கைகள்
வேட்டிக்குள்ளேயே
வந்துவிட்டன
தமிழன் இன்னும் 
விழித்துக்கொள்வதாய்
இல்லை
அவன்
ஒரு சோம்பேறி மயக்கத்தில்
சுருண்டு கிடக்கிறான்
மானம் பறிபோகிறது
என்ன செய்ய முடியும் என்கிறான்
மரியாதை பறிபோகிறது
மாற்றமுடியுமா என்கிறான்
வீட்டுக்கூரை பிரிக்கப்படுகிறது
காற்றாய் இருக்கும் என்று
சமாதானம் கொள்கிறான்
அவனின்
அத்தனை நிறங்களும்
கழுவப்படுகின்றன
குளிப்பதாக நினைத்துக்கொள்கிறான்
ஒற்றை அடையாளமும்
மீதமின்றி தீய்க்கப்படுகிறது
தான் யார் என்று தெரியாமல்
சோதிடனிடம் நிற்கிறான்
முகவரி
முற்றாகக் கிழிக்கப்படுகிறது
நடுவீதியில் நிற்கிறான்
சேரனையும் காணவில்லை
சோழனையும் காணவில்லை
பாண்டியனையும் காணவில்லை
பனியன் சட்டையில்
ஒரு பரதேசி மட்டுமே தெரிகிறான்
பெரியாரும் வரவில்லை
அண்ணாவும் வரவில்லை
வந்தாலும்
இவன் கண்ணுக்குத்
தெரியவுமில்லை
முகமற்றவன்
முகநூலில்
லைக் போட்டுக்கொண்டிருக்கிறான்
’தமிழ் வாழ்க’
எங்கோ கேட்டதுபோலிருக்கிறதே
என்று
தெருமுனை
பான் பராக் கடையில்
ஏ கியா ஹை என்று
விசாரிக்கிறான்
மறத்தமிழன்
அன்புடன் புகாரி
இது இந்துஸ்தான்
இதில் இந்துக்கள் மட்டுமே
வாழ வேண்டும்
இது இந்துக்களின் நாடு 
இதில் இந்தி மட்டுமே
பேச வேண்டும்
மத்திய அரசின் எல்லா திட்டங்களின் பின்னணியிலும் எல்லா செயல்பாட்டின் வேரிலும் இதுதான் இருக்கிறது
இதைப் பெற எதையும் அழிப்போம்
அத்தனை உயர் மொழிகளையும் அழிப்போம்
அத்தனை கலாச்சாரங்களையும் புதைப்போம்
எதை உயர்வு உயர்வு என்று இந்த உலகம் கண்டதோ அதைக் கண்டதுண்டமாக வெட்டியெறிவோம்
அடடா...
எப்படி இருந்த இந்தியா
இன்று இப்படி ஆகிக்கொண்டிருக்கிறதே!
அன்புடன் புகாரி
தமிழன்
தூங்கிக்கொண்டிருக்கிறான்
தமிழ்நாடு
களவாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழின் கழுத்து
நெறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழனின் கலாச்சாரம்
சூரையாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழனின் அடையாளங்கள்
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
தமிழனின் உயர்வு
தரைமட்டமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அன்புடன் புகாரி
மனிதர்களுள் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சரியா?
மனிதர்களுள் கல்வி செல்வம் காரணமாக வேறுபாடுகள் இருக்கும். அது மாறிக்கொண்டே வரும்.
ஒரே வீட்டிலேயே ஒருவன் டாக்டராவான் இன்னொருவன் கூலித் தொழிலாளியாவான்.
ஆனால் அடுத்த சுற்றில் டாக்டர் மகன் பலசரக்கு வியாபாரியாகக் கூடும் கூலித் தொழிலாளியின் மகன் மந்திரியாகக் கூடும்.
ஒருவனின் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது அப்படியா?
ஒருவன் பிறப்பைக் கொண்டு மேலானவனாகவோ கீழானவனாகவோ ஆகிறான்.
தீண்டாமையால் வாழ்நாள் முழுவதும் தீய்கிறான்.
இதில் ஏதும் நியாயம் உண்டா?
தர்மம் உண்டா?
அறம் உண்டா?
மனிதம் வாழ வழியுண்டா?
அன்புடன் புகாரி
மதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
சாதியை மாற்றமுடியுமா?
கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்றே இந்துக்களும்.
ஆனால் இந்துக்களில் சாதி இருப்பதால் யாரும் இந்துமதத்துக்குள் நுழையவே முடியாது.
நுழைந்தால் எந்த யாதியும் எந்தப் புதியவரையும் ஏற்றுக்கொள்ளாது - குறிப்பாக மேல்சாதி.
இதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
ஆரியர்களின் வருகையின் பின்னரே தமிழர்களுக்கு இந்துமதம் வந்தது. இப்படியாய் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மதமும் வந்தது.
காலகட்டம்தான் வேறே தவிர எல்லோரும் மதம் மாறியவர்களே!
அதில் பிழையில்லை.
இன்றும் மாறலாம். என்றும் மாறலாம்.
ஏனெனில் மதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி.
ஜாதி என்பது வாழ்க்கை நெறியல்ல. பிரிவினை விதி. நீ மேலானவன் அவன் கீழானவன் என்று மனிதனை மனிதனே தாழ்த்தும் கேடுகெட்ட செயல்.
ஜாதியை ஒழிக்காமல் மனிதநேயம் மலரவே முடியாது.
ஏனெனில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்காமல் எப்படி மனித நேயம் வளர முடியும்.
முடிவெடுத்து முடித்துக்கொள்ளுங்கள் ஜாதியை!
அன்புடன் புகாரி
சிலருக்குப் புகழ்ந்து தரப்பட்ட பட்டங்களும் பின்னாளில் சாதியானது. அது அந்தக் காலம்.
இந்தக் காலத்தில்...
கலைஞர் என்று ஒரு சாதி வரமுடியாது.
உலகநாயகன் என்று ஒரு சாதி வரமுடியாது
இசைப்புயல் என்று ஒரு சாதி வரமுடியாது
ஏனெனில் இன்று அறிவு வளர்ந்தவர்களே அதிகம்.
ஆனாலும் பழயனவற்றை மனரீதியாகப் பற்றிக்கொண்டு எப்படி விடுவது என்று அறியாமல் தவிக்கிறார்கள்.
அன்புடன் புகாரி
முகம் மூடி அகம் திறப்பவர்கள்

முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.

எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்
இப்படியே அடுக்கலாம்.....

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை அனைத்தின் கலவைதானே உண்மையான நான்?

என் நிஜமுகத்தோடு, அது எத்தனை அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக் காட்டிக்கொள்வதுதானே சரி.

ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் கொண்டவன்தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் உண்மை முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார்.

போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெருமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும் கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நானாக இருப்பதால் எவருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில் இழப்பு என்ன இருக்கிறது?

அன்புடன் புகாரி
செந்தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்று இந்தியா முழுவதும் அனைத்தும் இலவசமாகக் கொண்ட பள்ளிகள் தொடங்க வேண்டும் இந்திய அரசு.
ஓர் உயர்வான மொழியை
பழம்பெரும் மொழியை
வாழ்வியல் மொழியை 
செம்மொழியை பல
மொழிகளுக்குத் தாயான மொழியைப்
போற்றிப் பாதுகாக்கும் பெருமையும் சிறப்பும் கிட்டும்
அன்புடன் புகாரி
இது
தமிழ்நாடு
தமிழின் நாடு
தமிழனின் நாடு
இங்கே வேண்டாம் இந்தி திணிக்கும்
நவோதய வித்யாலயா
பள்ளியின் பெயரிலேயே இத்தனை இந்தித் திணிப்பா?
அன்புடன் புகாரி
தமிழ்நாடு தனிநாடாவதை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது
அன்புடன் புகாரி

இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என்று மத்திய அரசு தமிழ்ப் பெற்றோர்களை மிரட்டுகிறது.
இது ஒரு பச்சை அயோக்கியத்தனம்!
இதை முறியடிக்க மீண்டும் வீரத் தமிழன் ஆட்சி மலர வேண்டும்.
தமிழா நீ ஒன்றுகூடிவிட்டால் உன்னை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது
இப்போதே எல்லா கட்சிகளுக்கு ஒருங்கினைந்து நீட்டின் ரூட்டை அடைப்பதிலும் இந்தித் திணிப்பை முறியடிப்பதிலும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றன.
பஜக மட்டுமே தனித்து நிற்கிறது!
வெல் தமிழா வெல்!
அன்புடன் புகாரி
தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார் அண்ணா.
அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.
கட்சியின் பெயரிலேயே ’அண்ணா’ என்று வைத்துக்கொண்டிருப்பவர்கள் இன்று சக்தியற்ற பச்சோந்திகளாய்ச் சோரம் போகிறார்கள்.
தமிழ்மண் விழித்துக்கொள்ள வேண்டும்
தமிழை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்
தனிநாடுதான் விடை என்றால் அதற்கும் தயாராக வேண்டும்
அன்புடன் புகாரி
தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் என்பது விருப்பப் பாடமா?
இந்தி என்பது கட்டாயப் பாடமா?
கட்டபொம்மனிடம் ஜாக்சன்துரை பேசிய வசனம் போலல்லவா இருக்கிறது
நொறுக்க வேண்டாமா அந்தப் பரங்கித் தலைகளை?
அன்புடன் புகாரி
தமிழைத் தமிழ் நாட்டிலிருந்து பிடுங்கி எறிய ஏவப்பட்ட ஏவுகணைதான் NEET
பின் தங்கியவர்களைப் பின் தங்கியவர்களாகவே வைத்துப் புதைக்கின்ற புதைகுழிதான் NEET
தீண்டாமைக் கொடுமையின் புதுப் பிறவிதான் NEET
அன்புடன் புகாரி
செந்தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்று இந்தியா முழுவதும் அனைத்தும் இலவசமாகக் கொண்ட பள்ளிகள் தொடங்க வேண்டும் இந்திய அரசு.
ஓர் உயர்வான மொழியை
பழம்பெரும் மொழியை
வாழ்வியல் மொழியை 
செம்மொழியை பல
மொழிகளுக்குத் தாயான மொழியைப்
போற்றிப் பாதுகாக்கும் பெருமையும் சிறப்பும் கிட்டும்
அன்புடன் புகாரி
கருணைதான்
மனித குலத்தின்
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின்
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும்
ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின்
ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின்
ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான
ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்
இல்லை
கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான்
இறைவன்

