மகளிர்தின வாழ்த்துக்கள்

பெண்களின் நலன், முன்னேற்றம், உரிமை என்று விரும்பும் பெண்கள் நேசிக்கத்தக்கவர்கள். ஆனால் பெண்களின் உரிமைக்காக யாசகம் கேட்கும், மடிப்பிச்சை கேட்கும் பெண்களால் பெண்ணுரிமை கிடைக்குமா? பெண் முன்னேற்றம் வளருமா?

பெண்ணின் முன்னேற்றமும் உரிமையும் நலனும் பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு பெண்ணின் கைகளில்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். தன் பிள்ளைகளில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாகப் பார்த்தால் சமமாக வளர்த்தால். நாளை என்பது சம உரிமை கொண்டதாகத்தானே மலரும்?

ஒரு பெண் தான் பெற்ற பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுப்பதும், தன் சகோதரனைவிட அவள் எதிலும் இளைத்தவல் இல்லை என்று உறுதிபட வளர்ப்பதும், திருமணச் சந்தைகளில் பெண்ணை கடைப் பொருளாய் ஆக்காமல், இணையானவளாய் நிறுத்தி மணமுடித்து வைப்பதும் பெண்களின் கைகளில் இல்லையா?

எந்த ஒரு முன்னேற்றமும் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீடு சமுதாயத்தை மாற்றும் சமுதாயம் உலகை மாற்றம்.

ஆண்களுக்கு அதிகாரம் வேண்டும், அதற்காக அவர்கள் தங்களின் உடல்வலிமையைக் காட்டுவார்கள், ஆணாதிக்க சமூகத்தின் பழைய சிலந்தி வலைகளைக் கொண்டு மூட வருவார்கள், மதம் என்ற பெயரில் அடக்கியாள வருவார்கள், இன்னும் என்னென்ன வழிகள் உண்டோ அனைத்திலும் முயல்வார்கள்.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்? பெண்களால் முடியாதது என்று ஒன்று உண்டா? வருங்கால சமுதாய மரங்களின் விதைகள் உங்கள் கையில். ஆம் பிள்ளைகள் உங்கள் கைகளில்...

பெண்ணுரிமைக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களின் நலனுக்காக சிறு துரும்பையேனும் நகர்த்தும் பெண்களுக்கு என் மகளிர்தின வாழ்த்துக்கள்.



பார்வை நொறுக்கும் விழியோடு
பழி வென்று முடிக்கும்
நடையோடு
காட்டுத் தீயாய் எழுகின்றாள்
பழங் கட்டுகள் எரித்து
நிமிர்கின்றாள்

விகிதம் கேட்டா அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா
தருகின்றாள்
உரிமை மீட்டே எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே
அதுவென்றாள்

மலரின் மென்மை விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை
வேர்கொண்டாள்
நிலவின் எழிலாய் வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள்
வெடிக்கின்றாள்

கருணை அன்பு மனங் கொண்டாள்
உயர் காதல் நட்பு
உயிரென்றாள்
தாய்மை தூய்மை தானானாள்
வளர் அறிவின் தெறிப்பில்
ஓடுடைத்தாள்

கவிஞர் புகாரி


No comments: