சத்தியம் அசத்தியம்
இரண்டுக்கும் இடையில்
புதிதல்ல போராட்டம்

அறிவை துணிச்சலை
யாசித்தே சத்தியம்

தங்கமுலாப் பொய்களால்
சத்தியத்தின் சங்கறுத்தே
அசத்தியம்

ஆயிரத்து நானூற்று
முப்பத்தைந்து ஆண்டுகளும்
நழுவியே போனால்தான்
என்ன

சத்திய நூல்தானே
நிலைக்கும்

இதோ
அறிவும் துணிச்சலும்
ஐந்தாம் வயதினிலேயே
அதுதான்
புதிய தலைமுறை

சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக
அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்
(குர்-ஆன் 17:81)

அழிக்கவொண்ணாத் தமிழின்பம்

#தமிழ்

இதோ இன்னும் ஒரு சொல்லடுக்கு.

இப்படியான சொல்லடுக்குகளை மேடைகளில் உதிர்க்கும்போது, பொன்னுதிர்வதைப் போல் புன்னகைகள் உதிர்வதைக் காண்கிறேன்.

இழக்க வேண்டுமா என்ன அழிக்கவொண்ணா இத்தமிழ் இன்பத்தை?


கண்ணேறிக் கருத்தேறிக்
        கற்பனைத்தேர் கவிகளேறி
எண்ணேறி எழுத்தேறி
        ஏட்டுத்தேன் கூடுகளேறி
சொல்லேறிச் சுவையேறி
        சொல்லழகுச் சொர்க்கமேறி
எந்நாளும் நீந்துகின்றேன்
         காதல் தமிழ்க் கடலேறி

மேடையேற்றும் தமிழ்

மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.

மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.

செவிப்புலனைச் சிலிர்க்க வைக்கும் சிறப்பு மொழி தமிழ்தான். ஏன்? தமிழன் சங்ககாலம்தொட்டு அதற்கு முன்னும்கூட சொற்களின் சுவைபார்த்துக் கோத்தெடுத்த கவிதைகளையே நேசித்தான். எதுகை என்றும் மோனை என்றும் அசை என்றும் சீர் என்றும் மொழியை அழகுபடுத்தினான். செவி ஒன்றைச் சரியாகக் கேட்டுப் பதிவு செய்துவிட்டால் அவன் உயிர்பிரிந்தாலும் அச்செவி அதை மறப்பதில்லை.

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ

என்று பாரதி சொல்கிறான். இதைக் கேட்டால், இறந்துபோன காதலிகூட மீண்டும் உயிர்பெற்று ஓடிவருவாளா இல்லையா? இதையே மொக்கையாய் எழுதினால் உயிரோடு இருக்கும் காதலியும் செத்துப் போவாள் ;-)

என்றும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காகவே ஒரு மொழி தன் இலக்கியத்தை வடிவமைத்திருக்கிறது என்றால் அது தமிழ்தான். ஒரு குறளைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. ஒரு பழமொழியைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. உதாரணம்...

அறுக்க முடியாதவ இடுப்புல
ஆயிறத்தெட்டு அறிவாள்

படிப்பறிவே இல்லாத மக்களும் தமிழின் சுவைகுன்றாது பாடுவார்கள். அப்படியான பின்னணியைக் கொண்டதுதான் தமிழ் மொழி. உதாரணம் இந்தப் பாட்டு. இதை வைரமுத்து ஒரு திரைப்பாடலுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று நாமறிவோம்.

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை
எழுதி நான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்

எத்தனைதான் நான் என் ஊரைப்பற்றி சொல்லி இருந்தாலும் இப்படிச் சொன்னதற்கு இணை என்று நான் எதனையும் கருதவில்லை

வானூறி மழைபொழியும்
வயலூறி கதிர்வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் உரந்தையில்...

ஆகவேதான் மேடையேறினால் நான் இயன்றவரை தமிழின் தனக்கே தனக்கான சொந்த நடையைப் பின்பற்றி எழுத முயல்வேன். பின் வந்த நடையிலும் தமிழின் சொந்த நடையைக் கலந்து சுவையேற்றி மேடையேற்றுவேன்.

நேற்று ஓர் மேடையேறினேன், அதில் நூலாசிரியரின் ஆற்றலைப் பாராட்டத் தோன்றியது. அதை இப்படி எழுதி ஏற்றினேன் மேடையில். இறுதி வரிகளில் பொதுமைப்படுத்துவதற்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.

ஊற்றுநீர்
மண்ணுடைத்தே வெளியேறும்
உறவுநீர்
கண்ணுடைத்தே கரையேறும்
ஆற்றுநீர்
அலைமிதித்தே கடலேறும்
ஆற்றல்தான்
அனைத்துக்கும் மேலேறும்
ஏற்றவான்
ஏறிக் குடியேறும்
எஃகிரும்புக் கால்களே
ஏற்றந்தான்
மாற்றமே இல்லை
பூமியுங்கள்
தோள்களின் மேலே

Kill the unbelievers wherever you find them

இசுலாம் தொடர்பான தங்கள் பதிவுகளை ஏற்கனவே பார்த்துள்ளேன்,

( “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191

“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
...
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85)

-இலங்கை நேசன் இலங்கை

இப்படி ஒரு கருத்தை சென்னையே சிறந்த நகரம் என்று நான் இட்ட ஏற்றுமடலுக்குக் கருத்திடல் பகுதியில் திரு இலங்கை நேசன் எழுதி இருக்கிறார்.

இதற்கான மறுமொழியை நான் இங்கே எழுத இருக்கிறேன். உண்மையறியாது அவர் ’இடையில் வாசித்து’ குழம்பியிருக்கும் ஒன்றைத் தெளிவு படுத்த வருகிறேன்.

பணிச்சுமை காரணமாக நான் சொட்டுச் சொட்டாய் கொட்டும் அருவையாகவே இருக்க முடியும். அதை மட்டும் அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் அத்தனையையும் கொட்டி முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இஸ்லாம் இஸ்லாமியர்களாலேயே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மார்க்கம். மாற்று மதச் சகோதரர்கள் பிழையாகப் புரிந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

”சகோதரனின் அடிபட்ட காலில் சீழ்பிடித்து வேர் அழுகி அதன் காரணமாக உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் அவன் உயிரைக் காக்கும் பொருட்டு சித்த மருத்துவக் குறிப்பிற்கிணங்க, பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இது ஒரு வரலாற்றுக்குக் குறிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து....

”பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இந்த வரிகளை மட்டும் எடுத்து போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டுங்கள். என்ன நடக்கும்?

http://www.tamililquran.com/qurandisp.php?start=2#2:191 இங்கே செல்லுங்கள்

குர்-ஆன் வசனங்கள்:

2:190
2:191
2:192

ஆகியவற்றை வாசியுங்கள்.

பிறகு நாம் நிறைய பேசுவோம் சகோதரரே!


*

முதலில் குர்-ஆனை எப்படி அணுகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.

நீதிமன்ற வழக்குகளைப் போலவும் அதற்கான தீர்ப்புகளைப் போலவும் தான் பெரும்பாலும் குர்-ஆன் வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய அராபியர்களின் வரலாற்றினைத் தெரிந்துகொண்டு, அதனோடு தொடர்பு படுத்தி வாசிக்கும்போது குர்-ஆன் மிக மிக எளிமையானதாய் இருக்கும்.

குர்-ஆனைப் புரிந்துகொள்ள ஹதீதுகளின் துணை தேவையே இல்லை. ஆனால் அன்றைய வரலாற்றை அறிந்திருந்தால் அது நிறையவே கைகொடுக்கும்.

அண்ணல் முகம்மது நபியின் வரலாறு, அவரின் பிறப்பு முதல் இறப்புவரை சரியாகச் சொல்லும் வரலாறு மிகவும் முக்கியம்.

