*****32

வேணுமுங்க ஒங்கதொணை

#தமிழ்முஸ்லிம்


கிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம். அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.

முப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றாலும், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.


காசு பணஞ் சேத்துவரக்
கடல் கடந்த மச்சானே
ஊசி மொனை மேல நின்னு
ஒங்க வுசுருத் துடிக்குதுங்க

பேசி நீங்க வச்சப்படி
பெசகாம வந்துருங்க
காசு கொஞ்சம் போதுமுங்க
காலடிதான் எனக்கு வேணும்

காலையில எழுந்திருச்சா
கண் மூடப் பாய் விரிச்சா
மாலையிட்ட ஒங்க மொகம்
மனச வந்து உசுப்புதுங்க

சேல மாத்தக் கசக்குதுங்க
சீவி முடிக்க நோவுதுங்க
வேல முடிஞ்சக் கையோட
விம்மியழுவத் தோனுதுங்க

ஆச வச்சேன் ஒங்கமேல
அதுக்கெனவே அலங்கரிச்சேன்
நேசமுள்ள ஒங்களோட
நெனப்புல நான் பூப்படைஞ்சேன்

பாசமுள்ள எந்தகப்பன்
பரிசத்தையும் போட்டாங்க
காசுபணம் பாக்காமக்
கல்யாணமும் ஆயிருச்சு

ஆனப்புறம் முப்பதுநாள்
அருகிலயே இருந்தீங்க
தேனப்போல எனையள்ளித்
தெவிட்டாமக் குடிச்சீங்க

மானைப்போல துள்ளிநானும்
மருதாணையாச் செவந்தேங்க
ஏனுன்னே தெரியாம
எதுக்கெதுக்கோ சிரிச்சேங்க

ஊரு நம்மப் பாத்ததுமே
ஓமலிப்பு வச்சதுங்க
தேருபோல நீங்கவரத்
தெருக்கண்ணே பட்டதுங்க

காருகாரா மாறியேறிக்
காட்டினீங்க ஊரெல்லாம்
சோறுதண்ணித் தேடாமச்
சொகத்துலநான் மெதந்தேங்க

ஊரொலகம் நம்மப்போல
உசுருசுரா இருக்குமான்னு
நூறுமொறக் கேட்டிருப்பேன்
நொரையலையா பூத்திருப்பேன்

யாருசெஞ்ச புண்ணியமோ
எனக்குநீங்க கெடச்சீங்க
வேருபோல நாயிருந்து
வெளங்கவெப்பேங் குடும்பத்தை

சேதியொன்னு நாஞ்சொன்னாச்
சின்னமீனாத் துள்ளுவீங்க
சேதிசொல்ல வாயெடுத்தா
சிலுக்குதுங்க எம்மனசு

பாதி ஒலகம் பாத்தநம்மை
மீதி கூடத் தேடிவருது
தேதி தள்ளிப் போயிருச்சி
தெரியுதாங்க என்னன்னு

தேதி தள்ளிப் போனதாலத்
தேட்டமாகிப் போனதுங்க
பாதி உசுரு நீங்கதானே
பக்கத்துல காணலியே

சாதிசனம் இருந்தாலும்
சமம்வருமா உங்களுக்கு
வேதனையா இருக்குதுங்க
வேணுமுங்க ஒங்கதொணை

No comments: