நெஞ்சார வாழ்த்துகிறேன்


பிறைநிலவாம் விஜயலஷ்மி
பொன்மகனாம் கார்த்தியுடன்
குறைவற்ற வளத்தோடும்
கொண்டாடும் குணத்தோடும்
சிறைவிட்ட சிட்டுக்கள்
சிறகடிக்கும் சிலிர்ப்போடு
நிறைவாக வாழ்ந்தோங்க
நெஞ்சார வாழ்த்துகின்றேன்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மனித மனமெனும்
மயக்க நிலங்களில்
கருணைப் பூவனம்
குழுமிப் பூத்திட

புனித நாயகன்
பிறந்த நாளிதில்
இனிய வாழ்த்துக்கள்
இதய வாசலில்

அலைகள் தொடுத்திடும்
கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும்
பாலின் வெண்மையாய்

இரவைத் தேற்றிடும்
நிலவின் இனிமையாய்
உறவும் உலகமும்
வாழ வாழ்த்துக்கள்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கூவத்தில் கார்த்திகை தீபமா?


பிப்ரவரி 2008
இதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது!

திமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.

வந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.

அந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)


சுருக்குப் பைக்குள்
சூரியனை மறைக்கப்பார்க்கிறாள்
சூனியக் கிழவி
எங்கள் அலமேலு பாட்டி

குறைப்பது நாய்க்கழகு
கொத்துவது நாகத்திற்கழகு
குழைவது பொங்கலுக்கழகு
குணம் ஒன்றே பெண்ணுக்கழகு

எவ்வளவு ஊதினாலும்
பலூன் ராக்கெட்டாகிவிடாது
எவ்வளவு பெருத்தாலும்
பன்றி யானையாகிவிடாது

அழியாக் கவிதைகள் என் கைகளில்
அடுக்களைப் பருப்பு உன் கைகளில்
சபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்
உனக்குச் சில்லறைதானே பாட்டி

பதவியில் இருந்தால் உனக்குப் பெயர்
பதவியே எனக்கு இன்னொரு பெயர்

நீயும் நானும் படைப்பாளிகள்தாம்
என் படைப்பு தங்குவது இதயத்தில்
உன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்

எனக்குச் சன்மானம் சரித்திரம்
உனக்குச் சன்மானம் ஏப்பம்

என்னால் இந்த உலத்தையே
உருட்டிப் பார்க்க முடியும்
உன்னால் லட்டுதானே பாட்டி
உருட்டிப் பார்க்க முடியும்

நீ ஊதி அணைக்க
நான் உன்வீட்டு சிம்ளியல்ல
என்றும் அணையாத சூரியன்

இன்றுதான் நான்
தரங்குறைந்துவிட்டேனோ
என்று சந்தேகப் படுகிறேன்
ஏன் தெரியுமா

உனக்கு நான் ஒரு
கவிதை எழுதலாமா

குட்டிச் சுவருக்குப்
பாலாபிசேகமா
கூவத்தில்
கார்த்திகை தீபமா

ஏப்ரல் 2001

199101 சுகைல் குட்டித் தம்பிக்கு


என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.

அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.

வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)



சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா

அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா

வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா

குட்டி குட்டி அக்காக்கு
ஸ்கூலுக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா

துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா

வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா

மொழியாக்கமென்றால்...


சிந்தையில் ஊறும்
சொந்தக்
கருத்தெழுதியே
வலுப்பெற்ற
கரமிது
மொழியாக்கமென்றால்
கொஞ்சம்
முடங்கிக்கொள்கிறது

வேறென்ன இருக்கு?


ஊறும் விரல் சிவக்கும்
ஊறிடும் வாய் சிவக்கும்
தீரத் தீரச் சுரக்கும்
தீதரும் நதிமூலம்

வாரி வாரி இறைத்தும்
வற்றா நிலம் கண்டு
மாரி மழையும் வெட்கும்
ஆழக் கடலும் தோற்கும்

அடிமன ஆசையில்
அம்மணக் கோலத்தில்
முடிவற்ற துடிப்புகள்
மண்மீது விழும்வரை

198204 விழி எழுதும் புது சிறு வரிகள்


விழி எழுதும் புது சிறு வரிகள் - உன்
விழி எழுதும் புது சிறு வரிகள் 
என் இயத்திலே கவிதை

நிலாவில் ஆடும் பூவிலே
உலாவும் நெஞ்சின் ராகமே

அழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே
அழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே

