இன்னாட்டு இளவரசர்கள்


எந்தக் கிரீடமும்
நமக்குச் சூட்டப்படவில்லைதான்
அதற்காக முட்கிரீடங்களையா
நாம் சூடிக் கொள்வது

நெஞ்சத்தின்
அழிக்க மாட்டா ஆசைகளுக்கு
வடிகால்களென எண்ணி
கற்பனைக் குதிரைகளைக்
கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்
கல்லறை வீதிகளிலா பவனி வருவது

கல் தடுக்கலுக்கெல்லாம்
கல்லூரிக் கதவுகளுக்குத்
தாலாட்டுப் பாடிவிட்டு
பொது உடைமைகளில்
நம் ஆத்திரங்களைக் கக்கி
நாசமாக்குவதா நமக்கு வீரம்

சிகரெட்டுப் புகையால்
தற்காலிக மேகங்களெழுப்பி
ஜாக்கி ராணி ராஜாக்களைத்
தோகைகளாக்கிக்
கால முத்துக்கள் கணக்கின்றி அழிய
இதய மயிலைக் காபரே ஆடச் செய்வதா
நம் முழுநேரப்பொழுது போக்கு

குட்டிச் சுவர்களுக்குப் பக்கத்தில்
குட்டிச் சுவர்களாய்
முக முக்காடுகளுக்குள் புகுந்து
புட்டிகளைப் பொசுக்கெனக் கவிழ்த்து
நடு வீதிகளில் நாணம் துறந்து
தலை கவிழும் சுதந்திரமா
நாம் பெற வேண்டும்

என்னருமை இளவரசர்களே
உங்கள் வெள்ளை ரோஜாக்களில்
சேற்றுக் கறைபடிவதை
அறிவு முட்களால் தடுக்கவேண்டாமா
வாலிபம் இப்படியா கெடுவது

தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
உலகை அழிக்க வேண்டாம்
உருவாக்குவோம் வாருங்கள்

3 comments:

Anonymous said...

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
உலகை அழிக்க வேண்டாம் உருவாக் குவோம் வாருங்கள்!" ....அருமையான‌ வ‌ரிக‌ள்! அழிக்க‌ச்சொன்ன‌ பார‌திக்கும், ஆக்குவ‌த‌ற்கு அழைப்பு விடுத்துள்ள‌ புகாரிக்கும் உண‌ர்ச்சியில்தான் வேறுபாடு. பார‌தி ம‌காக‌வி என்றால், புகாரி புர‌ட்சியில் ஓர் ம‌காக‌வி! > கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.

Anonymous said...

இன்னாட்டு இளவரசர்கள் பலர் என்ன செய்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.

என்ன செய்யலாம்?

ஒரு கவிஞனால் குறைந்தபட்சம் தொலைந்த சாம்ராஜ்ஜியத்தை மீட்க மட்டுமே முடிகிறது.. :(

Unknown said...

உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி கிரிஜா மணாளன் மற்றும் நவன்

அன்பு நவன்,
புதிய சமுதாயம் உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்களெல்லாம் கவிஞர்கள்தானே! அதோடு இழந்ததை மீட்டுத்தருவதென்பது இயலும் காரியமா என்ன? இயலவைக்கிறான் கவிஞன் என்றால் பெருமையாகத்தான் இருக்கிறது.

வளர்வேன் வாழ்க்கை தரும் வரிகளைப் படைப்பவனாய். அதற்கான புள்ளிகளை வைக்கும் அனைவருக்கும் என் நெகிழ்வான நன்றிகள்.