என் தங்கத்துக்குத்
தாலாட்டு
பொன்மாலை வேளையில்
தவழ்கின்ற வெண்ணிலா
கண்ணான கண்மணி
உன்போலத் தவழுமா
பனிதூவும் காலையில்
பூக்கின்ற பூக்களும்
கனிவான உன்னெழில்
முகம் போல பூக்குமா
ஆரீராரீ.. ஆரீராரோ
முற்றாத மாலையில்
முகம்வீசும் தென்றலும்
நான்பெற்ற கண்மணி
உன் போல வீசுமா
வற்றாத கங்கையில்
செழித்தோடும் வெள்ளமும்
ஒப்பில்லாக் கண்மணி
உன்போல ஓடுமா
ஆரீராரீ.. ஆரீராரோ
கிளிபேசும் பேச்சிலும்
குயில்பாடும் பாட்டிலும்
தளிரான கண்மணி
உன் பாஷை கேட்குமா
மயில்தோகை விரிப்பிலும்
மான்தேக வனப்பிலும்
ஒயிலான கண்மணி
உன் வண்ணம் விளங்குமா
ஆரீராரீ.. ஆரீராரோ
உலகங்கள் யாவுமே
என் சொந்தம் ஆயினும்
உயிரான உயிரென்றும்
நீதானே கண்மணி
உயிர் நீங்கும் வேளையும்
உறங்காத கண்களில்
ஒளிவீசும் தங்கமே
உனைத்தானே தேடுவேன்
ஆரீராரீ.. ஆரீராரோ
அன்பே அன்பே
என் சொந்தமே
கண்ணே கண்ணே
கண் தூங்குவாய்
ஆரீராரீ.. ஆரீராரோ
மானே தேனே
தேனோடையே
பூவே பொன்னே
பூ முத்தமே
ஆரீராரீ.. ஆரீராரோ
உயிரே உயிரே
உயிர்த் தேடலே
உயிரில் ஊறும்
கவி வெள்ளமே
ஆரீராரீ.. ஆரீராரோ
No comments:
Post a Comment