ஆழ்கடல் எறிந்தாலும்
அழகு
முத்தோடு வருவான்
தமிழன்
அந்த
ஆகாயம் எறிந்தாலும்
புதுக்
கோளோடு வருவான்
தமிழன்
வண்ண
வேல்விழி மாந்தரும்
வீணே
விளையாடிக் கிடப்பதில்லை
நல்ல
வாழ்வின் வழியறிந்தே
பெருகி
வாழ்வாங்கு வாழ்வர்
*
அல்லல்பட்டத் தமிழனிங்கு
ஆளவந்தாய்
ஆகாயம் எல்லையென
ஓங்கவந்தாய்
தொல்லைதந்த
அரக்கர்விழி பிதுங்கிச்சாக
தூரம்வந்தும்
இடியெனவே முழங்குகின்றாய்
நல்லநாளும்
தூரமில்லை கூறுகின்றேன்
நான்மட்டும் அல்ல
இந்த வையகமே
அல்லும்பகல்
உழைப்பினையே போற்று
அருகில்வரும்
வெற்றியொளிக் கீற்று
*
வேர்களுக்கு வாசமுண்டு
ஓரடிக்குள் வீசும்
விழுதுகளின் வாசனையோ
ஈரடிக்குள் வீசும்
நார்மாவின் வாசனையோ
மூன்றடிக்குள் வீசும்
நல்லமலர் வாசனையோ
நாலடிக்குள் வீசும்
பார்புகழ வீசுதைய்யா
தமிழர்தம் வாசம்
பன்மடங்கு வளரவேண்டும்
மேலும் மென்மேலும்
ஊர்பெயர்ந்து
உயிர்த் தமிழின்
தேரிழுக்கும் தமிழா
உயரட்டும் உயரட்டும்
தமிழினம் உலகெங்கும்
முத்தமிழ் வளர
எத்திசை பெயர்ந்தும்
முத்திரை பதிக்கும்
வித்தகத் தமிழா
என்றென்றும் உயர்ந்துயர்ந்து
வாழ்க வாழ்க பல்லாண்டு
1 comment:
அன்பின் புகாரி,
தமிழன் எங்கிருந்தாலும் தமிழ்ச் சேவை செய்வான் - தமிழும் அவனுடனிருக்கும். அருமையான அடிகள் - வாழ்த்துகள்.
அன்புடன் ..... சீனா
Post a Comment