1 புனிதமானது


*புனிதமானது*

நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்

நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்

பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ பெறுவாய்

நீ விளைத்த பழங்களெல்லாம்
நீ உண்ணமாட்டாய்
நீ உண்ணும் கனிகளையும்
நீ விளைத்திருக்கமாட்டாய்

வாழ்க்கை என்பது இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற திடீர்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்துவிட்டால்
ஆவல் செத்துவிடும்
தேடாதபோதும் தேடிவரும் முத்தத்தால்
சித்தம் பூத்துவிடும்

பிறப்பே
இந்த அதிசய விளையாட்டரங்கின்
நுழைவு வாயில்தான் - இறப்போ
புதிய புல்லரிப்புகளோடு பூமியில் பிறக்கும்
இளைய இதயங்களுக்கு இடம் விடத்தான்

எல்லாச் சிலிர்ப்பையும் இழந்த முதுமையை
எலும்பில் சுமந்து
இருப்பது ரணம் இறப்பதே பூரணம்

ஆடி முடித்த அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை அள்ளியள்ளி அளந்தாலும்
புத்தம்புதுத் திருப்பங்களின் படையெடுப்போ ஓய்வதில்லை
பிஞ்சு நெற்றியில் புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை

தோல்விகளாகும் நம் முயற்சிகள் எல்லாம்
சேமிக்கப்படுகின்றன
ஒருநாள் வீசும் வசந்தம் உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த கனிகள்

அடடா...
அலுத்துக்கொள்ளாமல் இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப் பூத்து நிற்கும்
இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது
இதை வாழக் கிடைத்த பாக்கியம்தான்
என்றும் புனிதமானது

அன்புடன் புகாரி

3 comments:

cheena (சீனா) said...

பாவத்தை அறிந்தே செய்வதும், புண்ணியத்தை அறியாமலே செய்வதும் இயற்கையின் / இறைவனின் விளையாட்டு.

நாம் அனுபவிப்பதெல்லாம் நம் செயல்களால் விளைந்ததல்ல- நாம் செய்யும் செயல்கள் நாம் அனுபவிப்பதற்கல்ல - அருமையான கருத்துகள்.

//ஆடி முடித்த
அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை
அள்ளியள்ளி அளந்தாலும்//

இவை பயன் தருவதில்லையா ? - அல்ல அல்ல - இவைகளையும் மீறி புத்தம் புதுப் பிரச்னைகள் வருகின்றன. தம் கையே தமக்குதவி.

///ஒருநாள் வீசும் வசந்தம்
உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த
நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த
கனிகள்...//

சத்தியமான வார்த்தைகள்

பாராட்டுகள் வாழ்த்துகள்

Unknown said...

அன்பினிய சீனா,

உங்கள் பின்னூட்டங்கள் கவிதையை முன்னிழுத்துச் செல்லுகின்றன

Anonymous said...

வாழ்க்கை என்பது
இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற
திடீர்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்.....

அனுபவ வரிகள்...
நன்றி

சபூர் ஆதம்