***10

யார் அனாதை

யாருமற்றுப் போனாயோ - கண்ணே
      ஏக்கவிழி அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ - கண்ணே
      விரலெறிந்த நகச்சிமிழோ

யாருந்தான் அடிக்கலியே -கண்ணே
     ஏனழுது நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே - கண்ணே
     அதற்கழுதோ நிற்கின்றாய்

தெருவோரம் கிடந்தாலும் - கண்ணே  
     தெய்வத்தின் உயிர்தானே
வருவோரும் போவோரும் - கண்ணே
     இருப்போரின் தொடர்தானே

வயிறெல்லாம் வேறென்றால் - கண்ணே
     உறவென்றால் பொருளுண்டோ
துயருள்ளம் கதறுகையில் - கண்ணே
     துணைநிற்கும் தூணுண்டோ

கையோடு கைகுலுக்கு - கண்ணே
     கைவளர்ந்து வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று - கண்ணே
     கர்வமனம் புவிவெல்லும்

மெய்யான உறவுதேடி - கண்ணே
     பொய்யான பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன் - கண்ணே
     கைதானே கவசமாகும்

இடதுகையோ யாசிக்க - கண்ணே
     இல்லாளும் யோசிக்க
வலதுகையும் வந்துதானே - கண்ணே
     வாட்டத்தைத் தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு - கண்ணே
     எடுப்போர்கள் உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு - கண்ணே
     குறையில்லா உயிராவாய்

Comments

நெகிழ்ந்தேன் நண்பரே. மீண்டும் ஒரு முறை உங்கள் சந்தத்தின் பந்தியில் பசியாறும் பாக்கியம் பெற்றதில் புலன்கள் எல்லாம் புல்லரிக்கின்றன.
நெகிழ்ந்தீர்களா?

நெகிழ்வின் மழையை எனக்கல்லவா அள்ளிப் பொழிந்தீர்கள்!

இதுவரை வலைப்பக்கங்களில் மட்டுமே வாழ்ந்துவந்தேன், இப்போது வலைப்பூவிலும் சிறு மணமாக முடியுமா என்று பார்க்கிறேன்.

வாழ்த்துக்களை மீறிய உங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றி நட்புக் கவிஞர் சேவியர்

அன்புடன் புகாரி
பூங்குழலி said…
//யாருமற்றுப் போனாயோ
கண்ணே ஏக்கவிழி
அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ//


அழகு

//வயிறெல்லாம் வேறென்றால்
கண்ணே உறவென்றால்
பொருளுண்டோ//

உண்மை

//கையோடு கைகுலுக்கு
கண்ணே கைவளர்ந்து
வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று
கண்ணே கர்வமனம்
புவிவெல்லும்//

அருமை


//மெய்யான உறவுதேடி
கண்ணே பொய்யான
பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன்
கண்ணே கைதானே
கவசமாகும்

இடதுகையோ யாசிக்க
கண்ணே இல்லாளும்
யோசிக்க
வலதுகையும் வந்துதானே
கண்ணே வாட்டத்தைத்
தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு
கண்ணே எடுப்போர்கள்
உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு
கண்ணே குறையில்லா
உயிராவாய்//

கவிதையின் நடை அருமை புகாரி

(அந்த படத்தை பார்த்தால் பயமாக இருக்கிறது )
விஷ்ணு said…
மரபுக்கவிதை மயக்கத்தில் புதுக்கவிதை ஜனனமோ ??

அன்புடன்
விஷ்ணு ..
காயத்திரி said…
யாருமற்றுப் போனாயோ
கண்ணே ஏக்கவிழி
அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ


அற்புதமான உவமை...


யாருந்தான் அடிக்கலியே
கண்ணே ஏனழுது
நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே
கண்ணே அதற்கழுதோ
நிற்கின்றாய்


எளிமையாக உணர்த்திவிட்டீர்...

அருமையான கவிதை... காதலைத்தான் நீர் வளர்ப்பீர் என்று நினைத்தேன், கருணையையும் பொழிகிறது உங்கள் கைகள்..

(கண்களில் வழிவது கருணையோ, பூங்குழலி அக்கா சொன்னதுபோல் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது)
--
Anonymous said…
மொழியில் பேசுகிறாய்
//யாருந்தான் அடிக்கலியே
கண்ணே ஏனழுது
நிற்கின்றாய்

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே அதற்கழுதோ
நிற்கின்றாய்..//

அன்பா புகாரி,

இந்த வரிகள் எனக்கு பிடித்தவை என்றா நினைக்கிறாய். "புகாரி" எழுதும் எல்லா வரியும் என் உயிரைக் குடிப்பவைகள்.

பிறகேன் இந்த வரியை மட்டும் ? என்றுதானே யோசிக்கிறாய்.

புகாரியின் கவிவரிகளில் மட்டும் முரண் (தொடை)இருக்கும் ; புகாரி கவிஞனுக்கு "அரண்" என்பதைக் குறிப்பிடத்தான்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை விழா நன்றியுரை

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