The Messenger என்ற ஓர் திரைப்படம் அப்படியான வரலாற்றின் தேவையான பகுதிகளைத் தெளிவாகக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=17C6HOp8NIA

இந்தப்படத்தை அழகாகத் தமிழுக்கு மொழிமாற்றி இருக்கிறார்கள். அப்படத்தை நான் உங்கள்திரையில் YouTube கண்டேன் ஆனால் தற்போது அது உரிமம் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை ஒரு முன்னுரையாக மட்டும் எடுத்துக்கொண்டு, அண்ணல் முகம்மது நபியின் வரலாற்றையு அன்றையநாள் அராபியாவையும் பல நூல்கள் வழியாக வாசிக்கலாம். இணையத்திலும் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

*

இலங்கைநேசன் இலங்கை பைபிளுக்கு விவிலியம் என்பதுபோல் குர்ஆனுக்கும் ஏதாவது பெயர் உண்டா

அன்புடன் புகாரி உண்மையைச் சொல்லப்போனால், குர்-ஆனுக்குப் பெயரே இல்லை. வானவர் மூலம் அண்ணல் முகம்மது நபிக்கு இறைவனிடமிருந்து வந்த செய்திகள் தான் குர்-ஆன் என்று சொல்லப்பட்டது. குர்-ஆன் என்றால் ‘ஓதப்பட்டது’ என்று பொருள். இறைவனின் திருமறையில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட குர்-ஆன் என்ற சொல்லையே அந்தத் தொகுப்புக்குப் பெயராகச் சூட்டினர். மற்றபடி இது ஒரு நூல், இந்நூலின் பெயர் குர்-ஆன் என்று இறைவன் சொன்னதாக நான் எங்கும் கண்டதில்லை. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் இலங்கைநேசன் இலங்கை. நிறைய கேளுங்கள், அப்போதுதான் நான் எதைச் சொல்லலாம் என்ற முடிவுக்கு வரமுடியும். உங்கள் கேள்விகள் மெமையாக இருக்க வேண்டும் என்றில்லை, குத்தீட்டியாகவும் இருக்கலாம். நன்றி

4 முகநூல் முத்தங்கள்

பத்துவிரல் நர்த்தனங்கள்
பரந்தவெளிக் கணித்திரையில்

ஒத்தமனம் தேடித்தேடி
ஓய்ந்திடாத கணிமொழிகள்

முத்தமென்றே ஆனதன்றோ
முகநூலின் ’லைக்’-மின்னல்

எத்தனைதான் குவிந்தாலும்
ஏங்குமனம் தூங்குதுண்டோ


ராசமல்லிப் பூவொன்று
ரகசியமாய் வந்து நின்று
வாசமுடன் பூத்ததென்னவோ - பின்
வாடிமுகம் மறைத்ததென்னவோ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


இன்றெல்லாம்
உலக நிகழ் மேடைகளில்

கூட்டமாய் ஓநாய்களும்
நடுவில்
ஒற்றை ஆட்டுக்குட்டியும்
காட்சிகள்தாம்

வதைகளை ரசிப்பதும்
வதைகளை ஆக்குவதுமாய்
கேடுகெட்ட இவ்வுலகம்

தர்மம் மீட்க
அரசியலே தீர்வு

ஆனால்
அந்த அரசியலோ
அறத்தை 
அடியோடு எரித்துவிட்டு
ஊழல் கூண்டில் 
சிறகொடிந்து
படுத்துக் கிடக்கிறது

மக்கள்
மாறாது
மண்
மாறாது

மனிதம் என்னும்
இறைநிலை
முழுதாய் முடிந்துபோன
முற்றுப் புள்ளியில்
எது துளிர்க்கும்?



7 ஆகஸ்ட் 15

சுதந்திரமாக
இன்று
என்ன செய்யலாம்
என்று கேட்டு
என் மனைவியின்
உத்தரவிற்காகக்
காத்திருக்கிறேன்

5 பெருமைகொள் இந்தியா

பெருமைகொள் இந்தியனே

இந்தியா...
31 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள் ...
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய திருவிழாக்கள்

நிலப்பரப்பால் ஏழாவது மிகப்பெரிய நாடு

மக்கள் தொலையால் இரண்டாவது மிகப்பெரிய நாடு

மக்கள் தொகை அதிகம் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு

எத்தனை எத்தனையோ
கற்கள் எறியப்பட்டும்
இன்னும்
இந்தத் தேன்கூடு
எப்படித்தான்
ஒட்டியே இருக்கிறது
என்பதே
உலகின் மிகப் பெரிய அதிசயம்

ராக்கெட் விடுவதோ
செவ்வாய்க் கோள் செல்வதோ

அல்ல!
15

இறைவன் இறைவன்
என்று கதறுகிறாய்

சொர்க்கம் சொர்க்கம்
என்று அலைகிறாய்

மரணத்திற்கு முன்
மகத்தான வாழ்க்கை இருக்கிறது
என்று தெரியுமா உனக்கு

சின்னஞ்சிறு
போலி வட்டத்துக்குள்
பொழுதுக்கும் அடைந்து

அதனுள்ளும்
மொட்டையாய் நின்று

உன் நாட்களையும்
உன்னோடு ஒட்டியவர்
நாட்களையும்

கற்பனைகளற்றதாய்க்
கட்டாந் தரையாய்
ரசனைகள் அற்றதாய்
ரத்தம் சுண்டியதாய்
ஆக்கிக்கொண்டால்

இறைவனை நீ
நம்ப மறுக்கிறாய்
என்று தெரியுமா உனக்கு

உன்னை நீயே
கொல்லத் துடிக்கிறாய்
புரியுமா உனக்கு

அமெரிக்காவில் உள்ளவர்கள்
அமெரிக்கர்கள்
கனடாவில் உள்ளவர்கள்
கனடியர்கள்
இந்துஸ்தானில் உள்ளவர்கள்
இந்துக்கள்

ஆகா அபாரம்

முதல் இரண்டு வரியில்
ஒரு நாட்டின் குடிமகனை அழைந்த
மோகன் பகவத்
மூன்றாவது வரியில்
மதத்துக்குள் குதித்துவிட்டார்

அப்டீன்னா
நேபாளத்துல இருக்கிற
இந்துக்கள் இந்துக்கள் இல்லியா

இந்தியர்கள்
பல கலாச்சாரம்
பல மொழி
பல மதம்
என்று பரந்துபட்டவர்கள்

என்றைக்குமே
அவர்கள்
ஒரே நிறத்தில் இருந்ததில்லை
ஆனால்
அத்தனை வர்ணமும் ஒன்றுசேர்ந்து
வாணவில்லாய்
ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள்

வேற்றுமையில் ஒற்றுமையை
வேறு எந்த நாட்டிலடா
இப்படி நீ காண்பாய்

அரசியலுக்காக பிணம் கேட்கும் நீ
ஓடிப்போ சுடுக்காட்டுக்கு

ஒன்று எரிந்தால் போதும்
ஊர்ப் பிணங்கள்
மாநிலப்பிணங்கள்
நாட்டுப்பிணங்கள்
ஏதும் எரியவேண்டாம்

7 பற்றும் பகுப்பும் பிழையே இல்லை

பற்றும் பகுப்பும் பிழையே இல்லை

இனப்பற்று பிழையா?
இல்லை

கருப்பு வெள்ளை
பகுப்பு பிழையா?

இல்லவே இல்லை

ஆனாலோ
பற்றும் பகுப்பும்
எவ்வகையிலேனும்...

ஏற்றத்தாழ்வை
ஏற்றுக்கொண்டால்
அது பிழை

தீண்டாமையைத்
தூண்டிவிட்டால்
அது பிழை

வன்முறையை
வழிமொழிந்தால்
அது பிழை

மனித நேயத்தை
மறுக்கச்செய்தால்


அது பிழை
அச்சமற்ற நிலையே
நட்பின் அடித்தளம்

இத்தாலி, இட்டாலி, இட்லி எது சரி?

நான் பாடநூலில் இத்தாலி (Iththaaly) என்றே பயின்றேன் அப்படியே பயன்படுத்தவும் செய்தேன்.

பின் இடாலி Italy என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைக் கண்டேன். ஆங்கிலத்தில் உரையாடும்போது இத்தாலி என்று சொல்லிவிடாமல் கவனமாக இடாலி என்று பயன்படுத்தினேன்.

பின் கனடா வந்தேன் வட அமெரிக்க உச்சரிப்பைக் கேட்டேன். அமெரிக்கர்கள் இட்லி என்றார்கள். சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

இத்தாலியை
இட்லி என்றால்
இட்லியை
என்ற வென்று அழைப்பது?

Iththaaly
Italy
Itly

இதில் எதுதான் சரி? எப்படித்தான் சரியானது எது என்பதைக் கண்டுபிடிப்பது?

கடந்த வாரம் நான் இட்டாலி நாட்டுக்கே சென்றேன். அந்த மக்களோடு உரையாடினேன். அவர்களிடன் கேட்டேன், உங்கள் நாட்டின் பெயர்தான் என்ன என்று.

இட்டாலி, இட்டாலியா என்றார்கள்.

அவர்கள் நாட்டை அவர்கள் உச்சரிப்பதுபோலவே உச்சரிக்க என் தமிழால் இயலாதா என்று நினைத்தேன்.

ஏன் இயலாது?

இட்டாலி என்றுதான் இனி நான் அழைப்பதாய் முடிவு செய்தேன்.

தமிழால் எதுவும் முடியும் அது எப்படியும் வளையும்!

முகநூலில் முதல்நாளே வந்த ஒரு வாழ்த்து...

முதுமை தீபத்தின் கால்களில்

முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...

அந்தப் பாசத்துக்கு
யார் சொல்லித்தருவார்

கண்களில்
காட்சிகளைக் கோத்துவைத்து
பொழுதுக்கும்
பழைய நினைவுகளையே
கனவுகளாய்ப் பார்த்துக்கொண்டு
படுத்துக்கிடக்கும்...

இயற்கையின் நியதியில்
இளைப்பாறிக்கொண்டிருக்கும்

அந்த அழகிய
முதுமையைக் கண்டு...

அஞ்சி
அறற்றி

அமைதி பாடும் முதுமைக்கு
அன்பு தேடும் முதுமைக்கு
பரிவு நாடும் முதுமைக்கு

அச்சம் தந்து
பதட்டம் தந்து
தன்னிரக்கம் தந்து

இருந்து
சங்கடப் படுத்துகிறோமோ
என்ற குற்ற உணர்வு தந்து

அலையலையாய் தவழ்ந்து
அழகுகாட்டும்
அந்த முதிய தீபத்தை
அற்பாயுளில் அணைத்துவிடாதே
என்று

நரம்பு நதிகளோடும்
கைகளைப் பற்றிக்கொண்டு
நாவின் தமிழ்க் கரங்களால்

உயர் நம்பிக்கையை
உறவு நட்பை
உள்ள நனைப்பை
தந்து தந்து
இனியும் பல்லாண்டு
வாழட்டும்
வாழவிடு
என்று

03 சிவிட்டவேக்கியா, இட்டாலி - Civitavecchia, Italy


இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

என்பதற்கான பொருளை முகநூலில் நண்பர் @Raphel Canada கமுக்கமாகக் கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

பயணம் முடிவானதும், ட்ரான்சாட் என்ற விமானம் மூலம் டொராண்டோவிலிருந்து ரோம் - இட்டாலி செல்கிறோம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவருக்கு ஒரே உற்சாகம். அப்புறம்? என்றார்.

அங்கே Civitavecchia என்ற துறைமுகத்துக்குச் சென்றால் நமக்கான உல்லாச சொகுசு கப்பல் காத்திருக்கும் என்றேன். இதென்னங்க எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட முடியல, இதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றார்.

அது ரொம்ப சுலபம். Civitta ஸ்வீட்ட vecchia வெச்சியா என்று முதலில் பிரித்துக்கொள். ஸ்வீட்ட வெச்சியா என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டால், பின் சிவிட்டவேக்கியா என்பது தானே வந்துவிடும் என்றேன். அப்போதிருந்து ஸ்வீட்ட வெச்சியா ஸ்வீட்ட வெச்சியா என்று ஒரே மகிழ்ச்சி மனைவிக்கு.

