Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்

>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<

அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.

பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்

எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.

நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.

பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.

மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு

>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<

இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<

செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.

>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.

>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<

இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்

>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<

இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை

>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்

அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்

இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****

அன்புடன் புகாரி

No comments: