இணையம் என்றொரு வேடந்தாங்கலில்
எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்
ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது
உயிரில் கரைந்தே உறவைத் தேடுது
இணைய நட்பெனும் புனிதம் பூக்குது
இதய மொத்தமும் இனிப்பில் மூழ்குது
விழிகள் கொத்தாத உருவக் கனிகளை
விருப்பம் போலவே மனங்கள் செதுக்குது
கண்கள் காணாத நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த கலப்பில் மலர்வதும்
உலகச் செய்திகள் அலசிப் பார்ப்பதும்
உள்ளூர்க் கதைகள் கிள்ளிச் சுவைப்பதும்
கவிதை கட்டுரை கொட்டிக் கொடுப்பதும்
கலைகள் பேசியே கரைந்து போவதும்
சின்னச் சின்னதாய்த் துணுக்கு மெல்வதும்
சிரிப்புச் சில்லறை அள்ளி இறைப்பதும்
தனிமைக் கொடுமையில் இனிமை நிறைப்பதும்
கருணை அன்புடன் கதைகள் கேட்பதும்
அழுகைத் துயரினில் அள்ளி அணைப்பதும்
எண்ண விரல்களால் கன்னம் துடைப்பதும்
முன்னம் முன்னூறு வருசம் தாண்டியே
முதிர்ந்து வந்ததாய் பந்தம் கொள்வதும்
நேற்று சிங்கையில் இன்று தஞ்சையில்
எங்கு நிற்பினும் இணைய மடிகளிள்
உள்ளம் பாடுது விரல்கள் ஆடுது
உயிரும் மாறியே அஞ்சல் ஆகுது
இணைய நதிகளில் தமிழும் வளருது
தமிழர் பண்புகள் தரணி நிறையுது
இதனை விஞ்சியோர் வரமும் உள்ளதோ
இணைக்கும் இணையமே என்றும் வாழ்க நீ
No comments:
Post a Comment