18 காதலியின் கடிதம்


என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே

துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி

என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்

நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்

நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்

நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்

அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல

நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்


என் ஆருயிர்க் காதலனே

நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன

அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே

என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே

ஆனால்
என் காதலனே

என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்

இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்

காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்

அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி

முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது

இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: