மட்டும் மிகப்பழைய இலக்கணம் வந்துவிடுமாம். வேடிக்கை இல்லையா?

4. அதுமட்டுமல்ல, இந்த குறிகள் இட்டு எழுதுவது எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று கேளுங்கள். அதை மட்டும் புதுசா கொண்டுவரேன்னுவாங்க. 1400 வருடம் மக்களால் புழங்கப்படுவதை நீக்கவேண்டுமாம். இவங்க புதுசா குறிகள் இட்டுத் தருவதை தமிழர்கள் அப்படியே ஏற்க வேண்டுமாம்.

5. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, கிரந்த எழுத்துக்களைத் தன் அகராதியில் ஏற்றுக்கொண்டு அர்த்தம் எழுதியுள்ளது. க்ரியா என்று தன் அகராதிக்குப் பெயரிட்டு தொல்காப்பியத்தை உடைத்துவிட்டது. அது சாதாரணமாகவர்களால் உருவான அகராதி அல்ல. மொழி அறிஞர்களாய் உயர் பதவி வகிப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

6. தமிழில் ஏராளமான வடசொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை எந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமிழன் தமிழ்ப்படுத்திவிட்டான். வெறும் அயலக பெயர்களிலும், அறிவியல் சொற்கள் சிலவற்றிக்கும்தான் கிரந்தம் பயன்படுகிறது.

7. இந்த நான்கு எழுத்தைத் தவிர F க்கு ஒரு எழுத்துவேண்டும் என்று சிலர் போராடியபோது. ஃ ஆய்தம் பயன்படுத்தி ஃபாரின் என்று எழுதலாம் என்று புதிய எழுத்துக்களைத் தடுத்து நிறித்திவிட்டோம்.

8. இன்றைய பத்திரிகைகள் முழுவதிலும் கிரந்தத்தின் பயன்பாட்டைப் பாருங்கள். 1% கூட இருக்க்காது. பிறகு ஏன் அலறவேண்டும். புதுசா தான் முனைந்து குறிகளைக் கொண்டுவந்தேன் என்ற பெயருக்காகப் பேசுவதுபோல எனக்குப் படுகிறது.

9. இன்னும் ஆயிரம் மடல்கள் இட்டாலும் கிரந்த எழுத்துக்களை அழிக்க முடியாது. இன்றைய கவிஞர்கள் அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து, சிற்பி எல்லாம் கிரந்தம் பயன்படுத்துகிறார்கள். கவிஞர்களே பயன்படுத்துகிறார்கள் எனால் அதுவே ஒரு பெரிய அங்கீகாரம்.

10. பாரதி கிரந்தம் கொண்டு நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளான். வடச்சொல் கொண்டு கவிதை எழுதி இருக்கிறான். கிரந்த எழுத்துக்களைப் பல்லவி சரணம் என்று ஓசைகளில் பயன்படுத்தி இருக்கிறான்.

11. இந்த 1400 வருடங்களில் ஏகப்பட்ட நூல்கள், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல்வரை கிரந்தம் பயன்படுத்தப்படுகிறது. இன்று வாழும் தமிழரிஞர்களுள் தொல்காப்பிய உரை எழுதியவர் கலைஞர் தன் மகன் பெயரை ஸ்டாலின் என்றுதான் எழுதுகிறார்.

12. பெரியார் புது எழுத்துக்களை அறிமுகம் செய்த போது அது எந்த இலக்கண நூலிலும் இல்லை. ஆனால் உலகமே ஏற்றுக்கொண்டது.

13. அந்தக் காலம் என்றாலாவது கிரந்தம் தவிர்த்து எழுத முயற்சிக்கலாம். இதுவோ உலகமே சுண்டைக்காயாய்ச் சுருங்கிய காலம். தமிழன் சர்வதேச சபையில் நிற்கிறான். அவனைப் போய் ”சார்ச் புழ்சு” என்று எழுதச் சொன்னால் சிரிக்க மாட்டான். சார்ச் புழ்சு என்றால் என்ன வென்று கேட்காதீர்கள். ஜார்ஜ் புஷ். இப்படி விடுகதை போட்டுக்கொண்டிருந்தால் தமிழில் நவீன நூல்கள் வளர்வதெப்படி?

14. இந்த கிரந்தம் என்ற நாலு எழுத்துக்களையே சுமையாகக் கருதும் இவர்கள், க வில் நாலு, சா வில் நாலு, ப வில் நாலு என்று ஒவ்வொரு எழுத்துக்கும் நான்கு குறிகளைக் கொண்டுவந்து, அல்ஜிப்ரா சூத்திரமாக தமிழ் எழுத்துக்களை ஆக்க முயல்கிறார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துக்களைக் கஷ்டப்பட்டு படித்துவரும் தமிழன் இந்தக் குறிகளுக்குள் சிக்கிச் சீரழியவா?

15. எல்லாவற்றுக்கும்மேலாக குறிகள் இடுவதற்கான எந்தத் தேவையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக தமிழன் அழகாக தமிழில் தான் நினைத்ததை எழுதி மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்?

16. அதே சமயம் அகராதியில் மட்டும் உச்சரிப்பு வித்தியாசம் காட்டுவதற்காக, குறிகளை உருவாக்கட்டும். ஆங்கில உச்சரிப்புக்குப் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தட்டும். அதில் பிரச்சினை இல்லை

2 comments:

சுவாமிநாதன் said...

அன்பின் புஹாரி:

இந்த கிரந்த எழுத்து பிரச்னை பற்றிய மடல்களை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.

கிரந்தம் கலந்து எழுதலாமா வேண்டாமா என்று இந்தக் குழுமத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்
நல்லது என்று தோன்றுகிறது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

பூங்குழலி said...

மக்கள் தொலைக்காட்சி மேடையில் ஒரு அறிஞர் பேசியது இது ,"நாம் தான் ஜ போன்றவற்றிற்கும் ஜ ஜா .....ஜௌ வரை வரிசை வைத்து விட்டோமே
பின்னர் எதற்காக இதை வேண்டாம் என்று கூற வேண்டும் .என் பெயரை கிருட்டிணன் என்று போடுகிறீர்கள் .அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம் .ஆனால் எனக்கு ஏற்புடையதாக இல்லை .உங்கள் பெயரை ராமதாசு என்று போட்டுக் கொள்கிறீர்கள் .ஸ் கடைசியில் வருவதால் சரியாக போயிற்று .இங்கே ஒரு தலைவர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார்.அதை சுடாலின் என்று போடுவீர்களா ?"