அன்பின் இக்பால் ஹசன்,
>>>வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் நபிமொழி என்பது வஹியின் மற்றொரு வடிவம்.<<<
பார்த்தீர்களா நான் முன்பே சொன்னேன். குர்-ஆனுக்கு இணைவைப்பதும் இறைவனுக்கு இணைவைப்பதும் ஒன்றுதான் என்று. இப்போது நீங்களே குர்-ஆனுக்கு இணைவைக்கிறீர்கள். இது மகா பிழையல்லவா?
>>> "அவர் தன் இஷ்டப்படி எதையும் கூறுவதில்லை.
இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை." - 53 : 3,4<<<<
இதை எப்படிப் புரிந்துகொண்டீர்கள்? பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்.
அன்று குர்-ஆன் வசனங்கள் இறங்கியபோது அரபு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நீ உன் சொந்தச் சரக்கில் கூறும் கட்டுக்கதை. இதை இறைவனின் வாக்கு என்று பிதற்றாதே என்று கடுமையாகச் சாடினார்கள். அப்போது வந்த வசனம் இது.
இதன் படி நபிபெருமானார் குர்-ஆன் வசனம் என்று சொல்வது அவரின் இஷ்டப்படி கூறுவதில்லை. அது அவருக்கு வஹி மூலமே அறிவிக்கப்பட்டது.
>>>"உங்கள் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
எதை விட்டு தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்." - 59 : 7<<<<
இதையும் நீங்கள் பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நபி பெருமானார் முன் மாதிரியாக வாழ்ந்தார் என்பது ஐயமின்றி உண்மை. ஆனால் அவர் குர்-ஆனைத்தான் பின் தொடர்ந்தார். குர்-ஆன் வழிதான் நடந்தார். தனக்கு ஒன்று மக்களுக்கு ஒன்று இரண்டு வழிகளை அவர் கடைபிடிக்கவில்லை. அதைத்தான் இந்த வசனம் சொல்கிறது.
அதுமட்டுமல்ல, நீங்கள் குர்-ஆனை அப்படியே பின்பற்றி நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் நபிவழி நடக்கிறீர்கள் என்றுதான் பொருள். ஏனெனில் நபிபெருமானார் குர்-ஆனைப் பின்பற்றி நடந்தார். குர்-ஆன் வசனம் வர வர அதன்படியே அச்சுபிசகாமல் நடந்தார். நீங்களும் குர்-ஆன் வழி நடந்தால் அப்படியே நபிவழி நடக்கிறீர்கள் என்று பொருள்.
>>>>இறைத்தூதர் நமக்கு கொடுத்ததையும் தடுத்ததையும் நபிமொழிகளின் மூலமாகத்தான் விளங்க முடியும். <<<<
குர்-ஆன் மூலமாகத்தான் விளங்கமுடியும். குர்-ஆன் உங்களுக்குப் புரியாத பட்சத்தில் நபி பெருமானாரின் விளக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அது குர்-ஆனுக்கு மாற்றாக இருக்காது. இருக்கவும் கூடாது.
என்ன ஒரு சங்கடம் என்றால் நபி பெருமானார் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்னதெல்லாம் மிகச் சரியாக இருந்தன. அவரின் மறைவுக்குப் பின் அவர் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றையும் கூறத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் பல லட்சம் ஹதீதுகள். அவற்றுள் சில தவிர பல லட்சம் பதர்கள்.
சில ஹதீதுகளை மறுப்பது நபி பெருமானாரை மறுப்பதல்ல, நபி பெருமானார் சொன்னார் செய்தார் என்று சொல்லும் சிலரின் பிழையான கூற்றை மறுப்பது.
>>>அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று.<<<
மிகவும் சரி. ஏனெனில் குர்-ஆனின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்க்கையாக்கிக்கொண்டார் நபி பெருமானார். அதைத்தான் நீங்களும் செய்யவேண்டும். செய்தால் நீங்கள் நபி பெருமானாரைப் பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். இறைவனை வணங்குகிறீர்கள் என்று பொருள். வணங்குவது என்பது ஏற்பது என்றும் பொருள்படும்
அன்புடன் புகாரி