*பின்நவீனத்துவக் கவிதைகள் எழுதலாம் வாருங்கள்*
விரைவில் நான் எழுதிய பின் நவீனத்துவக் கவிதைகளை எல்லாம் முகநூலில் இடப் போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும் பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு என்று சரசரவென்று ’லைக்’ ’லைக்’ ’லைக்’ சொடிக்கிவிட்டீர்கள், நன்றி.
ஆனால் நான் இடும் கவிதை பின் நவீனத்துவக் கவிதைதானா என்று எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டால்தானே நாம் பின் நவீனத்துவக் கவிதையை ரசிக்க முடியும்?
பின் நவீனத்துவம் என்பது....
----ஒரு தத்துவ சிந்தனை அல்ல.
----ஒரு வலுவான தரப்பு அல்ல.
----ஒரு எழுத்துமுறை அல்ல.
----ஒரு பொதுப்போக்கு (Trend) மட்டுமே.
என்று ஜெய மோகன் கூறுகிறார்.
யாருக்காவது சந்தேகம்?
பின்னவீனத்துவம் என்பது ஒரு தத்துவச் சிந்தனை அல்ல - ஜெயமோகன்.
பிறகென்ன, இதுவரை என்ன தத்துவம் கொண்டு எதை எழுதிக்கொண்டிருந்தீர்களோ அவையெல்லாம் பின்னவீனத்துவப் படைப்புகள் அல்ல.
அவை அத்தனையும் பின் நவீனத்துவப் படைப்புகள் அல்ல என்று நீக்கிவிடுங்கள்.
பின்நவீனத்துவம் என்பது ஒரு வலுவான தரப்பு அல்ல - ஜெயமோகன்
அப்படியென்றால் வலுவிழந்த தரப்பு என்றுதானே அர்த்தம். என்றால் பின்நவீனத்துவக் கவிதை எழுதுவது எப்படி. வலுவில்லாத தரப்புகளை எங்கே என்று தேடுவது.
நாம் எழுதும் எதுவும் வலுவானதாக இருத்தல் கூடாதே!
அதற்காக அது அப்படியே சாரமிழந்து சக்தியிழந்து சொல்லிழந்து சுவையிழந்து என்றா நினைக்கிறீர்கள்?
ஆமாம் அப்படித்தானே நினைக்கத்தோன்றுகிறது?
சரி, பின் நவீனத்துவக் கவிதை என்பது எப்படித்தான் இருக்க வேண்டும்?
Postmodenism என்ற மேலை நாட்டுச் சரக்குதான் இந்தப் பின்நவீனத்துவம்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதி நமக்கெல்லாம் கட்டளையிட்டிருக்கிறான்.
ஆகவே மேலைநாட்டுச் சரக்கு என்றாலும் அதன் தரம்பார்த்து ஏற்புடையதெனில் அதைத் தமிழுக்குள் அழைத்துக் கொள்வது தமிழராகிய நம் கடமை. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் அப்படியே சரக்கோடு சரக்காக, நீங்களும் உங்கள் வேர்களை அறுத்துகொண்டு ஓடிப்போகாதிருந்தால், ஒழிந்துபோகாதிருந்தால், சோரம்போகாதிருந்தால் சரி.
பின்நவீனத்துவம் என்பது ஒரு தத்துவச் சிந்தனை அல்ல என்கிறார் ஜெயமோகன். ஆகவே என்ன எழுதுகிறோம் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்.
பின்நவீனத்துவம் என்பது ஒரு வலுவான தரப்பு அல்ல என்கிறார் ஜெயமோகன். என்றால் எந்தத் தரப்பும் அல்லது தரப்பே இல்லாத எதுவும் அதற்கு ஏற்புடையதுதான் என்றாகிறது. ஆகவே உங்கள் நடைமுறைக் கவிதைகளை நீங்கள் மாற்றிக்கொள்ளாமலேயே பின்நவீனக் கவிதைகளைப் படைக்க இயலும் என்றாகிறது.
பின்நவீனத்துவம் என்பது ஒரு எழுத்துமுறை அல்ல என்கிறார் ஜெயமோகன்.
அதாவது நீங்கள் பூடகமாக எழுதத் தேவையில்லை. சிக்கலான வாக்கிய அமைப்புகளால் தமிழைச் சிதைக்கத் தேவையில்லை. சொந்த நாட்குறிப்புப்போல எழுதத் தேவையில்லை. களவுப் பூனையாய் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து ஒன்றுமே புரியாத, உங்களுக்கே விளங்காத கவிதைகளை(?) எழுதத் தேவையில்லை.
பின்நவீனத்துவம் என்பது ஒரு பொதுப்போக்கு (Trend) மட்டுமே என்கிறார் ஜெயமோகன்.
அப்படியா? இதுவரைக்கும் எல்லாம் புரிந்தது. இது புரியவில்லையே என்கிறீர்களா? அது என்ன பொதுப்போக்கு (ட்ரெண்டு) என்று முடி எழுந்து நிற்கின்றனவா? கவலை வேண்டாம் அதையும் நாம் கண்டுபிடித்துவிடுவோம்.
இந்த ட்ரெண்டு என்று சொல்வது ஒரு காலத்தில் இருக்கும் பின் இன்னொரு காலத்தில் மாறும் பின் பழைய ட்ரெண்டே புதிய முகத்தோடு மீண்டும் வரும்.
குடுமி கிராப்பாகி மொட்டையாகி நீள் முடியாகி மீண்டும் குடுமியாகி என்ற எத்தனை ட்ரெண்டை மயிரில் பார்த்துவிட்டோம்?
அப்படியே மாத்திக்கொண்டே போகவேண்டியதுதான். இன்று மொட்டைதான் ட்ரெண்ட் என்றால் மொட்டைக் கவிதை எழுதுங்கள்.
ஒரு மொட்டைக் கவிதைதான் பின்நவீனத்துவக் கவிதையா என்று கேட்கிறீர்களா?
இதற்கான பதிலை என்னிடமிருந்தா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
அன்புடன் புகாரி
20140000