மனசுத் தீவினில் உன்நினைவு
தனித்து எரிவதும் நீங்காது

தினம் தினம் அந்திநேரம்
தவிக்கும் நெஞ்சில் ஊறும்
என்தாகம் தீர்க்கும் பூமுகமே வா

உறக்கம் மறந்து போனேன்
உயிரைக் கேட்டு வந்தேன்

பருவ நெஞ்சிலே அலையே அலையே
அலைகள் முழுவதும் உன் நினைவே

நெருப்பின் சிகப்பு தாகம்
விலகும் நேரம் சேரும்
விழி ஏங்கும் மாலைகள்
கதைபலசொல்லும்

குரங்குபோல் தாவிற்று கொம்பில்


அரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்
பரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ
வறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்
குரங்குபோல் தாவிற்று கொம்பில்

பொற்குணவாளருக்கு வாழ்த்து


பொற்குணவாளரே பொற்குணவாளரே
போதுமும் புன்னகையையே - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே - இனியும்
அற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே
ஆளை விழுங்காதீர் - நல்லக்
கற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்
கதைத்து மயக்காதீர்

நெற்பயிர் சரியும் சூரியன் சரியும்
நீங்களோ சரிவதில்லை - உங்கள்
சொற்களில் செயலில் உலகமே நிற்பினும்
சுத்தமோ குறைவதில்லை - இந்தக்
கற்பிலா உலகில் எப்படி நீங்களும்
காலங்கழிக்கிறீரோ - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே!

தமிழ்ச்சங்கத்துக்கு வாழ்த்துரை


எத்திசை பெயர்ந்து
வாழ்ந்தாலும்
எத்தனை மொழிகள்
பயின்றாலும்
பித்தரைப் போலவே
பிதற்றிடுவர்
பேசும்மொழி அன்னைத்
தமிழின்றி

பத்தரை மாற்றுத்
தங்கமிவர்
பாசத்துடன் தமிழ்
வேண்டுகிறார்
இத்தனை தூர
தேசத்தில்
இன்பத் தமிழுடன்
வாழுகின்றார்

சித்திரை பூக்கும்
புத்தாண்டில்
செந்தமிழ் தேடும்
உத்தமர்கள்
முத்திரை பதிக்க
எட்டுகின்றார்
முத்தமிழ்ச் சங்கம்
கட்டுகின்றார்

மொத்தமாய் என்றன்
விழியிரண்டும்
மூழ்கியே போயின
நீர்பெருக்கில்
சத்தமாய் என்மடல்
வாசிக்கிறேன்
சத்தியம் உலகெலாம்
சேர்ந்துவிடும்

இத்தரை மீதினில்
யாவருக்கும்
இந்நாள் திருநாள்
ஐயமில்லை
உத்தமர் இவர்தம்
உணர்வுகளை
உயர்த்திப் பாடியே
வாழ்த்துகிறேன்




தமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்

தமிழ்நிலா

(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)


அஞ்சிலா பிஞ்சிலா
அன்னைமடி மஞ்சிலா
ஆரம்பம் ஆனதெப்போ
பிறப்பிலா - நாளும்
அமுதூறும் எழுத்தொன்றே
நெஞ்சிலா - தாகம்
அலைமோதத் தமிழோடு
கொஞ்சலா

கண்ணிலா கருத்திலா
கற்பனைப்பொற் சரத்திலா
கண்மூடிக் கூறுவாய்
பொன்னிலா - சஞ்சிகைக்
கனவுகளில் விழியிரண்டும்
ஊஞ்சலா - அந்தக்
கணம்தேடிப் பொழுதுக்கும்
ஏங்கலா

சொல்லிலா சுவையிலா
சுடர்வீசும் பொருளிலா
சுகமெதிலே சொல்லுவாய்
கவியிலா - பண்பைச்
சுரண்டாத முத்துப்பொன்
மொழியிலா - என்றும்
சுயநலமே நோக்காத
எழுத்திலா

விருப்பிலா பொறுப்பிலா
விரைவுபணி நெருப்பிலா
உயிர்க்கூடு பூப்பதெப்போ
கனவிலா - உந்தன்
விருப்பத்தைப் பொறுப்பாக்கும்
தரத்திலா - விரைவை
வெற்றிக்கு வேராக்கும்
சிறப்பிலா

அழகிலா அறிவிலா
அன்பெனும் பொழிவிலா
ஆசைமனப் பெருமையெது
நெஞ்சிலா - நீயும்
அத்தனையும் பெற்றுவிட்ட
நினைவிலா - அன்பை
அழகான அறிவாக்கிய
பண்பிலா

சொந்தமண் பாசமா
இந்தமண் வாசமா
எதிலுந்தன் கவனங்கள்
தமிழிலா - தமிழின்
யாதுமே ஊரென்ற
சிறப்பிலா - இருந்தும்
எந்தைதாய் முந்தையர்தம்
நிலத்திலா

