கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட

எது அழிந்து
எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும்
சுயநினைவைச் சூறையாட

விழுந்துகிடக்கிறது
கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள்
கடவுளின் மடிகள்

இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான்
இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
நச்சுப்பல் அச்சுகளோடு
குப்பைத் தொட்டிகளில்

நியாயம்தான்!

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு நல்லதோர் எச்சரிக்கை

நீதானே
நாளைய கிழம்
இன்றே
சுதாரித்துக் கொள்

உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று
நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சேமிப்பை
எவரும் தொட முடியாப்
பாதுகாப்புப் பெட்டகத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப் பசியையாவது
அது போக்குமல்லவா

*
செய்தி:
குப்பைத் தொட்டி ஒன்றில் முதியவர் ஒருவர் கொட்டப்பட்டு உயிரோடு கிடந்தார்
No comments: