கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுமம் எனக்கொரு பாடசாலை. என் சந்தக் கவிதைப் பறவைகளுக்கொரு வேடந்தாங்கல். அங்கே பல கவியரங்களில் நான் பங்கெடுத்து இயன்றதைச் செய்திருக்கிறேன். இனிப்பாக நாட்களைச் சுவைத்திருக்கிறேன். ஒருமுறை ஒரு கவிதைப் பட்டிமன்றம் ஏற்பாடானது. அதைப் பட்டிமண்டபம் என்றழைப்பதே சரியென்று இலந்தையார் கூறி தொடங்கி வைத்தார். பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பின் கீழ் கவிதை பாடவேண்டும்.
பட்டிமண்டபம் தலைப்பு:
வாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்?
1. நல்ல நண்பர்கள்
2. உழைப்பு
3. அனுபவம்
4. அறிவு
5. முகஸ்துதி
6. பிறர் உதவி
7. நெஞ்சுறுதி
8. தன்னம்பிக்கை
9. விடாமுயற்சி
10. எதையும் தாங்கும் இதயம்
தலைவர்: ராஜரங்கன், சென்னை
(என் இதயம் கவர்ந்த இவர் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி)
எனக்குத் தரப்பட்ட தலைப்பு: எதையும் தாங்கும் இதயம்
தலைவரின் அழைப்புக் கவிதை:
புஹாரி ஒரு புதிர்.
மின்னலைச் சிக்கெடுத்து
மெலிதாக அணி செய்து
மின்னாளின் இடுப்பினிலே
மேகலையாய்ச் சூடுகின்றார்.
விரலெடுத்தால் காதலியின்
விதவிதமாம் சுவைகளெலாம்
விவரித்து எழுதுகிறார்
விந்தைகளைச் சொல்லுகிறார்.
வானவில்லை இழுத்து
வண்ணப் புடைவை நெய்து
தேன் உடலாள் சிலிர்க்கத்
துகிலாகப் போர்த்துகிறார்
ஆயிரம் காதற் கவிகளிலே ஓரிரண்டு
ஆன்மீகச் சிந்தனையை அழகாய்ப் பதிக்கின்றார்.
தோயுநெய்ப் பேடாவில் முந்திரி பதிப்பதுபோல்!
தேனீக்கள்கூட்டத்தில் ராணி ஈ வைப்பது போல்!
எதையும் தாங்கும் முதுகு பலர்க்குண்டு
எதையும் தாங்கும் இதயம்தான் அரிதாகும்.
எதையெடுத்துக் கொடுத்தாலும் எளிதாக எழுதுகிற
புதிரான புஹாரியே! எடுத்துவிடும் உம் சரக்கை!
ராஜரங்கன்
என் கவிதை:
சந்த வசந்தப் பந்தலில்
சந்தனக் கிண்ணம் ஏந்திய
அன்புத் தலைவர் ராசரங்கருக்கும்
சுற்றிச் சுழலும் கற்றோர்க்கும்
நற்றமிழ்க் கவிதைக் குமரிக்கும்
அவளெழில் அள்ளி வழங்கும்
பொற்சொல் தமிழன்னைக்கும்
சுகந்த சந்தனம் அள்ளிப் பூசிய
குளுமை குறையா நெஞ்சுடன்
வாசம் வீசும் என் வணக்கம்
0
ஏனிப்படி...
எனக்குமட்டும் இப்படியோர்
அற்புதத் தலைப்பு?
ஆட்டங்கொண்ட தலைப்புகளின்
ஓட்டை உடைசல்களை
தட்டித் தட்டிச் சுட்டிக்காட்டி
பேரீச்சம் பழக்காரனிடம் வீசியெறிய
மனம்வரவில்லைதான் - என்றாலும்
அதுதானே இக்களத் தர்மம் -
வஞ்சகர் ராசரங்கரடா....(கர்ணா...)!
0
நல்ல நண்பர்கள் என்பது
கற்பனையின் உச்சம் - வாழும்
காலம் தராத கனவு முத்தம்
உழைப்பென்பதோ
தேகநலத்தின் பிள்ளை
அள்ளியணைக்கும் ஆவலோடு
ஓடித்திரிந்தாலும் - கைக்கெட்டாமல்
கண்ணாமூச்சு ஆடும் அதிர்ஷ்டம்
பொற்கலை விரல்களால்
புழுதிக் கணக்கெழுத நேரும்
அவலச் சுவடு
அனுபவம் எப்போதும்
நிகழ்த்திய தவறைச்
சுட்டிக்காட்டும் வெட்டி விரல்கள்
முற்றும் முடிந்துபோனபின்
மூலையில் உட்கார்ந்து
அச்சச்சோ என்று
உச்சுக்கொட்டவைக்கும்
குற்றப் பத்திரிகை
அறிவென்பதோ
அரைகுறைச் சொத்து
அகங்கார ஆட்டம்போடும்
ஏட்டுச் சுரைக்காய்
இதய நிறுத்தங்களால்
நிராகரிக்கப்படும் பேருந்து
முகஸ்துதி என்பது
வஞ்ச வார்த்தை லஞ்சம்
மனித இனத்தின்
மகா வெட்கக்கேடு
பிறர் உதவி என்பதோ
பிச்சைதானே உண்மையில்
இந்த யாசகப் பாத்திரமும்
ஒட்டடைகளால் நிரம்பிக்கிடப்பதே
இந்நாள் நடைமுறையன்றோ
நெஞ்சுறுதி என்றால் என்ன
பலகீன இதயத்தில்
உதிக்கும் சூரியனா?
தன்னம்பிக்கை எப்போது
பூத்துக்குலுங்கும்
நடுங்கும் இதயத்தின்
ஒப்பாரி கேட்டா?
விடாமுயற்சி என்போது
விண்ணளக்கும்
ஒளிந்தோடும் இதயத்தின்
முக்கல் முனகல்களிலா?
அடடா... இப்போது
விடை மிகவும் சுலபமாயிற்றே
வெற்றி எனக்கும் நிச்சயமாயிற்றே!
ஆமாம் ஆமாம் பட்டிமன்றமே
உனக்கும் எனக்கும் இப்போது
பட்டென்று விடை சொல்வது
சுலபம் சுலபம் மிகமிகச் சுலபம்!
0
தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம்
0
வெந்துபோன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடைதேடி விடைதேடி
விடைகாணா மயக்கமா?
தெரிந்தவோர் விடைகூட
பச்சோந்தித் தோல்போல
நேற்றுவோர் முகமாகி
இன்றுவோர் நிறமானதா?
தேய்கிறதா மணித்தோழா
துயிலாத உயிர்க்குஞ்சு
விலகாத கதவின்முன்
விரல்கூட்டித் தினந்தட்டி?
நண்பர்களே பகைவரெனில்
பகைவர்தாம் நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா?
ஒளிந்திருக்கும் இருட்காட்டில்
விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா?
நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப்பொய்யோ
தொப்புள்கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய்பொய்யோ?
காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்டஞானக் கீற்றின்முன்
நீயுந்தான் ஓர்பொய்யோ?
அய்யய்யோ நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடுகாட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா?
துயர்வேண்டாம் உயிர்த்தோழா
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்துகொள் புரிந்துகொள்
தெளிவாய்ஓர் பேரூண்மை!
இன்றுதான்உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப்பயணம்
உண்மையான பொற்தளத்தில்
உயிர்ச்சுவடு பதிக்கிறது!
முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளைவிட்டு வெளியில்வா!
சத்தியங்கள் அனைத்தும்நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் வெண்குதிரை
விவரமுடன் ஓடுமோடா!
துயரங்கள் பெருக்கெடுக்க
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இருபுறமும் அலசிப்பார்!
வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப்போகும் இன்பமினி
வந்தவற்றை விஞ்சுமடா!
செலவுகளில் சிதையாமல்
சொர்க்கவழி தினந்தேடு
வரவுகளை எதிர்நோக்கி
வலுவாக நீச்சலிடு!
ஓடுடைத்து இம்முறைநீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்!
0
தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம்
No comments:
Post a Comment