வளைந்து கொடுத்தால்தான்

ஏனோ தானோ என்று
தரப்படும் முத்தம்கூட
எச்சில் சுரந்தால் மாத்திரமே
முத்தமாய் இருக்கும்

வளைந்து கொடுத்தால்தான்
வானவில்லும்
அழகாய் இருக்கும்
வானத்தோடு
வசீகரமாய் இணையும்

இணக்கமில்லாத உதடுகள்
புன்னகை சிந்தினாலும்
புண்ணாகவே உதிரும்

விருப்பமில்லாத
வண்டுக் குழலில்
எந்தத் தேனும்
நுழைவதில்லை

விலகிக் கொடுக்காத
மண்ணில்
எந்த விதையும்
முளைக்கப் போவதில்லை

0

பாறையும்
விதையை நேசிக்கின்றது

அந்த நேசிப்புதான்
விதையின் வேர்களை
பாறையின் இடுக்குகளில்
வாழ்வாய் வளர்க்கிறது

கல்லும் மலரும்
ஒன்றாய் இருக்கலாம்
கல் மலரென்ற
சிற்பமாய் மாறும்
மனம்கொண்டிருந்தால்

மலரும் கல்லும்
ஒன்றாய் இருக்கலாம்
மலர் கல்லில் தன்னைக்
காணக் காத்திருந்தால்

0

விலக இயலாக்
கதவுகளுக்குள்
வாழ்க்கைக் காற்று
வீசப்போவதே
இல்லை

வெறுப்பின் நீட்சி
ஒருவருக்கு மட்டுமல்ல
இருவருக்குமே
நரகம்

வெறுப்பிலிருந்து
வெளியேறும் நினைப்பு
ஒரு நொடி உதித்தாலும்
போதும்

சொர்க்கம் எப்போதுமே
கதவு திறந்து
காத்துக்கிடப்பதையே
தன் முழுநேர
விருப்பப் பணியாய்ச்
செய்துகொண்டே
இருக்கிறது

3 comments:

ஒளியவன் பாஸ்கர் said...

உங்களோட மின்னஞ்சலுக்கு இனிமேல் அருமை அப்படின்னு தானியங்கி பின்னூட்டம் வச்சுடலாம்னு இருக்கேன்.

அருமையா இருக்கு அண்ணா.

கோகுலன் said...

அன்பு நண்பர் புகாரி..

மிக மிக மேலான நற்கருத்துக் கவிதை..

--------
ஏனோ தானோ என்று
தரப்படும் முத்தம்கூட
எச்சில் சுரந்தால் மாத்திரமே
முத்தமாய் இருக்கும்

வளைந்து கொடுத்தால்தான்
வானவில்லும்
அழகாய் இருக்கும்
வானத்தோடு
வசீகரமாய் இணையும்
-------

நல்ல வரிகள்...

-------
விலகிக் கொடுக்காத
மண்ணில்
எந்த விதையும்
முளைக்கப் போவதில்லை
---------

மிக ரசித்தேன் இவ்வரிகளை..

--------
பாறையும் விதையை
நேசிக்கின்றது
அந்த நேசிப்புதான்
விதையின் வேர்களை
பாறையின் இடுக்குகளில்
வாழ்வாய் வளர்க்கிறது

கல்லும் மலரும்
ஒன்றாய் இருக்கலாம்
கல் மலரென்ற சிற்பமாய்
மாறும் மனம்கொண்டிருந்தால்
--------

ஊட்டியில் தர்சமயம் ஒரு பாறை உள்ளது.. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மரம் என்று சொல்லப்படுகிறது..

---------
சொர்க்கம் எப்போதுமே
கதவு திறந்து
காத்துக்கிடப்பதையே
தன் முழுநேர
விருப்பப் பணியாய்ச்
செய்துகொண்டே இருக்கிறது
---------

உண்மை.. சிறப்பான வரிகள்..

சீனா said...

அன்பின் புகாரி

அருமை அருமை - கவிதை அருமை - சிந்தனை அருமை

நாணலைப் போல் வளைந்து கொடுத்தால் தான் வாழ்வு வளம் பெறும்
இயற்கையிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது
பாறையின் இடுக்கிலும் செடிகள்
காதலர்களுக்கு தடையில்லை
பாறையும் செடியும் விரும்புகின்றன

விரும்பினால் அனைத்துமே சொர்க்கம்
வெறுத்தால் வாழ்வே இல்லை

பல அரிய வரிகளில் சில வைர வரிகள்:

எச்சில் சுரந்தால்தான் முத்தம் கூட இனிக்கும்
வளைவதால் தான் வானவில்லும் அழகாகிறது
உதடுகள் இணங்கினால் தான் புன்னகை மலரும்
மண் விலகினால்தான் விதை முளைக்கும்


//சொர்க்கம் எப்போதுமே
கதவு திறந்து
காத்துக்கிடப்பதையே
தன் முழுநேர
விருப்பப் பணியாய்ச்

செய்துகொண்டே இருக்கிறது //

என்ன ஒரு சிந்தனை - எண்னுவதிலும் உயர்வே !

அருமை நண்ப புகாரி

கவிதைகளை ரசிக்கிறேன் - திறமையினைப் பாராட்டுகிறேன்
தமிழ் உனது அடிமையானதை - ஆவதை விரும்புகிறேன்
சொற்கள் உனது கவிதையில் நடனமாடுவதை கண்டு மகிழ்கிறேன்

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா