காதலர்தினம் அது யாவரும்கேளிர்தினம்

கொலை ரத்தம்
கொப்பளிக்கும் யுத்தபூமி
அற்றைநாள் பேரரசு
ரோமாபுரி

கால்களுக்கும் தோள்களுக்கும்
பூட்டு - போர்வீர
நெஞ்சுரத்தின் மீதுவிழும்
வேட்டு - என்றே
தடைசெய்து நிறுத்தியது
திருமணத்தை

அங்கேயோர் துறவி
வாலண்டைன் என்பது அவர் பெயர்
அவரோ வாலிபரின் காயங்களில்
விழுகின்ற கண்ணீர்

புழுதிவெறி மாமன்னன்
கண்மறைத்து
பழுதில்லாக் காதலை
வாழவைத்தார்

ரகசியமாய்க் கல்யாணம்
முடித்துவைத்தார்

கண்டனவே அதையந்த
அரசவைக் கண்கள்
கொதித்து வெடித்தனவே
கோபமெனும்
எரிமலைப் புண்கள்

அறுத்தெறியடா
அந்தத் துறவியின் கழுத்தை

ஆணையும் வந்தது
மரணத் தேதியும் தந்தது

அடைபட்டச் சிறைச்சாலையில்
அரிய நட்போடு ஒரு காவலதிகாரி
அவருக்கோ
அழகே அவளென்றானதோர்
அன்புமகள்

ஆனால்
பிறப்பிலேயே அவள்
பார்வையற்றுத் தவிக்கும்
துன்பமகள்

பரிசுத்தப் பிரார்த்தனையால்
தேவனின் ஆசிகளைப்
பொழியவைத்தார் புனிதத் துறவி
அவளின்மீது

அடடா என்ன அதிசயம்
சிறு விழிகள் பிறந்தன நிலவுகளாக
அவை
தத்தித் தத்தித் தாவிக் குதித்தே
ஆடத் தொடங்கின குழந்தைகளாக

நன்றியோ
கருணையோ
அன்பின் பெருக்கோ
கொட்டும் நயாகராவைக்
கொண்டன அவள் கண்கள்

மரணத்தின் இறுதி நொடியில்
நின்று
கண்பெற்றச் சின்னவளுக்கு
எழுதுகிறார் துறவி
ஒரு கடிதம்

அன்புடன் வாலண்டைன்
என்றே
அக்கடிதம் நிறைகிறது

பலநூறு கதைகளில்
நம்பத் தகுந்ததென
இதனையே போற்றுகிறது
மேற்கு

வாலண்டைன் தினம்
என்றதனைக் கொண்டாடுகிறது
உலகு

பரிவின் நாள்
அது பாசத்தின் நாள்
அன்பின் நாள்
அது அரவணைப்பின் நாள்
என்றபோதிலும்
அந்த நாளைக்
காதலர்களே கொண்டாடுவதால்
அது காதலர்தினம் என்றே
ஆனது

ஆயினும்
பல நாடுகளும்
அன்பர்கள் தினமென்றும்
நண்பர்கள் தினமென்றும்
பச்சைப் பயிர்களின் தினமென்றும்
பறவைகளின் தினமென்றும்
இன்னும் பலவாறாயும்
மகிழ்ந்தே கொண்டாடினாலும்

மதவெறிக் குருடர்களால்
காதலர்களைக் கண்டவிடத்து
அடித்துநொறுக்கும் தினமாகவும்
கொன்றாடப்படுகிறது

இந்நாளில் நானோ
சங்கத் தமிழனின்
செங்கதிர்ச் சொற்களை
எண்ணிப் பார்க்கிறேன்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

அடடா
அறத்தால் வார்த்த
உரத்த குரல்

வானத்தையே உடைத்தெறியும்
வையப் பார்வை

இதனினும் உயரமோ
இவ்வுலகிலோர் அன்பு
ஒரு பண்பு ஒரு பாசம்
ஒரு காதல் ஒரு நட்பு

உலகெலாம் எனது ஊர்
உலக மக்களெலாம் எனது உறவுகள்

சொல்லச் சொல்லப் புல்லரிக்கும்
இம்மத்திரச் சொற்களால் அல்லவா
இந்நாளினை அழைத்திடல்
வெண்டும்?

இன்று தொட்டு
யாதும்ஊரே யாரும்கேளிர் தினம்
என்றே
இந்நாளினை அழைப்போம்
நம்
உள்ளம் நெகிழ்ந்து
உயிர்வரை மகிழ்ந்து

No comments: