உள்
ஓர் அலுப்பு சுகமறியாத
உணர்வுகளின் பிரசவ அறை
உணர்வுகளோ
பிறந்த கணமே தாயைத் தகிக்கும்
நெருப்புக் குஞ்சுகள்
வெப்பம் தாளாமல்
வெளியேற்றும் வழிகேட்டு
மனம் அறிவுக்கு அனுப்பும்
ஓர் அவசர விண்ணப்பம்
கூடாதென்று கூக்குரலிட்டு
வழிகளை அடைத்து வாசலை மூடி
வைராக்கியனைக் காவலிடும்
அறிவு
முட்டி மோதி நினைவுகளை
நிமிசம் தவறாமல் அழைத்து
சிந்தனையை நச்சரித்து
மறுப்பு வார்த்தைகளை மிதித்து
சபல சந்தர்ப்ப மரங்கொத்திகள்
கொத்திக் கிழித்த பலமற்றத் தளங்களைப்
பயன்படுத்தத் துடிக்கும் உணர்வுகள்
இமைகளை வெட்டி வீசிவிட்டு
முழு விழியையும்
விளக்கெண்ணையில் நீராட்டி
விறைப்பாய்க் காவல் காக்கும்
வைராக்கியம்
கால நார் காரிய சிரத்தையில்
நிமிசங்களைச் சேகரித்துக்
கனமான மணிமாலைகளைத்
தொடுத்துக் கொண்டிருக்க
பிறந்து பிறந்து
அடர்ந்த உணர்வுகளோ
நிமிசங்களைப் பலவந்தமாய்ப் புணர்ந்து
சடசடவென்று பிரசவித்த
நெருப்பு நகம் பூட்டிய ஊசி விரல்களால்
உயிரையே குத்தி
வைராக்கியக் காவலனைச் சாம்பலாக்கிப்
பாய்ந்து...
படர்ந்து...
வடிந்து...
வீரமிழக்கும்
பின்
காற்றுத் துப்பிப் போட்ட
பலூனாய் மனம்
கண்ணீர்க் கண்களை
உடைத்து விட்டுக் கொண்டு அறிவு
6 comments:
அன்பின் நன்பரே புகாரி,
உங்கள் பூட்டி வைத்த உணர்வுகளை நன்கு ரசித்தேன்.
>>பின்
காற்றுத் துப்பிப் போட்ட
பலூனாய் மனம்
கண்ணீர்க் கண்களை
உடைத்து விட்டுக் கொண்டு அறிவு>>
மேலுள்ள வார்த்தைகளில் புதைந்து கிடக்கும் அனுபவப்பகிர்வு, உங்களைப் போன்ற ஒரு உன்னதக் கவியினாலேயே உரைக்க முடியும்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
பிறந்து பிறந்து
அடர்ந்த உணர்வுகளோ
நிமிசங்களைப் பலவந்தமாய்ப் புணர்ந்து
சடசடவென்று பிரசவித்த
நெருப்பு நகம் பூட்டிய ஊசி விரல்களால்
உயிரையே குத்தி
வைராக்கியக் காவலனைச் சாம்பலாக்கிப்
பாய்ந்து...
படர்ந்து...
வடிந்து...
வீரமிழக்கும்
அருமையாக
வடித்திருக்கிறீர்கள் புகாரி .படிக்க
படிக்க கவிதையும் வேகம் மெல்ல குறைகிறது
வாழ்த்துகள்!
கவிதை நன்று நண்பரே!
தமிழ்மண விண்மீன் ஆனதற்கு வாழ்த்துகள்!
சிந்தனை சிற்பி நீ
சிந்திக்கும் கருவி நீ
சிந்தனை சித்தர் நீ
சிந்திய முத்து நீ
எந்தனன் நட்பு நீ
சந்தனத் தமிழன் நீ
நன்றி நன்றி நீடூராரே
Post a Comment