கண்ணீர் மரம்


நானோர்
கண்ணீர் மரம்

என் கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில் ஓடிவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆகையினாலேயே
என் வாழ்க்கைப் பயண நிமிடங்கள்
இலையுதிர் காலங்களாய் மட்டுமே
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன

என் ஞாபக முடிச்சுகள்
அவ்வப்போது அவிழ்க்கப்பட்டு
கண் நதிகளில் வெப்பக் கண்ணீராய்ப்
பிரவாகமெடுக்கும்

மனமேகங்கள்
அடிக்கடி ஏமாற்ற மரண அடிகளால்
கறுத்துக் கறுத்து
கண்ணீர்க் கடுமழை பொழியும்

என் கற்பனை வசந்தங்களின்
தீவிர நினைவுகள்
தாமே விதைத்துக் கொண்டு
உப்புப் பூக்களைக்
கண் காம்புகளிலிருந்து
கன்ன மாடத்தில் கணக்கின்றி உதிர்க்கும்

என் கண்புறாக்கள்
கனவுகளை அடைகாத்துக்
கண்ணீர்க் குஞ்சுகளைப்
பொரித்துக் கொண்டே இருக்கும்

ஆம்...
நானோர் கண்ணீர் மரம்!

என் கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில் ஓடிவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆனால்
இன்றெலாம்
இந்தக் கண்ணீர் மரம்
வாழ்க்கையை வளைக்கக் கற்றுக்கொண்டது

சிந்த வேண்டியது கண்ணீரையல்ல
பழுப்பேரிய இலைகளையும்
காம்பில் முதிர்ந்த கனிகளையும்தான்
என்று கண்டுகொண்டது

எந்தக் கோடரிக்கும் பிளந்து கொள்ளாமல்
வைரம்பாய்ந்து விம்மி நிற்கிறது

நம்பிக்கை விழுதுகளை
உலகெங்கும் பரப்பி
நிழல் தந்து நலம்பாடும்
நற்கவிதை செய்கிறது

5 comments:

Anonymous said...

"கண்ணீர் மரம்" என்ற சொல் புதுமையாகவும் அழகாகவும் கவிதையாகவும் இருக்கிறது.
அன்புடன்
இக்பால்

Anonymous said...

என்
கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில்
ஓடிவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள் -

என்னே.. அருமையான வரிகள்...

Anonymous said...

என்
கற்பனை வசந்தங்களின்
தீவிர நினைவுகள்
தாமே விதைத்துக் கொண்டு
உப்புப் பூக்களைக்
கண் காம்புகளிலிருந்து
கன்ன மாடத்தில்
கணக்கின்றி உதிர்க்கும்

ஆசான்... அட அட அட... என்ன வரிகள்... மலர்ந்த உடன் உதிர்ந்துவிடும் மலரல்லவோ கண்ணீர்.. ..இப்படி கூட யோசிக்க முடியுமா... என்ன கற்பனை வளம்...

Anonymous said...

நீரில் மிதப்பது தானே கண்கள். அந்நீரை உதிர்த்துவிட்டால் நிலைப்பிடமேது ? நரம்புகளை நிருத்தி நம்பிக்கையை கற்றுக் கொண்டதே! நலம் பயக்கட்டும்.

அன்புடன் ..... சீனா

vasu balaji said...

எந்த வரியைப் பாராட்ட. வார்த்தைகளின்பால் உங்கள் ஆளுமை பிரமிக்க வைக்கிறது.