04 ஆண்மையை எப்போது உணர்ந்தேன்


பிள்ளைப் பிராயத்தில்
சிவந்த அல்லிக் குளத்துமேட்டில்
அரைக்கால் சட்டையில்
அரையணா இடைவெளியில்
அனாயாசமாய் நின்றுகொண்டே
சிறுநீர் வார்த்தபோது
நான் உணரவில்லை

பறக்கத் துடிதுடிக்கும்
குயிலிறகுக் கூட்டங்களாய்
கருத்தடர்ந்த அழகு மீசை
மேலுதட்டு மொட்டை மாடியில்
குப்பென்று வளர்ந்து நின்று
கம்பீரம் காட்டியபோது
நான் உணரவில்லை

மேற்குமலைத் தொடர்களாய்ச்
செழித்துத் திரண்ட தோள்கள்
வான் நிமிர்த்தி வாட்ட சாட்டமாய்
யானை நடை பயிலவைத்தபோது
நான் உணரவில்லை

அந்திவெயில் குடையின்கீழ்
குறுகுறுவென்ற கிளிக் கண்கள்
பலநூறு... கூட்டமாகக்
கொத்திக்கொத்தித் தேன்தின்று
குறும்பாகப் பார்த்தபோது
நான் உணரவில்லை

முட்டவந்த முரட்டுக் காளை
எட்டியோட முட்டி விரட்டி
நெஞ்சு வேர்க்க நின்றபோது
நான் உணரவில்லை

கல்யாண ஊர்வலத்தில்
மணமகன் கோலத்தில்
ஊரறிந்த நாயகனாய்
பேரின்பக் கண்கொதிக்க
ஊர் உலா வந்தபோது
நான் உணரவில்லை

நான் கருவான முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

பனிக்குடப் பிசுபிசுப்போடு
எட்டி இந்த உலகு பார்த்து
நானழுத முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

சட்டப்படிப் பெண்ணொருத்தியைப்
பட்டு மெத்தையில்
தொட்டுப்பார்க்கும் இரவுதான்
எனக்கு முதலிரவாம்

அடடா...
பாலுறவில் உள்ளதோ
நம் பண்பாடு?

அந்தச் சமுதாயப்
பண்பாட்டு இரவிலும்கூட
நான் உணரவில்லை

பின்
எப்போதுதான் உணர்ந்தேன்
நானென் ஆண்மையை?

என்னுயிர் தொட்டுத்
தன்னுயிர் கலந்து
புத்துயிரென்னும்
கருவோடு மிளிர்ந்தாள்

பெண்மை என்னும்
கர்வத்தோடு எழுந்தாள்

என் தாகத்திற்குத்
தாகத்தாலேயே
தண்ணீர் தந்த தேவமல்லி

என் மோகத்திற்கு
மோகத்தாலேயே
தீர்வு தந்த பவளமுல்லை

அப்போதுதான்
ஆம்... ஆம்...
அப்போதுதான் நான்
சத்தியமாய் உணர்ந்தேன்
என் ஆண்மையை

பெண்மையை உணர்த்துவது
ஆண்மையுமல்ல

ஆண்மையை உணர்த்துவது
பெண்மையுமல்ல

இயற்கையின் துணையோடு
இருவரும் சேர்த்துச் சமைக்கும்
உயிர்க்கரு என்ற
உன்னதக் கூட்டு முயற்சியே

இதில்
ஆண்மையும் ஆனந்திக்கும்
பெண்மையும் பூரிக்கும்

ஆண்மை பெண்மை
இரண்டும் ஒன்றாய்க் கலந்த
அழியா இயற்கையும்
பூத்துக் குலுங்கும்!

No comments: