****5 வெட்டிப் பயல்கள் பேச்சு


*வெட்டிப் பயல்கள் பேச்சு*

சில மாடுகள் முட்டத்தான் செய்யும். அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? 

மாட்டைத் திருப்பி முட்டப் போகிறோமா? 

ஒன்று மாட்டை வெட்ட வேட்டும் அல்லது அந்த மாட்டைவிட்டு விலக வேண்டும். 

இதில் முதலாவதைச் செய்வது என் மனதுக்கு ஏற்றதல்ல. இரண்டாவதைச் செய்தே பழகிவிட்டேன் பிறந்ததிலிருந்தே. 

பிறகு சில காலம் கழிந்ததும் நான் அந்த முட்டலை மூர்க்கத்தை மறந்து மன்னித்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன். நெஞ்சில் எனக்கு எந்த வஞ்சமும் கூடுகட்டிக் குடியிருந்ததே இல்லை. 

ஆனால் இது மாடு ஆகவே தூரமாகத்தான் நிற்க வேண்டும் என்பது மட்டும் என் ஆழ் உயிரில் அழுத்தமாகப் பதிந்துவிட்டிருக்கும். 

அது என் ஆய்வு மூளை பாசமிகு தகப்பனைப்போல என்னைப் பாதுகாக்க எனக்குக் கத்துக்கொடுத்து வழிநடத்தும் மேன்மை.

1999 தொடங்கி பல வருடங்கள் நான் யாஹூ கூகுள் தமிழ் உலகக் குழுமங்களில் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன். என் வளர்ச்சியில் தன் வீழ்ச்சியைக் கண்ட இரு கண்கள் சிவந்து வெகுண்டு முட்ட வந்தன. முட்டி முட்டி நின்றாலும் அதில் நிறைவு காணாது மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டே இருந்தன.

அர்த்தம் விளங்காத அந்த முட்டல்களுக்கு விடையாய், இறுதியாய் இக்கவிதையை எழுதி முடித்துவிட்டு நான் என்னளவில் அமைதியடைந்தேன்.

ஆமாம் என் கவிதைகள் எனக்கு நல்ல ஆசான்கள். அவ்வப்போது என் கவிதைகளை நான் மீள் வாசிப்புச் செய்து என்னை நான் பக்குவப்படுத்திக்கொள்வேன்.

இன்றும் வாசித்துத் தெளிவு பெற்றேன். நன்றி கவிதைகளே!

இதோ அந்தக் கவிதை. 

இந்தக் கவிதையை நான் என் மனதின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெடித்து எழுதி இருக்கிறேன். இயல்பான உண்மையான அந்த உணர்வுக்குத் தமிழ் அதைத் தன் வல்லினச் சொற்களால் அழகுபடுத்தி இருப்பதைப் பாருங்கள். 

மெல்லினத் தமிழில் மென்மையாகப் பாசம் நேசம் பொழிவதும் இடையினத் தமிழில் இடையோடு காதல் நட்பு அன்பு பொழிவதும் வல்லினத் தமிழில் உணர்வு பொங்க எழுந்தாடுவதும் தமிழ் தரும் தங்கச் சுரங்கங்கள்

என் பொன்னன்புத் தமிழுக்குப் பேரன்பு நன்றி.

*


முட்ட வருது மாடு - கொஞ்சம்
         எட்டி நில்லு ராசா
வெட்டி முட்டு முட்டி - சும்மா
         வேதனை ஏன் ராசா

வட்ட நிலா ஊரும் - அந்த
         வனப்பு உயிரில் ஏறும்
சிட்டு விழிகள் கூடும் - சின்னச்
         சிறகு விரித்து ஆடும்

கெட்ட உள்ளம் காணும் - கண்ணு
         கொள்ளிக் கட்டை ஆகும்
எட்டு ஊரு கூட்டி - பொழுதும்
         ஏளனந்தான் பேசும்

விட்டு விலகு ராசா - மெல்ல
        வஞ்சம் மாறும் லேசா
கொட்டுந் தேளின் காதில் - கேட்கும்
       குரலும் உண்டோ ராசா

மொட்டு ஒண்ணு பூக்கும் - வாசம்
       மொத்தத் தெருவும் வீசும்
வெட்டிக் காம்பு வெடிக்கும் - கொடிய
       விசத்தை அள்ளிப் பூசும்

திட்டும் வாயின் கொட்டம் - என்றும்
        எட்டு நாளில் தீரும்
திட்டம் இட்ட எழுத்து - மண்ணில்
        தொன்று தொட்டு வாழும்

வெட்டிப் பயல்கள் பேச்சு - சேற்றில்
       வெட்கம் இன்றிப் புரளும்
ஒட்டு மொத்த உலகோ - உன்றன்
       ஒற்றை வரியில் புலரும்

கெட்டித் தேனைத் தொட்டு - நாளும்
        பட்டுக் கவிதை எழுது
வட்டியோடு சேர்த்து - இந்த
        வானம் தாண்டி உனது

அன்புடன் புகாரி
20030000
20171121

1 comment:

சாந்தி said...

> முட்ட வருது மாடு
> கொஞ்சம் எட்டி நில்லு ராசா
> வெட்டி முட்டு முட்டி
> சும்மா வேதனை ஏன் ராசா
>
> வட்ட நிலா ஊரும்
> அந்த வனப்பு உயிரில் ஏறும்
> சிட்டு விழிகள் கூடும்
> சின்னச் சிறகு விரித்து ஆடும்
>
> கெட்ட உள்ளம் காணும்
> கண்ணு கொள்ளிக் கட்டை ஆகும்
> எட்டு ஊரு கூட்டி
> பொழுதும் ஏளனந்தான் பேசும்
>
> விட்டு விலகு ராசா


அதேதான் ஆசான்.. நாம் வாசிக்க கற்க வேண்டியவை ஏராளம்.. உபயோகமான நல்லவை
மட்டுமே நம் கண்ணில் படும்படி செய்துகொள்வோம்..

வெட்டிக்கதைகள் போரடித்து தாமே நிப்பாட்டுவார்கள்.. ஆசை தீர
வம்பளக்கட்டும்..அது நம் தேவை அல்ல..

நீங்க , உங்க எழுத்து இன்னும் மிக உயர்வானவை பற்றியே
சிந்திக்கணும்..உயரம் செல்லணும்..

நமக்கு மட்டுமல்ல நம் சந்ததியினருக்கும் வழிகாட்டியாய்..