நெருப்பில் விழுந்தாலும்...

காதலைத் தொட்டாயிற்று
கல்யாணமும் முடித்தாயிற்று

இனியென்ன?

இதோ இதோ
இந்த வாழ்க்கையின்
இனிப்பான அடுத்த கட்டம்

ஆம்
பெற்றெடுத்துக் 
கொஞ்சுவது

அந்தப் பிஞ்சுகளின்
சின்னச் சின்ன ஆசைகளை
நிறைவேற்றி நிறைவேற்றி
நிறையாமல் வெறி கொள்வது

வாழ்க்கையின்
சர்க்கரைக் காலம்

வர்ணங்களுக்குள்
விழிகள் விழுந்து
நீச்சலடிக்கும் காலம்

உயிரையும்
உவப்போடு வழங்க
உரங்கொண்ட
சாதிப்புக் காலம்

அடடா
அந்தப் பிஞ்சுகள்
வளரவே கூடாது

வளர்ந்துவிட்டால்?

சட்டுச் சட்டென்று 
அவர்களும்
பெற்றெடுத்துப் பெற்றெடுத்து
பரிதவித்து நடுங்கும் கரங்களில்
பனி ரோசாக்கள் பத்துப்பதினாறை
கொட்டித் தந்துவிட வேண்டும்

பிஞ்சுகளின் பிஞ்சுகளும்
இந்த மரத்தில்தான்
ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் 

ஊஞ்சலாட
வழியற்ற மரங்கள்
உடைந்து நொறுங்கி
நெருப்பில் விழுந்தாலும்
வேகாமல்லவா கிடந்துழலும்

அன்புடன் புகாரி