தமிழ்ச்சங்கத்துக்கு வாழ்த்துரை


எத்திசை பெயர்ந்து
வாழ்ந்தாலும்
எத்தனை மொழிகள்
பயின்றாலும்
பித்தரைப் போலவே
பிதற்றிடுவர்
பேசும்மொழி அன்னைத்
தமிழின்றி

பத்தரை மாற்றுத்
தங்கமிவர்
பாசத்துடன் தமிழ்
வேண்டுகிறார்
இத்தனை தூர
தேசத்தில்
இன்பத் தமிழுடன்
வாழுகின்றார்

சித்திரை பூக்கும்
புத்தாண்டில்
செந்தமிழ் தேடும்
உத்தமர்கள்
முத்திரை பதிக்க
எட்டுகின்றார்
முத்தமிழ்ச் சங்கம்
கட்டுகின்றார்

மொத்தமாய் என்றன்
விழியிரண்டும்
மூழ்கியே போயின
நீர்பெருக்கில்
சத்தமாய் என்மடல்
வாசிக்கிறேன்
சத்தியம் உலகெலாம்
சேர்ந்துவிடும்

இத்தரை மீதினில்
யாவருக்கும்
இந்நாள் திருநாள்
ஐயமில்லை
உத்தமர் இவர்தம்
உணர்வுகளை
உயர்த்திப் பாடியே
வாழ்த்துகிறேன்

வித்தகர் யாவரும்
கூடிடுவீர்
விண்ணிலும் தமிழை
ஏற்றிடுவீர்
முத்தமிழ் இன்றியோர்
வாழ்வேது
முரசுகள் ஒலித்தே
போற்றிடுவீர்

இரத்தமும் பீறிடும்
தமிழாக
முத்தமும் ஊறிடும்
தமிழ்பாட
பித்தமும் தெளிந்திடும்
தமிழ்பேச
பேய்களும் வணங்கிடும்
தமிழ்கேட்க

எத்தனை பொற்கரம்
தமிழோடு
இமயமும் அற்பமே
தமிழுக்கு
நித்திரை மறந்து
தமிழெடுப்போம்
நீலவான் எங்கிலும்
நட்டுவைப்போம்


தமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்

No comments: