எனக்கொரு பயம்


பொருளாதாரப் புண்கள்
நெஞ்சில் புரையோடிவிட்டன

அன்பு பாசம் நேர்மை
என்பனவெல்லாம்
படுபயங்கரமாய் நொறுக்கப்படுவது
இந்தப் பொருளாதாரச்
சுத்தியலால்தான்

எதுவும் பறிபோகும் பொல்லா உலகில்
எப்படியேனும் வாழவேண்டும்
என்பதே இதயங்களின்
ரகசிய விருப்பாகிவிட்டது

ஒற்றைக் காலில் நின்று
தன் தசையையே
கொதிக்கும் கண்ணீராய்
உகுத்து உகுத்து
மரித்துக் கொண்டிருந்தாலும்
மனிதர்களுக்கு
மெழுகுவர்த்தியிடமிருந்து
கண்டிப்பாய் வெளிச்சப் பலன்
வந்துதானே தீரவேண்டும்

தன்னைப் பிழிந்து வரும்
இரத்தத்திற்கே
மனிதர்கள்
தாபப்படுகிறார்களென்றால்
எந்த இதயம்தான்
பொறுத்துக்கொள்ளும்

எங்கு நோக்கினாலும் மனிதர்கள்
அகலத் திறந்த வாயுடன்தான்
அலைகிறார்கள்

அடுத்தவனை எப்போது
அடித்து விழுங்கலாமென்றே
ராஜ திராவகமாய்க் கொதிக்கிறார்கள்

இப்பொழுதெல்லாம்
எனக்கொரு பயம் பிறக்கிறது

எங்கே
என்னுடைய கைகளே
என் மூக்கிற்கு வரவேண்டிய
மூச்சுக் காற்றைத் திருடிக் கொண்டு
உயிருக்கு உலைவைத்து விடுமோ
என்று

3 comments:

Anonymous said...

ஆசான்.. இந்த பயம் மட்டும் தான் நம்மை வாழ வைக்கிறது.. இல்லையென்றால் ... அவ்ளோதான்

Anonymous said...

அன்பின் புகாரி,

ஆரவாரமிலாமல் கரைவந்து
ஆரத்தழுவி மண்ணை அணைக்கும்
ஆழிப்பெருங் கடல்
அலைகளைப் போல
அன்பின் நண்பர்
ஆசான் புகாரியும்
அறிவு பொதிந்த கவிதைகள்
அழகாய்க் கொடுக்கும் வண்ணம்
அடியேன் நினைவுத் துளியில்
அடுக்கும் தேன்துளிச் சுவையை

>> எங்கே என்னுடைய கைகளே
என் மூக்கிற்கு வரவேண்டிய
மூச்சுக் காற்றைத் திருடிக் கொண்டு
உயிருக்கு உலைவைத்து விடுமோ
என்று >>

அருமையான கருத்து. அன்பான பாராட்டுகள்

அன்புடன்
சக்தி

Anonymous said...

புகாரி,

பொருள் காற்று நுழையா இடத்திலும் நுழைந்து காலத்தைத் தலைகீழாக்கும் தன்மை உடையது. என்ன செய்வது ?

அன்புடன் ..... சீனா