கருணைதான்
இதயத்தில்
இறைவன் வசிப்பதற்கான
அத்தாட்சி

அன்புடன் புகாரி

இனிய நற்பூக்கள்

இந்துக்கள்
என் உடன் பிறப்புகள்
இறுக அணைத்துக்கொள்கிறேன்

கிருத்துவர்கள்
என் அண்ணன் தம்பிகள்
கட்டித் தழுவுகின்றேன்

முஸ்லிம்கள்
என் சகோதரர்கள்
மார்போடு மார்பாக்கிக் கொள்கிறேன்

அத்தனை ஆத்திகரும்
என் அண்ணன் தம்பிகள்
அன்புக்குள் அன்பானவர்கள்

இன்னும் நாத்திகரும்
என் உடன் பிறப்புகள்
நெஞ்சத்தின் இனிய நற்பூக்கள்

சகோதரம் கொண்டாடாதவன்
ஆத்திகனும் இல்லை
அசலான நாத்திகனும் இல்லை

அவனுக்கு
இறைவன் மீதான பக்தியும் இல்லை
இயற்கையின் மீதான காதலும் இல்லை

அன்புடன் புகாரி
தமிழ் மொழியை அழித்துவிட்டுத் தன்னையே நிலை நிறுத்திக்கொள்ள வடமொழி பல நூற்றாண்டுகளாய்ப் போராடியது.

தன் சக்தியையெல்லாம் திரட்டித் தமிழைச் சூரையாடியது.

மதத்தில் ஏறிக்கொண்டு தமிழின் முதுகெலும்பை முறிக்கப் பார்த்தது.


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைக்கும் தமிழ் இணைத்துப் பார்ப்பதுதான், அழிக்கப் பார்ப்பதில்லை.

எம்மொழியையும் அழிக்க எங்கள் தமிழ் மொழி முயன்றிருக்கிறதா?

எம்மொழியின் முதுகிலும் ஏறிச் சவாரி செய்திருக்கிறதா?

எத்தனையோ மொழிகளுக்குத் தாய் எங்கள் தமிழ் மொழி.

அழிக்க நினைத்த மொழிகள் அழிந்துபோக, ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிதாய்க் காலூன்றி இன்னமும் கம்பீரமாய் நிற்கிறது எங்கள் தங்கத் தாய்த் தமிழ் மொழி

அன்புடன் புகாரி
ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகமுடியாது.

ஆங்கிலம் தொடக்கத்திலேயே பிறமொழிகளை இணைத்துக்கொண்டு இந்தியைப் போல உருவான ஒரு வேரற்ற மொழி.

தமிழ் அப்படியல்ல, தானே தோன்றி தானே வளர்ந்து எவரும் அழிக்காமுடியா வண்ணம் தளைத்து வளர்ந்து செழித்த செம்மொழி.

பிறமொழிச் சொற்களை ஏற்பதில் தமிழ் அன்பு மனம் கொண்டதாகவே இருக்கிறது.

ஆனால் அருமையான தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு பிறமொழிச் சொற்களையே பயன்படுத்த நேரும்போது, பிறமொழிச் சொற்களைக் களைந்துவிட்டு தூய தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வதே உண்மையான தமிழ்ப்பற்று.

நாம் ஏதேனும் தமிழுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வோம்?

இளையவர்களைத் தமிழ்ப் பேசச் செய்வோம்

இனிய தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் வைப்போம்

செழுமையான இலக்கியங்களைப் பாராட்டி மகிழ்வோம்

உலகத் தரம் வாய்ந்த ஆக்கங்களைத் தமிழுக்குள் கொண்டுவருவோம்

அன்புடன் புகாரி
கண்திறந்த போதிலும்
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும்
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும்
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில்
இன்பமின்றிப் போகுமா

தரமில்லாத நாவினால்
தகரும் உறவுப் பாலமே
அறமில்லாத அறிவினால்
அழியும் உலகம் யாவுமே

ஒருவர் உயிரில் ஒருவராய்
இருவர் வாழ வேண்டுமா
அறிவைத் தூர நிறுத்து - உயர்
அன்பை உயிரில் பொருத்து

அன்புடன் புகாரி
































தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

பெற்ற பிள்ளையையே
தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்
மகனும் தலைசாய்க்கிறான்
கூர் வாளோ வெட்ட மறுக்கிறது
சாத்தானும் தடுக்கிறான்
பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதுமென்று
இறைக்கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது கருணை நிறைகிறது
நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்
தனக்குள் இருக்கும்
தீயவற்றைப் பலியிடுதலே
இறைக்கான பலியென்றானது

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்