பணியிலா படிப்பிலா
புத்தம்புது எழுத்திலா
பரவசம் கொண்டதெப்போ
வெண்ணிலா - இனியும்
பல்லாண்டு நடைபோடும்
தெளிவிலா - வெற்றிப்
பாதையை உருவாக்கும்
கனவிலா

குறைவிலா பேட்டியா
குரல்வழிக் கொஞ்சலா
குற்றாலச் சிரிப்போடு
குளியலா - என்னும்
காற்றலை வீச்சுகளில்
தனியுலா - இன்னும்
கட்டுரை கவிதைகளோ
கணக்கிலா

வளர்க்கவா வளைக்கவா
வாயாற வாழ்த்தவா
வாவென்று அழைத்ததேன்
சொல்நிலா - என்றன்
வாழ்த்துக்கு ஒளிருமே
கறுநிலா - அரங்கக்
கரவோசை கூட்டுமே
திருவிழா

மலர்விழா பொன்விழா
மாணிக்க மணிவிழா
மங்கைநீ காணவேண்டும்
முழுநிலா - குவியும்
மலர்மாலை பொன்னாடை
பெருவிழா - எழுத்தால்
மகுடங்கள் ஏந்திவா
தமிழ்நிலா

உயிரெழுத்து


உயிர் கரைத்து ஊற்றாமல்
கவிதைப் பயிர் வளர்க்கும்
கதையேது

உயர் கவிதான் உயிரெழுத்து
எதிலும் உயிர் சேர்க்கும்
திருவெழுத்து
இன்றைய ஒளிர்வாய்
நேற்றுகளில் சிக்காத
நெய்வாச
நம்பிக்கைச் சுடர்கள்

விழித்தளத்தில்
இமைக்கரைகளைப்
பெயர்த்தோடும்
வற்றாத
வண்ண வண்ணக்
கனவு நதிகள்

நித்தம் நித்தம்
கையணைவில்
நீண்டு வளரும்
புத்தம் புதுச்
சந்தோசங்கள்

முதன்மைபெற்று
முடிவற்று
உயிர்தொட்டுத் தழுவட்டும்
புத்தாண்டுப் புலர்வினிலே

உதய
புத்தாண்டிலென்
இதய 
வாழ்த்துக்கள்

அகவியாடும் இதயமயில்


கதைகதையாய்க் கவிதைகளாய்
எதைவடித்து நிமிர்ந்தாலும்
அதைவடிக்கும் முன்னெனக்குள்
அகவியாடும் இதயமயில்
பதைபதைப்பு அடங்கிமெல்லப்
புத்துயிராய்ப் பூப்பதனால்
எதையெதையோ எழுதியெழுதி
எந்நாளும் துயில்கின்றேன்

*

எடுத்தப் பிறப்பிங்கெனக்கே
எழுத வென்றிருக்கலாமோ
குடித்தக் கள்ளொன்றிருப்பின்
கன்னித் தமிழன்றி வேறோ
வடித்தக் கவித்தேனே
இவ்வையம் மூடிக்கிடந்தும்
கொடுக்கும் கனலென்றனுள்ளே
குறைந்தழியக் கண்டிலேனே

ஒரு கவிஞனின் முகவரி


கண்களில் கவர்ச்சி
கருத்தினில் முதிர்ச்சி
பழக்கத்தில் இளமை
பண்பினில் தாய்மை

அவைதனில் அடக்கம்
அன்பினில் பெருக்கம்
உழைப்பினில் பெண்டுலம்
உள்மனம் தாண்டவம்

சகிப்பினில் நெருப்பு
சமத்துவக் காற்று
எடுப்பதில் வானம்
கொடுப்பதில் பூமி

எனக்குள் இருப்பதெலாம்






இந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)





எனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்
....இதயத்தின் ராகமெலாம் ஒப்பாரியோ
உனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்
....உள்ளத்தின் ஈரவனம் கிட்டாதோ
மணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்
....மடியினில் துயின்றிடவே யாசிக்கிறேன்
பிணக்கம் எனக்கொன்றும் விளங்கவில்லை - நான்
....பிறந்ததே ஏனென்றும் புரியவில்லை

திருமண வாழ்த்து


எப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.


இன்பத்தில் கண்கள் கோத்து
....துன்பத்தில் கைகள் கோத்து
உள்ளங்கள் பின்னிப் பிணையும்
....உயர்காதல் கொண்டே வாழ்க

கண்ணோடு இமையாய்ச் சேர்ந்து
....கல்யாண உறவைப் போற்றி
விண்ணேறும் சுகங்கள் பார்த்து
....வளமோடு நெடுநாள் வாழ்க

நித்திரைகள் பத்து


நான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன? ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே!


விழித்தாளில் கவியேந்தி
விரல்நாவில் மொழிசிந்தி
அழியாத நினைவுகளை
ஆளுக்கொரு பரிசாக்கி
பழிச்சொல்லை விதித்தலையில்
பக்குவமாய்ச் சூட்டிவிட்டு
நழுவுகின்ற நாகரிகம்
நற்காதல் நித்திரையில்

கண்களினால் அழைப்பிட்டு
கட்டுடலை வெளிக்காட்டி
பெண்ணினத்தின் நாணமின்றி
பேய்க்காமக் காளையிடம்
தன்னைத்தான் விலைபேசும்
தரம்குறைந்த பெண்களின்று
மண்டலத்தில் மலிந்ததெலாம்
பெண்மைகொண்ட நித்திரையில்

கட்டிலிலே காணுகின்ற
காமமெனும் தேனமுதை
மொட்டுமுகம் மலரமணம்
முடித்துவந்த நாள்முதலாய்
கட்டியவன் கையணைவில்
கண்டிடாத மனைவிவேறு
கட்டழகன் காணுவது
ஆண்மைகொண்ட நித்திரையில்

பத்துமாத பந்தமுடன்
பெற்றெடுத்தப் பிள்ளையினைத்
தத்தென்ற முறைகூறித்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு
நித்திரையைக் கண்டுவிடும்
நெஞ்சமற்ற பெண்களின்று
எத்திசையும் இருப்பதெலாம்
தாய்மைகொண்ட நித்திரையில்

மூவெட்டு வயதினிலும்
முறையாகப் பெறுகின்ற
பூவையரின் பொன்னாளாம்
பூப்பெய்தும் நன்னாளை
காவிரியாய்க் கண்பெருக
கண்டிடாத பாவையவள்
சாவினுக்குள் சரிவதெலாம்
இயற்கைகொண்ட நித்திரையில்

செய்யாத கொலையொன்றைச்
செய்தானெனக் கூண்டிலேற்றி
பொய்யான சாட்சிகளின்
புளுகுகளில் தீர்ப்பளித்து
மெய்யான நிரபராதி
மரணப்படி மிதித்தபின்னர்
மெய்யறியும் மேன்மையெலாம்
நீதிகொண்ட நித்திரையில்

காலமெலாம் மெழுகாகக்
கண்ணீரில் சுகங்கண்டு
வாழவெண்டும் என்மகனென
வாழவைத்த தெய்வங்களை
மாலையிட்ட மறுநாளே
மணந்தவளின் சொல்கேட்டு
காலடியில் கசக்குவது
ரத்தபாச நித்திரையில்

இன்னுமின்னும் அவனியிலே
எத்தனையோ நித்திரைகள்!
என்றென்றும் நீதிநாடி
எங்கெங்கும் அன்புசிந்தி
ஒன்றுசேர்ந்த ஞானத்தால்
ஒருகுறையும் இன்றிமக்கள்
நின்றுவாழ நினைப்பினெந்த
நித்திரைக்கும் நித்திரைதான்

திருமண அழைப்பிதழ்


பேரன்புடையீர்

நிகழும்
1985ம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 1ம் நாள்
பிறை 18 காலை 9 முதல் 10க்குள்

என்
வாலிப வானுக்குள்
உலாவர வருகிறாள்
ஒரு வசீகர நிலா

என்
பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள்
ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும்
என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள்
ஓர் இளமயில்

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி
பெரியோர்களின் நல்லாசியுடன்
பட்டுக்கோட்டை
86, காளியம்மம் கொவில் தெரு
மணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய
தாம்பத்ய தீபம் ஏற்றுகின்றோம்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்.... வாரீர்....

பிரியங்களடர்ந்த இதயமுடன்
புகாரி

200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து


இப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)


வலையில் விழுந்து இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதில் வந்துவிடு

யாகூ பேச்சின் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன் நுழைவுக் கதவொலி
இணையம் கேட்டால்
அத்தனை நிரலியும் திறக்கும்

உன் அஞ்சல் பூமழை
கணினியில் விழுந்தால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ கூகுள் பேச்சில்
வணக்கம் சொன்னால்
யாகூவுக்குக் காயச்சல் வரும்

நீ விடுமுறை என்று
வீட்டில் கிடந்தால்
வலைத்தளம் எல்லாம் உறைந்துவிடும்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

கணினி செல்லக் கூடாதென்று
அம்மா ஆணையிட்டார்

அஞ்சல் மீன்கள்
இரண்டில் ஒன்றை
இணைப்பின் தடுப்பில் போட்டார்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதின் போது

யாகூ கரையில் காத்திருப்பேன்
கூகுள் விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
விரல்கள் தட்டும் அஞ்சல்

உனக்கு மட்டும் கேட்கும் எனது
கணினி சொடுக்கும் சத்தம்