5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை
பெற்றோர் காத்தும்
பெற்ற பிள்ளைகளைப் பேணியும்
கரம் பற்றியவள் மகிழ என்றும்
உற்ற துணை நிற்பவன்
குடும்பத்தன்
வயிற்றில்
பசியோடு வாடுவோர்க்கும்
வாழ்வில்
பிடிப்பற்று விழுந்தோர்க்கும்
யாருமற்ற
பிணமாகக் கிடப்போர்க்கும்
பெருந்துணையாக நிற்பவன்
குடும்பத்தன்
மூதாதையர் பெருமை
மனத்தால்
மேலானவர் தொண்டு
வீடுவந்த
விருந்தினர் உபசரிப்பு
சுற்றியுள்ள
சுற்றங்களின் நலன்
தன்னோடு
வாழ்வோரின் வாழ்வென்ற
ஐவகையினரையும்
அன்போடு காப்பவன்
குடும்பத்தன்
பொருள் தேடும் முயற்சிகளில்
பழிபாவத்திற்கு அஞ்சுவதும்
ஈட்டிய பொருளை
இல்லாதவனுக்கும் பகிர்ந்தளிப்பதும்
நெறிகள் நிறைந்த
நேர்மை வாழ்வாகும்
நெஞ்சமெங்கும்
அன்புமலர் பூப்பதும்
செயல்கள் யாவிலும்
நீதிநெறி காப்பதும்
குடும்ப வாழ்வின்
சிறந்த பண்புகள்
குறையாது
நிறையும் பயன்கள்
நீதிநெறி போற்றி என்றும்
குடும்ப வாழ்வில் சிரிப்பதே
இன்பம் இன்பம்
துறவியாகித் தொலைந்து போவதில்
வருவதெல்லாம் துன்பம் துன்பம்
இயற்கையின் இயல்பு வழியில்
இனியநல் குடும்ப வாழ்வை
இன்பமாய் வாழ்பவனே
துறவு, பிரமச்சரியம் என்று
வேற்று வழி போற்றிப்
பின்பற்ற முனைபவனைவிட
பன்மடங்கு மேலானவன்
நீதிநெறி போற்றி வாழும்
குடும்ப வாழ்வைத் தானும் வாழ்ந்து
தன்னோடு பிறரையும்
வாழ்ச் செய்பவனின் வாழ்வானது
தவம் செய்து வாழ்பவனின்
துறவு வாழ்வை விட
பன்மடங்கு உயர்ந்தது
நீதிநெறி என்பதும்
நல்ல குடும்ப வாழ்க்கை
என்பதும் ஒன்றேதான்
அத்தனைச் சிறப்புடைய
குடும்ப வாழ்வில்
பிறரின் பழிச்சொல்லும்
பெற்றிடாமல் வாழ்வதோ
சிறப்பின் உச்சம்தான்
இந்த மண்ணுலகில்
வாழும் நெறி காத்து
நல்ல குடும்ப வாழ்வில்
நிலைபெற்று வாழ்பவன்
அந்த விண்ணுலக மேலோர்க்கு
இணையாகப் போற்றப்படுவான்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல நடையில் இனிய கருத்துகள் நிறைந்த கவிதை. பாராட்டுகள்
அன்புடன் ..... செல்வி ஷங்கர்
புகாரி,
கவிதை விரும்பிகள் அதிகம் உண்டு. குறள் கவிதைகள் பலரையும் சென்றடையும். உண்மை.
குட்டை அடிகளுக்குள் நெட்டைக் கருத்துகளை இனிதே திணிக்கும் இந்தக் கவிதை நடை
சிலருக்கு மட்டுமே இயல்பு. சுவைப்பவர் பலரும் அமைதிப்படையினர் தானே.!
அன்புடன் ..... செல்வி ஷங்கர்
//நீதிநெறி போற்றி என்றும்
குடும்ப வாழ்வில் சிரிப்பதே
இன்பம் இன்பம்
துறவியாகித் தொலைந்து போவதில்
வருவதெல்லாம் துன்பம் துன்பம் //
இல்லறமும் துறவறமும் அதனதன் தர்மத்தில் இரண்டுமே சிறந்தவை எனப் பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரண்டு விதமான மனப்பான்மையும் வேண்டும் என்பதும் ஏற்கக் கூடியதுதானே..?
நவன்,
துறவு என்பது வாழ்வைவிட்டு வெளியேறுவது என்றால் அது கூடவே கூடாது.
துறவு என்பது மனதில் முதிர்ச்சியாகி, சின்னச் சின்ன அதிர்களிலெல்லாம் சிக்கிக்கொள்ளாமல், அமைதி காப்பது என்றால் நான் அந்தத் துறவை மதிக்கிறேன். அது ஒரு வயதுக்குமேல், அறிவின் முதிர்ச்சியில் வரும்.
துறவி கடும் சினம்கொண்டு சாபம் விட்டான் என்று கூறினால் எனக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அவன் எதைத் துறந்தான்? உழைப்பையும், குடும்பம் காக்கும் பொறுப்பையும் விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டு தன் சுயத்தேவை எதையுமே துறக்காதவன் என்று பொருள் கொள்வேன்.
அதீத அன்பையும் மன்னிக்கும் பண்பையும் எல்லாவற்றுக்கும் மேலே நின்று பார்க்கும் கருணையையும் மனிதனுக்கு வழங்கினால்தான் அது துறவு. அந்தத் துறவை வீட்டைவிட்டு ஓடிப்போய் பெறவேண்டுமா.
நன்கு இரசித்தேன். வாழ்த்துக்கள்!
அன்புடன்,
வி.க.
Post a Comment