பயணம் முடிந்ததும் மனைவியிடம் கேட்டேன், ஸ்வீட்ட வெச்சியா? எங்கே வெச்சே? என்று. நெஞ்சுக்குள்ள வெச்சேன் நெனப்புக்குள்ள வெச்சேன் பத்திரமாய்ப் பலகாலம் நிச்சயமா இருக்கும் நன்றி நன்றி என்றார்.

ஆம் இந்த உல்லாச சொகுசு கப்பல் பயணம் எங்கள் கண்களிலும் கருத்தினிலும் ஸ்வீட்டை வெச்சிருச்சி ;-) மிகவும் நிறைவான ஓர் பயணம் இது எங்களுக்கு.

இனி சிவிட்டவேக்கியா இட்டாலிக்குப் போன கதையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்

கருணையே கொள்வோம்

இசை நிகழ்ச்சி, நடனம், சிறப்பு விருந்து போன்ற உல்லாச நிகழ்ச்சிகளை அப்படியே தொண்டு நிகழ்ச்சியாக மாற்றுவது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

ஒரு டாலரை ஏழைக்குழந்தைகளுக்காக வழங்க விருப்பமா என்று கேட்பார்கள். கனடாவில் இதுபோல நிறைய நிகழும். இதையே ஊரிலும் கொண்டுவரவேண்டும்.

தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவர்களை ஒரு ரூபாய் அதிகம் தருகிறீர்களா என்று கேட்கவேண்டும். வால்மார்ட்டில் தயக்கமின்றி கேட்பார்கள். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்

உலகைக் கருணையுடையதாய் மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

பசி கொல்வோம்
ஏழ்மை கொல்வோம்
வன்முறை கொல்வோம்
கருணையே கொள்வோம்

02 இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா

படம்: சொகுசு கப்பலில் எங்கள் அறையின் பால்கனி வழியாக முதன் முதலில் எடுத்த படம் இதுதான்

*
பயணத்தில் ஸ்வீட்ட வெச்சியா
பாதையில் ஸ்வீட்ட வெச்சியா
இருக்கையில் ஸ்வீட்ட வெச்சியா
இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா
இனிக்கின்றதே இன்னமும்
எம்எஸ்சி மியூசிகா

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுத நேரம் இல்லாமல் இருப்பதால் நானே எழுதுவதாக முடிவெடுத்துவிட்டேன் ;-)

எங்களுக்குத் திருமணம் ஆனதிலிருந்து நானும் என் மனைவியும் ஒரு தேன்நிலாவைக் கண்டதே இல்லை.

சவுதியிலிருந்து உறவுகளின்மீதுள்ள தாகத்தோடு ஊர் சென்றதால் உறவுகளோடு உறவாடிக்கிடப்பதையே விரும்புவோம். தனியே எங்கும் சென்று தேன் நிலவு என்று சில தினங்களை அனுபவித்ததே இல்லை. ஆகவே இதுதான் முதன் முறை. நானும் என் மனைவியும் ஒரு உல்லாச சொகுசு கப்பலில் எங்களின் தேன்நிலவை வைத்துக்கொண்டது ;-)

இனி ஒவ்வொரு வருடமும் தேன் நிலவுதான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டோம்.

எங்களுக்குத் திருமணம் ஆனதும் நாங்கள் என் மாமனார் பணியாற்றிய காடம்பாறை சென்றோம். அது ஒரு அருமையான மலையும் மலை சார்ந்த இடமும். அதுதான் எங்களின் தேன்நிலவு என்று சொல்ல வேண்டும் என்றாலும் நாங்கள் எங்கள் மாமனார் மாமியார் மற்றும் தம்பி மைத்துனன் என்று அனைவரோடும் இருந்தோம். அந்த மலை ஆறு அணை அனைத்தையும் அனுபவித்தோம்.

அங்கே இருந்து ஒரு கவிதையும் நான் எழுதினேன். கவிதை நான் எழுதினேன் என்பதைவிட அந்தக் கவிதை என் விரல்களைக் கொண்டு தானே எழுதிக்கொண்டது என்பதுதான் உண்மை.

அந்தக் கவிதையை பிறகு ஒரு பாடலாக மாற்றினேன். மூலக்கவிதை என்னிடம் இருக்கிறதா அல்லது தொலைத்துவிட்டேனா என்று தெரியவில்லை, ஆனால் பாடலை என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான சரணமென்றேன் நூலில் இட்டேன்.

சந்தனப் பேழை சிந்தியதாலோ
வந்தது மாலை - அந்தச்
செந்தேன் மலரில் வண்டின் தழுவல்
தந்ததோ ராத்திரி

மன்மதக் கருவண்டு தேனுண்டதாலோ
வெளுத்தது வானம் - அவள்
நாணத்தை மொழியும் தோழிகள்தாமோ
வைகறைப் பூவிதழ்கள்

பன்னீர்ப் பனியில் பொன்முகம் நாணக்
குளிப்பவள் நிலவாளோ - அவள்
பருவ மலர்தழுவி மணக்கும் தென்றலில்
கூந்தல் உலர்வாளோ

மழைத்துளி மணிகளை வழியெங்கும் தூவியே
முகிலவன் வருவானோ - அவன்
மார்பினில் துயிலும் மோகத்தில் நிலவாள்
மெல்லத் தவழ்ந்தாளோ

இது இந்திரன் நந்தவனம்
என்றும் இளமை மணங்கமழும்
பல யுகங்கள் கழிந்தாலும்
உயர் காதல் உயிர்வாழும்

மலைமான் இடையில் அருவிகள் நழுவுது
காவியம் இதுதானோ - குமரி
ரோசாப்பு நாணம் இலைகளில் வழியுது
காதலன் வந்தானோ

கரைகளில் ஓவியம் வரைந்திடும் அலைகள்
நதிகளின் தூரிகையோ
தினம் ஒரு கவிதை பாடிடும் குயில்கள்
தேவனின் தூதுவரோ

என் இதயம் குளிர்காயும் - இந்த
இயற்கை உயிர்காக்கும்
பெரும் சோகத்தில் தள்ளாடும் - எந்த
நெஞ்சும் இளைப்பாறும்

டொராண்டோவில் உள்ள என் கவிதை நண்பர் ஒருவர் சொல்வார். இதுபோன்ற ஓசை நயம் மிக்கவை எல்லாம் கவிதைகள் அல்ல. ஏனெனில் அவை செய்யப்படுகின்றன. கவிதைகள் தாமே ஊற்றெடுத்து அதுவே பொழிய வேண்டும் என்பார்.

அவர் சொல்வதில் 50 விழுக்காடு மட்டுமே உண்மை இருக்கிறது.

தானே சுரப்பவைதான் கவிதைகள். ஆனால் இசைகூட்டி வரும் கவிதைகளும் தானே சுரப்பவை என்பதை அவர் அறிய மாட்டார். ஏனெனில் அவர் தன் நாற்பது வயதில்தான் கவிதையே எழுதத் தொடங்கினார். என்னைப்போல் பத்து வயதில் இசையுடன் தானே சுரந்து வழியும் கவிதைகளை அவர் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.

அதோடு பாரதியின் கவிதைகள் இசைகூட்டிச் சுரந்தவை. அந்த மகாகவி கவிதை எழுதவில்லை துணிக்குகள்தான் செய்தான் என்றால் எப்படி?

சரி நாம் மேலும் கவிதைகளுக்குள் செல்ல வேண்டாம். அது முடிவற்ற கதை.

இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று கண்டுபிடிப்போம்.

அட இன்னுமா நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.

சரி இதோ ஒரு தடயம் தருகிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

எங்களின் சொகுசு கப்பல் சென்ற துறைமுகங்கள் ஏழு.

1. Civitavecchia - Italy
2. Palermo - Italy
3. Tunis - Tunisia
4. Palma - Spain
5. Valencia - Spain
6. Marseille - France
7. Genoa - Itali

இப்போதும் கண்டுபிடிக்காவிட்டால் நானே சொல்லித்தொலைக்க வேண்டியதைத்தவிர வேறு வழியே இல்லை ;-)

01 இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நான் ஒரு கணிஞன். கணினியில் நிரலிகள் எழுதும் துறையில் உயர் ஆலோசகனாக கனடாவில் வேலை செய்கிறேன். Senior Consultant DW/BI/SQL. எனக்கு இன்றைய நாட்களில் நிரந்தரம் என்று சொல்லப்படும் வேலையில் விருப்பம் இல்லை. அதை மறுதளித்து ஒப்பந்தப் பணிகளையே ஏற்றுக்கொள்வேன். அதில் பலன்கள் அதிகம் என்பதலால். ஆனால் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துவிட்டு ஓய்வுக்காக தவமிருக்கவும் நேரமில்லாமல் வேலையில் மூழ்கிக் கிடப்பேன்.


Equal Opportunity, Hire and Fire என்றெல்லாம் சொல்லப்படும் சம வேலை வாய்ப்புகள், எடு-விடு கொள்கைகளைக் கொண்ட வட அமெரிக்க பணிக் கொள்கையில் நிரந்தரப் பணி என்பது நிரந்தரம் அல்ல. நம்மை எப்போது வெளியேற்றுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஒப்பந்தப் பணி என்றால் நமக்கு ஒரு வசதி உண்டு. எப்போது ஒப்பந்தம் முடியும் என்று முன்பே தெரியும். ஆனால் ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கணினித் துறையில் இருந்தால் வாய்ப்புகள் அதிகம்.

என் தற்போதைய ஒப்பந்தப்பணி டொராண்டோவின் சிறப்பு மருத்துவமனை ஒன்றில். மார்ச் 2014ல் தொடங்கினேன், ஓய்வே இல்லாமல் தவித்ததால் ஒரு வாரம் விடுமுறை விண்ணப்பித்து இருமுறை அது மறுக்கப்பட்டு இறுதியாக ஜூலை 25 லிருந்து ஆகஸ்ட் 4 வரை எனக்கு விடு தலை/முறை கிடைத்தது.

அவசர அவசரமாக ஓர் உல்லாச சொகுசு கப்பல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தேன். செலவு அதிகம்தான் என்றாலும் நான் இதுநாள் வரை சொகுசு கப்பல் பயணம் சென்றதே இல்லை. சின்னச் சின்ன (Ferry) கப்பல் பயணங்கள்தான் செய்திருக்கிறேன்.

பயணச்சேவையாளரின் உதவியுடன் விரைந்து ஒரு சொகுசு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதெல்லாம் சரி, அதற்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பாருங்கள். ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று சொல்லுங்கள்.

நாம் இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று பார்த்துவிடலாம்
நட்பு பதிந்த முகங்களில்
ஞாபகங்கள் ஓய்வதே இல்லை

நீர்ப்பறவையின் முத்தக்கிடங்கினில்

ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது

அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்

அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்

அடடா
அந்தச் சொர்க்கத்தின்
முத்தக் கிடங்கில்
நான்
சுதந்திரமாகச்
சிக்கிக்கொண்டேன்

ஓர்
அற்புதக் கனவின்
நம்பமுடியா
விசித்திரங்களாக விரிந்த
வேற்றுக்கோள் உலகத்துள்
மெல்ல மெல்ல நுழைந்தேன்

சரிந்தேனா பறந்தேனா
விழுந்தேனா நனைந்தேனா
நடந்தேனா கிடந்தேனா
ஏதும் அறியேன்

கட்டுகளிடா
விடுதலை இலக்கியத்துள்
கட்டமுற்படும்
இலக்கணக் கயிறுகளை
வெட்டியெறிந்த ஏற்றத்தில்
சறுக்கியே சென்றேன்

பொற்கனவின்
பூமடிகளில்
மழலையாய்க்
கிடந்தேன்

பின்
கண்விழித்தேன்


விழித்தேனா

விழித்தேன்
என்பதே
தெரியாமல் விழித்தேன்

ஆம்
அப்படித்தான் நினைகிறேன்

அதுவன்றி
உண்மை ஏதென அறிய
நான்தான் இன்னமும்
அதனிடமிருந்து
மீளவே இல்லையே?

இப்போதும்
நான்
எதை எழுதுவது
எப்படி எழுதுவது என்றே
அறியாமல் விழிக்கிறேன்
விழி கிழிகிறேன்