அன்பின் அஞ்சலி
*
புலரும் அதிகாலைப்
பொழுதுகளை முத்திக்கொண்டு
செய்தித் தாள்களுக்குள்
செல்லவியலா தூரமெலாம்
சென்று கடந்தவர்
அவரே செய்தியானதையும்
இன்று வாசிப்பாரா
*
சற்றும் அயராமல்
சதா உழைத்தவர் அமரர் குதா
பணி ஓய்வு பெற்றாரென்று
பத்தாண்டு முன்பே சொன்னார்கள்
அது பச்சைப் பொய்
இதோ இன்றுதான்
தீரா நித்திரைக்குள்
திரும்பா பயணத்தில்
விரும்பா ஓய்வினைப் பெறுகிறார்
*
ஒப்பந்தப் பணிகளுக்கு
ஒப்புதல் தரும் பணி செய்தும்
நிர்பந்தக் காலங்களிலும்
நீளாக் கரத்தோடு நிமிர்ந்து நின்ற
அரசு அதிகாரி
ஆம்
அறந்தாங்கியில் பிறந்தவர்
அறந்தாங்கியே வாழ்ந்தார்
*
காய்த்துக் குழுங்கிய குதா மரத்தில்
கல்லெறிந்தோர் சிலர்
சொல்லெறிந்தோர் சிலர்
கண்ணெறிந்தோர் பலர்
ஆயினும் எவர்க்கும்
காயங்களை எறிந்ததே இல்லை
கனிகளையே சொரிந்தது
அந்த அதிசயக் குதா மரம்
*
அழகில் இவர்
ஆறடி எம்ஜியார்
கட்டுடல் கொண்ட
எட்டடுக்கு மாளிகை
உதயக் கதிர்களால்
உருவான நிறம்
பணிவுகளில் அருவி நீர்
பந்தங்களில் ஈர நிலம்
உழைப்பினில் புயல் காற்று
பொறுப்பினில் அணையா நெருப்பு
அன்பினில் விரிகின்ற வானம்
இப்படியே
அடுக்கிக்கொண்டே போகலாம்தான்
ஆனால்
ஒற்றைச் சொல்லில் சொல்ல
தேடுகிறேன்
எண்ணக் கிடங்குகளில்
கிடைத்ததும்
சொல்லப் போவதில்லை
சொல்லாமல்
புரிந்துபோகும் சொல்லைச்
சொல்லியா புரியவைக்க முடியும்
*
கம்மங்காட்டின் கந்தகச் சூட்டில்
வறுமை தீய்த்த கரித்துண்டுக் கூட்டில்
விளைந்தது இந்த வைரம்
தானே வெடித்து
தானே வளர்ந்து
தானே நிமிர்ந்து
தானே தளைத்து
தன்னோடு ஒட்டிய
தகரங்களுக்கும்
தங்கமுலாம் பூசிய
பொற்கனிப் பயிர்
*
முதன்முதலில் கண்டபோது
கடைநிலை ஊழியர்போல்
பணிவோடு நின்றார்
மகளைக் கட்டிமுடித்து
அவர் பணியாற்றிய
காடம்பாறைக்குச் சென்றேன்
அசந்தே போனேன்
ஊரே கூடி நின்று
மன்னர் வந்ததுபோல்
மரியாதை தந்தார்கள்
*
காடம்பாறை அணை கட்டி
மின்சாரம் எடுத்தவர்
கடப்பாரை உடற்கட்டில்
பாலாடை மனங் கொண்டவர்
*
அந்த
மனம் போலவே
பெற்றெடுத்த மக்களுக்கு
மன்னர்களின் பெயர் சூட்டினார்
மகளை ராணி என்றே அழைத்தார்
மகன்களிரண்டு
மகளொன்று என்று
பிள்ளைகள் மூன்றை
நிறைவாய்ப் பெற்றெடுத்தார்
இருந்தும்
மூன்றாவதாயும்
பெண்ணே பிறந்துவிட்ட வீட்டிலிருந்து
பிஞ்சு தேவதையை
இரண்டாம் மகளாய்த் தத்தெடுத்தார்
தத்தெடுத்த மலரை
பெத்தெடுத்த பூக்களைவிட
பொத்திப் பொத்தி வளர்த்தார்
வாழ்நாளெல்லாம் எவரும்
பொன்னும் பொருளுமாய்
வாரியே இறைத்தாலும்
இந்தக் கொடைக்கு
ஈடாகுமா
*
பத்து வயதில்
பறிகொடுத்தேன்
பதினைந்து வருடம் கழித்து
இவரிடம்தான் கண்டெடுத்தேன்
தந்தையின் நேசத்தை
தந்தவரைத்
தொலைத்துவிட்டேன்
படுக்கை நாளில்
பக்கத்தில் அமரும்
பாக்கியம் பெறா பாவியானேன்
நம்பினேன்
இரும்புத் தேகமல்லவா
ஈராண்டேனும் இருப்பாரென்று
நம்பிக்கையைத் தீய்த்தழித்த
மரணத்தை என்செய்வேன்
*
கண்விட்டுப் பிரியும்
கண்ணின் மணிகள் கோத்து
மண்விட்டுப் பிரிந்த
மாமனாருக்கு என் அஞ்சலி
*

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது அஞ்சலினையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே